சனாதனம் மீண்டும் ஆடு மேய்க்கப் போ என்கிறது? திராவிடம், மீண்டும் படிக்கப் போ என்கிறது!
திராவிடமா? சனாதனமா? உங்களுக்கு எது வேண்டும்? முடிவு செய்யுங்கள் மக்களே!
கிருஷ்ணகிரி, ஆக.29 சனாதனம் மீண்டும் ஆடு மேய்க்கப் போ என்கிறது. திராவிடம், மீண்டும் படிக்கப் போ என்கிறது. திராவிடமா? சனாதனமா? உங்களுக்கு எது வேண்டும்? முடிவு செய்யுங்கள் மக்களே! என கிருஷ்ணகிரி முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் மக்களுக்கு அழைப்பு விடுத்து, எழுச்சியுரையாற்றினார்.
கிருஷ்ணகிரியில் முப்பெரும் விழா!
நேற்று (28.8.2023) கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பெரியார் மய்யம் திறப்பு – தந்தை பெரியார் சிலை திறப்பு – அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய நிகழ்ச்சியை நடத்திய கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே,
நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள், மிக அமைதியாக அமர்ந்துகொண்டு, கண்ட்ரோல் ரூமில் இருப்பவர் செய்வதுபோன்று, இந்த இயக்கத்தினுடைய பணிகள் அனைத்தையும் செய்பவர். நான் சொல்லவேண்டிய அவசியமில்லை; நான் நினைப்பேன்; அவர் செய்வார். இதுதான் இந்த இயக்கத்தினுடைய வெற்றிக்கு மிக முக்கிய மாக இருக்கக்கூடிய ஓர் அடிப்படையாகும்.
இந்நிகழ்ச்சி இவ்வளவு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் என்ன சொன்னார்கள் என்றால், இந் நிகழ்வை காலையில் மாற்றும்படி சொன்னார்கள்; உடனடியா கத் தோழர்களுக்குச் சொன்னோம்; அவர்களும் மறுப்பேதும் தெரிவிக்காமல், சரி, அப்படியே செய்துவிடலாம் என்றார்கள்.
நம்முடைய தோழர்களிடம் மறுப்பென்பதில்லை
எது சொன்னாலும், மறுப்பே தெரிவிக்காமல் சரி என்று சொல்பவர்கள் நம்முடைய தோழர்கள். இறந்துபோன கென்னடியை சந்திக்கவேண்டும் என்று சொன்னால்கூட, அவர் இறந்துவிட்டார் என்று சொல்லமாட்டார்கள்; ‘‘சரி, சந்திக்கலாம் அய்யா” என்றுதான் சொல்வார்களே, தவிர, மறுப்பு சொல்லமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எல்லா பகுதிகளிலும் மழை பெய்துகொண்டிருக்கிறது. நேற்று காலையில் திருத் தணி நிகழ்வை முடித்துக் கொண்டு, இராணிப்பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபொழுது, கடுமையான மழை.
காலையில் திருத்தணியில் சிற்றுண்டி சாப்பிட்டோம்; காலையில் சாப்பிட்ட ஊரில், மதியம் சாப்பிடுவதில்லை; மதியம் சாப்பிட்ட ஊரில், இரவு சாப்பிடுவதில்லை. தங்குவது வேறொரு ஊரில்.
இதனால்தான் உடல்நிலை சுகாதாரமான நிலையில் இருக்கிறது. நல்ல வாய்ப்பாக நோய் நொடி இல்லாமல், உழைப்பதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; அதன் கூட்டணிக்கே முக்கியமானவர் கே.என்.நேரு
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நாம் இந்நிகழ்விற்கு அழைத்தவுடன், மறுப்பேதும் சொல்லாமல் வருகை தந்துள்ள நகராட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களுடைய ஒத்துழைப்பைப்பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
திருச்சி, அய்யா அவர்கள் தேர்ந்தெடுத்த தலைநகரம். அந்தத் திருச்சியில் அவர் எங்களுக்குக் கிடைத்த அரிய செல்வம்; எங்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.விற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்தது மட்டுமல்ல – கூட்டணிக்கே மிக முக்கியமானவர் அவர்.
