தமிழ்நாட்டில் விவசாயிகள் பலனடைய மண் வளம் காக்கும் திட்டம் தொடக்கம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 13– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். தமிழநாடு அரசு சார்பில் வெளியி டப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.6.2024) வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.

இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர்கள்”. இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அதன்படி, விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *