இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!

என்னது, இருபது வயதில் கைதா?
அதுவும் தனிமைச் சிறையா?
சற்று விரிவாகக் கூறுங்கள்?

நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில் பேசவும், செய்தேன். “ஒருவர் 8 பன்றிகள் வைத்துள்ளார். நல்ல வருமானம் வருகிறது. ஒரு கட்டத்தில் நோய் வாய்ப்பட்டு, 8 பன்றிகளும் இறந்து விடுகின்றன. இவரின் வருவான வரம்பு எவ்வளவு?” என்பதாகச் சில உதாரணங்களுடன் பேசினேன். போராட்டத்தின் போது அனைவரும் கைது செய்யப்பட்டோம். மற்றவர்களை ஒன்றாகவும், என்னைத் தனி இடத்திலும் வைத்துவிட்டனர். ஏன் தனி இடம் என்கிற கேள்விக்கு இப்போது வரை பதிலே தெரியவில்லை.

உங்கள் குடும்பம் இயக்கப் பின்னணி கொண்டதா?

ஆம்! நான்கு தலைமுறையாக இருக்கிறோம்! எங்கள் உறவுகளில் மட்டும் 100 பேர் இயக்கத்தில் இருப்போம்! ஜாதி, மதங்கள் கலந்துவிட்டன! எந்த அடையாளமும் எங்களுக்கு இல்லை! மிசா காலத்தில் எங்கள் வீட்டில் 4 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. அன்னை மணியம்மையார் அவர்களும், ஆசிரியர் அவர்களும் வருவதாக ஏற்பாடு! ஆசிரியர் அவர்கள் மிசா கைதியாக, சிறைக்குச் சென்று விட்டதால், மணியம்மையார் அவர்கள் மட்டும் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள்! இந்தத் திருமணம் பட்டீஸ்வரத்தில் நடந்தது.

உங்கள் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்!

எனது அப்பா பெயர் வை.தட்சிணாமூர்த்தி. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். அம்மா பெயர் தனபாக்கியம். எனக்கு 2 தம்பி, 1 தங்கை. எனது பெயர் மலர்க்கொடி (63), தம்பிகள் பெயர் உத்தமன் காமராஜ், அசோக்ராஜ். எங்கள் மூவருக்கும் பெரியார் தான் பெயர் வைத்தார். கடைசி தங்கை பெயர் பொற்கொடி. எங்களின் சொந்த ஊர் கோவிந்தகுடி. பகுத்தறிவாளர் கழகத்தில் ஆசிரியர் அணி என்பது தனியாக இருக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் கி.வீரமணி அய்யா திடலில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்கள். அந்த அடிப்படையில் ஓரிரு வாரத்திலேயே 40 – க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, எங்கள் வீட்டிலேயே கூட்டம் நடைபெற்றது. விருந்து ஏற்பாடும் செய்திருந்தோம். வலங்கைமான் ஒன்றிய ஆசியரணி முதல் தலைவராக மாசிலாமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். கோவிந்தகுடியில் தில்லை சிகாமணி, தங்கமணி, மாசிலாமணி ஆகிய 3 மணிகள் இருப்பதாக ஆசிரியர் கூறுவார்கள்.

உங்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் தான் நடைபெற்றதா?

எனக்கும், என் தங்கைக்கும் சனிக்கிழமை காலை இராகு காலத்தில் திருமணம் நடைபெற்றது. எனது மாமியார் கணவரை இழந்தவர் என்பதால் “விதவை” எனக் கூறி ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் மேடையில் அவர்கள் தான் மாலை எடுத்துக் கொடுக்க வேண்டும் என நான் உறுதியாகக் கூறி, அதன்படியே நடைபெற்றது. அந்த நேரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், நானே என் திருமண அழைப்பிதழைப் பலருக்கும் கொடுத்தேன். தஞ்சை கா.மா.குப்புச்சாமி அவர்களுக்குப் பத்திரிகைக் கொடுக்கப் போனேன். “நீ யாரும்மா?”, என்று கேட்டார். “நான்தான் கல்யாணப் பெண்”, என்றேன். அதிர்ச்சியாகிவிட்டார். என்னம்மா நீயே வந்திருக்கிறாய் எனக் கூறி, பின்னர் மகிழ்ச்சி அடைந்தார். பெண்கள் இப்படித்தான் வெளி உலகத்திற்கு வர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
1988இல் ஆசிரியர் அவர்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நானும், என் தங்கையும் கருப்புப் புடவை, இணையர்கள் கருப்புச் சட்டை என முழு சுயமரியாதையுடன் நடைபெற்றது! ஆசிரியர் அவர்கள் எங்கள் திருமணத்திற்கு 100 மதிப்பெண்கள் கொடுத்தார்கள். மேடையில் கா.மா.குப்புசாமி, இராஜகிரி கோ.தங்கராசு, தில்லை சிகாமணி, பட்டீஸ்வரம் கா.அய்யாசாமி, துரை.சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

