தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்
முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன்
தென்றல் பதிப்பகம் – முதல் பதிப்பு 2011
பக்கங்கள் 204 – விலை ரூ 150/
* தந்தை பெரியாரின் துணைவர் நாகம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் தனது ‘ சுயமரியாதை இயக்க ‘ ஆராய்ச்சின் போது எழுத தீர்மானித்து அதன்படி அவரின் வரலாற்றைச் சொல்லும் நல்லதொரு நூலை நமக்கு தந்துவிட்டு சென்று விட்டார்!
* முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் 36 ஆண்டுகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடு அரசின் சிறந்த நூலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர். திராவிட இயக்க ஆய்வில் ஆர்வம் காட்டியவர்.
*. நானும் அவரும் ஆண்டு 1976 – 1977களில் சென்னை பெரியார் திடலிலுள்ள ஆராய்ச்சி நூலகத்தில் தினமும் சந்தித்து உரையாடிக் கொண்டோம் . அவரிடமிருந்து திராவிட இயக்கம் பற்றி பல்வேறு தகவல்களை அறியும் வாய்ப்பைப் பெற்றேன். 1977இல் பணியின் நிமித்தமாக நான் புது டில்லிக்கு சென்று விட்டேன். அப்படியே காலங்கள் பல உருண்டோடின……
* பின்னர் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டோம்! இதனிடையே அதிர்ச்சியாக – இன்னும் பல அரிய ஆய்வு நூல்களை வெளிக் கொணர்வதற்கு முன்பே கடந்த 2023 மார்ச் 17ஆம் நாள் அவர் இயற்கை எய்தினார்!
* எனது தோழர் மங்கள முருகேசனின் நினைவாக அவர் எழுதிய இந்த நூலுக்கு எனது அறிமுகவுரையை நினைவு கூறும் வகையில் சமர்ப்பிக்கிறேன்!
* நூலில் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் தனது அணிந்துரையில், ” நம் அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு அன்னை ஈவெரா. நாகம்மையார் அவர்கள் வாழ்க்கை துணைவராக இருந்தது போல, தேசியத்திலிருந்து மாறுபட்டு சுயமரியாதை இயக்கம் வெளியேறி புதியதோர் உலகு காணப் புறப்பட்ட காலத்திலும் மிகவும் உறுதுணையாக நின்று வரலாற்று பங்களிப்பாளராக ஆனவர்! ” …என்று மிகவும் பாராட்டி எழுதியுள்ளார்!
* நூலாசிரியர் மங்கள முருகேசன் தனது நன்றியுரையில், ” 1933ஆம் ஆண்டுக்கு முன் அன்னை நாகம்மையார் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர் என்றால், வந்தவருக்கு எல்லாம் வடித்துக் கொட்டியவர் என்றால், அது சுயமரியாதை இயக்கத்திற்கு மக்கள் – தொண்டர்கள் வழங்கிய நிதி – காசு – பொற்குவை அல்ல! அவ்வளவும் பெரியாரின் சொந்தப் பணம்!
* இப்படி சொந்தப் பணத்தை செலவழித்து சமூகத்திற்கு உழைத்த தலைவர் என்று வேறு யாரையாவது காட்ட முடியுமா ? அது போல துணை நின்ற பெண்மணி எவரையாவது காட்ட முடியுமா ? அந்த சுயமரியாதைத் தாய், அன்னை நாகம்மையார் வாழ்க்கை வரலாறு இது! ” …என்று குறிப்பிட்டுள்ளார்!
ஈ.வெ.ரா. நாகம்மையார் (1885 – 1933)
பள்ளிப் படிப்பை படிக்காதவர். பன்னிரண்டு- பதிமூன்று வயதில் பெரியாரை திருமணம் செய்தார். கனத்த கதர் சேலை உடுத்தி அதை விற்பதிலும் பெரியாருக்கு துணையானார். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். வைக்கம் போராட்டத்தில் பெண்களைத் திரட்டி மறியல் செய்தார்.
* ஈவெரா. நாகம்மையார் – அனைத்து இந்திய காங்கிரசில் பிரதிநிதியான முதல் தமிழ்ப் பெண்மணி! முதல் பெண் பதிப்பாளர் (குடிஅரச ஏடு). முதல் பத்திரிகை உரிமையாளர் (ரிவோல்ட் ஆங்கில ஏடு) தேசிய இயக்க வரலாற்றிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் கட்டாயம் இடம் பெற வேண்டியவர் அன்னை நாகம்மையார்!
* பெரியாரே தனது துணைவியார் நாகம்மையாரைப் பாராட்டியதை உலகறியும் – ” நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாக இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையிலும் முற்போக்காகவும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம்! ” …
* காந்தியாரே அன்னை நாகம்மையாரின் போராட்ட குணத்தை வியந்து பாராட்டிப் பேசியதற்கு ஆதாரம் உண்டு!
* காந்தியாரின் விருப்பப்படி 1921ஆம் ஆண்டு நவம்பரில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் பெரியாரோடு அன்னை நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தை ஆட்சியாளர்கள் திகைக்கும் படி நடத்தி காட்டினார்கள்!
* ஒரு கட்டத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மதன் மோகன் மாளவியாவும் சங்கரன் நாயரும் காந்தியாரை அணுகியபோது, ” மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை! அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் (நாகம்மையார் , கண்ணம்மாள்) இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும்! ” …. என்று கையை விரித்தாராம்!