அவர் பலாப்பழம் போன்றவர்; மேலே பார்த்தால், முள்கள் உள்ளது போன்று இருக்கும் – சில பேருக்கு. ஆனால், உள்ளே உள்ள சுளையை சுவைத்துப் பார்த்தால், அதைவிட சுவையான சுளை வேறு இருக்க முடியாது. அப்படிப்பட்ட பண்பு கொண்டவர் இந்த நேரு – அந்த நேருவுடன் பழக வாய்ப்பில்லை. இந்த நேரு எங்களுக்கு மிகவும் முக்கியம்.
அந்தக் காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. இந்தத் திரா விட இயக்கக் காந்தியைப் பார்க்கின்றோம்.
ஆகவே, காந்தி, நேரு, ஸ்டாலின் என்று உலகத் தலைவர் களிலிருந்து தேசியத் தலைவர்கள் எல்லோரும் திராவிட இயக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுடைய அன்புத் தத்துவங்களையெல்லாம் நம்முடைய இயக்கம் செயலாக்கம் செய்திருக்கிறது என்ற அளவில், அவைகட்கு காரணமாக இருக்கக்கூடிய எங்கள் அமைச்சர் பெருமக்களே!
அதேபோல, மாவட்டத் துணைத் தலைவர் நன்றியுரை கூற இருக்கின்ற ஆறுமுகம் அவர்களே,
பெரியார் பெருந்தொண்டர் 103 வயது பெங்களூரு வேலு அவர்களே,
102 வயது பெரியார் பெருந்தொண்டர் – மூத்த பெருந் தொண்டர் ஆத்தூர் ஏ.கே.தங்கவேலு அவர்களே,
ஒசூர் என்பது காவி நகரம் என்ற அளவிற்குச் சொன்னார்கள் – திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் காவிகளின் அந்தக் கனவையே முறியடித்துத்தான், தோழர் சத்யா போன்றவர்களை மேயராக ஆக்கக்கூடிய அளவிற்குச் செய்தனர். இன்றைக்கு நம்முடைய ஆட்சியில், பெரியார் சதுக்கம் வந்திருக்கிறது அங்கே.
இங்கே சொன்னார்கள், இதேபோன்று அங்கே ஒரு கட்டடம் வேண்டும் என்று.
ஓசூரிலும் மாபெரும் விழா!
தோழர்களே, மக்களுக்கு மறதி அதிகமாக இருக்கலாம்; ஆனால், நாங்கள் எதையும் மறக்கமாட்டோம்; நீண்ட நாள்களுக்கு முன்பே நாங்கள், வீட்டு வசதி வாரியத்தில் கட்டடத்தை வாங்கி, நீண்ட நாள்கள் அதைப் பயன்படுத்தி னோம். அந்தக் கட்டடத்தை வேறு ஆட்கள் சட்டத்திற்கு முரணாக ஆக்கிரமிப்பு செய்தபொழுது, 14 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை நடத்தினோம். இப்போது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – நியாயமான ஆட்சி வந்த காரணத்தினால், அதற்கு வேண்டிய முயற்சிகளை செய்வோம்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பணம் கொடுத்து, வீட்டு வசதி வாரியத்தில் வாங்கி, அது வேறொரு வரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த ஆக்கிரமிப்பாளரை நாங் கள் வெளியேற்றி, மறுபடியும் கொண்டாடி – இதே அமைச்சர் களோடு விரைவில் ஓசூரில் அந்த விழாவை நடத்துவோம்.
அந்த விழாவிலேயே, பெரியார் சதுக்கம் அங்கே திறக்கக் கூடிய வாய்ப்புகள் வரும் என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற ஒசூர் மாநகர மேயர் சத்யா அவர்களே,
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் தோழர் சுகவனம் அவர்களே, சட்டப்பேரவை மேனாள் உறுப்பினர் மாவட்டச் செயலாளர் தோழர் செங்குட்டுவன் அவர்களே,
நகர் மன்ற தலைவர் அருமைச் சகோதரியார் பரிதா நவாப் அவர்களே,
சட்டப்பேரவை மேனாள் உறுப்பினர் முருகன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் சகோதரர் கோவேந்தன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் நாகராஜ் அவர்களே, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை யின் அமைப்பாளர் அருமைச் சகோதரர் நாராயண மூர்த்தி அவர்களே,
பகுத்தறிவாளர் முல்லை மதிவாணன் அவர்களே, பொறியாளர் முத்துச்சாமி அவர்களே, செ.முருகன் அவர் களே, அன்பரசன் அவர்களே, நூர்முகமது அவர்களே,
மற்றும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் களே, தருமபுரி, திருப்பத்தூர், சென்னை, மேட்டூர், சேலம், ஓசூர், வேலூர், பெங்களூரு மாவட்டங்களின் கழகப் பொறுப் பாளர்களே,
இந்தப் பருவத்தையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக் கக் கூடிய பெரியோர்களே, உங்கள் அனைவருக்கும் என்னு டைய மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமைத் தோழர் பிரகாஷ் அவர்களையும் சேர்த்து நான் விளித்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று கூறி என்னுடைய உரையை நான் தொடங்குகின்றேன்.