உங்கள் கல்வித் தகுதி என்ன?
வேலையில் எதுவும் இருந்தீர்களா?

நான் இளங்கலை (BA) படித்து, செவிலியர் படிப்பும் முடித்தேன். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1989 இல் செவிலியர் பணியில் சேர்ந்தேன். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பணி. பின்னர் பதவி உயர்வு பெற்று, செவிலியக் கண்காணிப்பாளராக உரத்தநாடு அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து, பின்னர் ஓய்வு பெற்றேன். அரசின் சிறந்த செவிலியர் விருதைப் பெற்றுள்ளேன். 30 ஆண்டுகள் செவிலியராகப் பணி செய்திருக்கிறேன்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலர்க்கொடி எனும் பெயரில் இருவர் இருந்தோம். எனவே எனது பெயரையே “தி.க.மலர்க்கொடி” என்றுதான் கூறுவார்கள். மருத்துவமனையில் பூஜைகள் எல்லாம் நடக்கும். நான் கலந்து கொள்ளமாட்டேன். என்னை யாரும் வற்புறுத்தவும் மாட்டார்கள். அனைவரிடமும் அன்பாகப் பழகுவதும், உதவிகள் செய்வதும் என நல்ல தோழமையில் இருந்தேன். மதம் தொடர்பான எந்த விழாக்களுக்கும் நான் விடுமுறை எடுப்பதில்லை. மற்ற அனைவருக்கும் இது பெரும் உதவியாக இருந்தது!

அதேநேரம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு மட்டும் 3 நாட்கள் விடுமுறை எடுப்பேன். மாட்டுப் பொங்கல் அன்று, கோவிந்தகுடி கிராமத்தில் 100 பேருக்குக் கறி விருந்து நடைபெறும். இன்று வரை இது தொடர்கிறது. ஒருமுறை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் என்னிடம், “உங்கள் தலைவர் வீரமணி அவர்கள் ரங்கராஜ் பாண்டேவை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டார்” எனத் தொலைக்காட்சிப் பேட்டி குறித்துக் கூறினார். அந்தளவு நான் இந்தக் கொள்கையில் இருப்பதை அனைவரும் அறிவர்!

உங்கள் அம்மாவும் இந்தக் கொள்கையில் இருந்தவர்களா?

ஆமாம்! எங்கள் அம்மாவும் பெரியார் கொள்கையில் இருந்தவரே! எங்கள் உறவுகளைச் சுற்றி இருக்கும் பெரும்பாலோருக்கும் இதே கொள்கை தான்! இதே இயக்கம் தான்! ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் கொடுத்த போது, அதுவும் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படப் போகிறது என்கிற நிலையில், கழுத்தில் கிடத்த தாலியைக் கழட்டி கொடுத்தார்கள். யாரும் எதிர்பாராத வேளையில் அது நடந்தது. அதன் பிறகு அம்மா தாலி அணியவே இல்லை!
சிறு வயதில் மாநாடுகளுக்குச் சென்றால் நாங்கள் மட்டுமின்றி, தெருவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு, வேன் பிடித்துச் செல்வோம். அனைவருக்கும் வீட்டிலேயே அம்மா உணவு செய்வார்கள். அப்பாவே முழுச் செலவுகளையும் ஏற்பார். சில மாநாடுகளுக்கு 2 வேன் பிடித்துச் செல்வோம்!
அப்பா மறைந்தது 2020, அம்மா மறைந்தது 2023. அம்மா உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினோம். உடற்கொடை என்பது அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. “மண்ணுக்குக் கொடுக்கும் உடலை மனித அறிவுக்குக் கொடுத்தால் என்ன?”, என்பது எங்கள் குடும்பத்தின் முழக்கமாகவே இருக்கிறது. இதுவரை 4 உறவினர்கள் உடலைக் கொடையாக வழங்கியுள்ளோம்!

