சென்னை, ஜூன் 14- தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 46.73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களால், தேசிய அளவில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சிறந்துவிளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, 13.13 லட்சம் பேருக்கு ரூ.4,818.88 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த ரூ.2,755.99 கோடி மகளிர் சுயஉதவிக் குழு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம், 1.18 லட்சம் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 15.88 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர்.
உரிய தேதிக்குள் பயிர்க் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி, 2021 மே 7 முதல்,2023 டிசம்பர் 31 வரை 3 ஆண்டுகளில் 46.73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடனும், 6.52 லட்சம் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.3,234 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.2,567 கோடிக்கு வேளாண் விளைபொருட்கள் விற்கப்பட்டுள் ளன. வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ரூ.245.61 கோடிக்கு தானிய ஈட்டுக் கடன்கள், ரூ.1,158 கோடிக்கு நகைக் கடன்கள் வழங்கியுள்ளன. மேலும், ரூ.6,892 கோடிக்கு வணிகம் செய்துள்ளன.
மலைவாழ் மக்கள், பழங்குடி யினர் மேம்பாட்டுக்காக 2023-2024ஆம் ஆண்டில் 14 புதிய பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில், கடந்தஆண்டு 2.35 லட்சம் விவசாயிகளுக்கு 11,148 டன் யூரியா, 12,387 டன் டிஏபி, 6,194 டன் பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 23.18 லட்சம் குடும்பங்களுக்கும், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 6.37 லட்சம் குடும்பங்களுக்கும் தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்கள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13.35 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
இதுபோன்ற சிறப்பான திட்டங்களால் இந்தியாவில் மிக சிறந்தகூட்டுறவு துறை எனும் பெருமையும், பாராட்டும் தமிழ்நாடுகூட்டுறவு துறைக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.