* இதை ஆங்கில நாளேடு இந்து 19.01.1922ஆம் தேதி இதழில் வெளியிட்டுள்ளது!
அன்னை நாகம்மையார் தேசிய அரசியலிலும் எவ்வாறு சிறப்பாக பணியாற்றினார் என்பது தெரிய வருகிறது!
* அன்னை நாகம்மையாரின் தலைமைப் பண்பும் போராட்டக் குணமும் வைக்கம் போராட்டத்தில் வெகுவாகப் பேசப்பட்டது. தந்தை பெரியார் வைக்கத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற பிறகு, நாகம்மையார் கண்ணம்மாளையும் துணைக்கு வைத்துக் கொண்டு, பெண்களைத் திரட்டிக் கொண்டு மறியலில் ஈடுபடுவது மற்றும் மீறுவது என்று இருந்தார்!
* மறியலில் இருந்த நாகம்மையாரைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சர்மா, ” நீங்கள் எந்த ஜாதி ? ” என்று கேட்டார்! அதற்கு, ” எங்களை யார் எந்த ஜாதி என்று பார்த்து, தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து, அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா ? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை! ” …என்று அன்னை நாகம்மையார் பதிலடி கொடுத்தாராம்!
* தன்னை எந்த சூழலிலும் தனது ஜாதியால் அடையாளம் காட்டி, தனது செல்வ நிலையால் சலுகை பெற எண்ணாத அந்த படிக்காத மேதை அல்லவா உண்மையான புரட்சித் தலைவி?
* ஈரோடு சுயமரியாதை இயக்க இரண்டாவது மாகாண மாநாடு 1930 மே 10 முதல் 13 வரை நடைபெற்றது.அந்த மாநாட்டின் வரவேற்பு குழு உறுப்பினராக நாகம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டில் தான் பெரியதொரு சமுதாயப் புரட்சி நடந்தது!
* ஆயிரக்கணக்கான மக்கள் – ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என எல்லா வகுப்பாரும் பங்கு பெற்ற மாநாடு..அது நாள் வரை இது போன்ற மாநாடுகள், விழாக்கள், திருமணங்களில் சமையல் செய்ய பார்ப்பனர்களோ அல்லது உயர் ஜாதி இந்துக்களையோ அமர்த்துவது வழக்கம்!
* ஈரோடு மாநாட்டில் – விருதுநகரிலிருந்து நாடார் சமையல் காரர்களை வரவழைத்து, சமைத்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தோழர்களைக் கொண்டு உணவு பரிமாறச் செய்த சமத்துவ சமூகப் புரட்சியை அன்னை நாகம்மையார் வரவேற்பு குழுவில் இருந்த போது நடந்த மறக்க முடியாத வரலாற்றுப் பெருமையாக கொள்ளலாம்!
* தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்த முதல் பெண்மணி நாகம்மையார். தந்தை பெரியாருடன் இணைந்து சொ. முருகப்பா – மரகதவல்லி திருமணத்தை 28.06.1929ஆம் நாள் திருப்பரங்குன்றத்தில் நடத்தி வைத்தார்!
* நாகம்மையார் நடத்தி வைத்த முதல் விதவை மறுமணம் – கோபாலகிருஷ்ணன் – லட்சுமி இணையருக்கு ஈரோட்டில் பெரியார் மாளிகையில் 25.07.1929 அன்று நடந்தது!
* அன்னை நாகம்மையார் பெரியாரோடு முதல் முறையாக வெளிநாட்டுப் பயணமாக, மலாயா பயணத்தை (15.12.1929 – 30.01.1930) மேற்கொண்டார்!
* தந்தை பெரியார் அய்ரோப்பிய பயணத்தை (13.12.1931- 07.11.1932) மேற்கொண்ட போது நாகம்மையாரை உடன் அழைத்துச் செல்லவில்லை.. அந்த 11 மாத இடைவெளியில் பெரிதளவு மனதால் பாதிக்கப்பட்டதால் அவர் உடல் நலனும் பாதிக்கப்பட்டது!
* 48 ஆண்டுகள் வாழ்ந்து, தந்தை பெரியாருக்கு உற்ற துணையாக, சிறப்பான ஒரு வாழ்க்கையை நடத்திய பின்பு 11.05.1933 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு எவ்வித சடங்குகளும் செய்யப்படாமல் எரியூட்டப்பட்டது!
* அன்னை நாகம்மையார் மறைவுக்கு தந்தை பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரை ஒரு அமரத்துவமான இலக்கியப் படைப்பு! அதன் துவக்கம் இவ்வாறு :
” எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.05.1933 தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார்! இதற்காக நான் துக்கப்படுவதா ? மகிழ்ச்சியடைவதா ? நாகம்மாள் நலிந்து மறைந்தது என்பது லாபமா ? நஷ்டமா ? என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது! ” …….
* சுயமரியாதை இயக்கம் குடும்ப உறவுடன் வளர்ந்தது எனில், அங்கே தாயாக விளங்கியவர் – அன்னை நாகம்மையார்!
தந்தையாக விளங்கியவர் – தந்தை பெரியார் என்று நிறைவு செய்கின்றார் நூலாசிரியர். அனைவராலும் அவசியம் படித்தறிய வேண்டிய நூல்!
* தோழர் மங்கள முருகேசன் நினைவுக்கு என்னுரை சமர்ப்பணம்!
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்