பெரியாரைச் சந்தித்து இருக்கிறீர்களா?

அப்போது எனக்கு 12 வயது. பெரியார் தாத்தாவை தொட்டுப் பார்க்க வேண்டும் என அப்பாவிடம் கேட்டேன். பெரியாரிடமே அழைத்துச் சென்று கைகொடுக்கச் சொன்னார். அதேபோல மணியம்மையார் அவர்களும் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார்கள். அம்மா உணவு சமைத்து எடுத்துப் போவார்கள். பெரியார் ஒருமுறை என் அப்பாவிடம், “பெண் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், அவர்கள் விரும்பாதவரை திருமணம் செய்து வைக்கக் கூடாது, அவசியம் வேலைக்கு அனுப்ப வேண்டும்” எனக் கூறினார்.

உங்கள் வாழ்விணையர் குறித்துக் கூறுங்கள்?

என் வாழ்விணையர் பெயர் கலைச்செல்வன். அவர்களும் பெரியார் கொள்கையில் இருப்பவர். ஒருமித்த கருத்துக் கொண்டவர்களுக்கு இருக்கும் சிறப்பைக் கூறுகிறேன். ஒருமுறை நான் மிகவும் சோர்வாகவும், மனம் சரியில்லாமலும் இருந்தேன். என் இணையர் காரணம் கேட்டுக் கொண்டே இருந்தார். பிறகு திடீரென, “வா ஒரு இடத்திற்குப் போகலாம்”, என அழைத்துக் கொண்டு போய்விட்டார். எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. பிறகு பார்த்தால் பக்கத்து ஊரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு ஆசிரியர் மற்றும் தோழர்களைச் சந்தித்த பிறகு கவலைகள் மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினேன். என்ன செய்தால், எப்படி மாற்றங்கள் ஏற்படும் எனத் தொடர்ந்து முயற்சிப்பது தானே பகுத்தறிவு வாழ்க்கை! எங்களுக்கு 2 குழந்தைகள். பையன் பெயர் நேர்மை. பெண் பெயர் வாய்மை!

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

நான் தினமும் ‘விடுதலை’ படிப்பேன். சில நேரம் இ.பேப்பரும் படிப்பேன். இயக்கம் தொடர்பான யூடியூப் காணொலிகள் பார்ப்பேன். இன்றைக்கு இளைஞர்கள் ஆன்மீகவாதியாக இருந்தாலும், ஜாதி, மதம் கடந்து, மூடநம்பிக்கைகள் குறைந்து முற்போக்காய் சிந்திக்கிறார்கள். ஒரு காலத்தில் கருப்பு நிறமே அபசகுனமாய் பார்க்கப்பட்டது. இன்றைக்கு அந்நிறமே “பேஷன்” என்ற நிலையில் ஆண்கள், பெண்கள் அனைவருமே கருப்புடை அணியும் சூழல் இயல்பாகிவிட்டது.

ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் உழைப்பு அபாரமானது. பன்மடங்கு இயக்கம் வளர்ச்சி பெற்றுள்ளது. உலகளவில் பெரியார் பேசப்படுகிறார். தினம், தினம் பெரியார் கொள்கைப் பேசுவதே ஆசிரியரின் பெரும் பணியாக இருக்கிறது! வரலாற்றில் என்றும் ஆசிரியர் நிலைத்து நிற்பார்! “நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்”, என்கிற ஆசிரியரின் வாசகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை! என் பிள்ளைகளின் அறையில் இதை ஒட்டி வைத்திருக்கிறேன். அந்தளவிற்குத் தன்னம்பிக்கை நிறைந்த வரிகள்”, எனத் தம்

அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் மலர்க்கொடி அவர்கள்!

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *