ஜெனீவா, ஜூன் 13- உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இரண்டு இடங்கள் சரிந்து இந்தியா 129-ஆவது இடம்பிடித்துள்ளது.
இதுதொடா்பாக உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் அய்ஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதன் மூலம், அந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 129-ஆவது இடம்பிடித்துள்ளது. பாகிஸ்தான் மூன்று இடங்கள் சரிந்து 145-ஆவது இடத்திலும், கடைசி இடமான 146-ஆவது இடத்தில் சூடானும் உள்ளன. இதன் மூலம், இந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
தற்போதைய வேகத்தில், பாலின சமத்துவத்தை முழுமையாக எட்ட 134 ஆண்டுகள், அதாவது 5 தலைமுறைகளாகும் என்று உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநா் சாதியா சாஹிதி கூறுகையில், ‘பாலின சமத்துவத்தை எட்டுவதற்கு, குறிப்பாக பொருளாதார, அரசியல் தளங்களில் சமத்துவத்தை எட்டுவதற்கு புத்துயிர் கொண்ட உலகளாவிய அா்ப்பணிப்பு அவசரத் தேவையாக உள்ளதை இந்தக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது’ என்றார்.