முப்பெரும் விழாவோடு சேர்ந்துள்ள மகிழ்ச்சிகரமான விழா
இவ்விழாவை – முப்பெரும் விழா என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள்.
ஆனால், இப்பொழுது இன்னொரு விழாவும் சேர்ந்திருக் கிறது. ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான விழா – அது என்ன வென்றால், இன்றைக்குக் காலையில், எங்களுக்குச் சிற்றுண்டி அளித்தார் நம்முடைய மாவட்டச் செயலாளர் மதியழகன் அவர்கள்.
அப்பொழுது நம்முடைய அமைச்சர் பெருமக்கள் ஒன்றை நினைவூட்டினார்கள். நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – இந்தியாவே இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை இதுவரை பெற்றதில்லை என்று பெருமைப்படக்கூடிய முதலமைச்சரான நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக – கலைஞருக்குப் பிறகு பொறுப்பேற்று – அய்ந்தாவது ஆண்டுதான் இன்றைய நாள்.
எனவேதான், அவருடைய தலைமை – ஒரு ‘‘டைனமிக் லீடர் ஷிப் இன் இண்டியா” என்று சொல்லக்கூடிய அந்த ஆற்றல்மிகு, ஆளுமைமிகு தலைமை இருக்கிறதே – அந்தத் தலைமையினுடைய அய்ந்தாம் ஆண்டு பிறந்த நாள் என்று நாங்கள் எல்லாம் வாழ்த்துக் கூறினோம். மிகவும் மகிழ்ந்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அந்த விழாவையும் – இந்த முப்பெரும் விழாவோடு சேர்த்துக் கொண்டாடு கின்றோம். அமைச்சர்களோடும், அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடும் நாம் கொண்டாடக்கூடிய அள விற்கு மிகப்பெரிய ஓர் வாய்ப்பு.
தமிழ்நாடு – இந்தியாவிற்கே கற்றிடம்
சிலர் புரியாமல் உளறினால்கூட, சில ஊடகங்கள் அதை பெரிதாக்கிக் காட்டுவார்கள். இனிமேல், தமிழ்நாட்டில் கலைஞர் இல்லை, அவர் இல்லை, இவர் இல்லை என்று சொல்லி, தமிழ்நாடு வெற்றிடம்தான் என்று சொன்னார்கள், அய்ந்தாண்டுகளுக்கு முன்பு.
அப்பொழுது தாய்க்கழகமான திராவிடர் கழகம் பதில் சொல்லிற்று – தமிழ்நாடு வெற்றிடமல்ல – பொறுத்திருந்து பாருங்கள், இதுதான் இந்தியாவிற்கே கற்றிடமாகப் போகிறது; கற்றிடம் – கற்றுக்கொண்டு போகவேண்டிய இடமாக இருக்கும் என்று நாங்கள் சொன்னோம்.
அதேபோன்று, இந்தியாவே தமிழ்நாட்டைப் பார்த்துக் கற்றுக் கொண்டு போகிறது. இது மிகையல்ல; யாராவது குறை சொல்பவர்கள், எதிரிகள் – குறை சொல்லுகின்றவர்கள் சொல் லட்டும்; இந்த மகிழ்ச்சிகரமான விழாவில் சொல்லுகிறோம்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு காலைச் சிற்றுண்டி
இந்தியாவில், மயக்கம் போட்டு விழுகிறார்கள், காலை உணவு இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற நேரத்தில் என்று சொல்லும்பொழுது, அந்தப் பிள்ளைகளுக்கு, நிதி நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, அந்தப் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கியதோடு – இங்கே அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, 17 லட்சம் குழந்தைகளுக்கு, 34 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் காலைச் சிற்றுண்டி கொடுக்கக்கூடிய ஓர் ஆட்சி இருக்கிறது என்றால், தமிழ்நாடு கற்றிடமா, இல்லையா? இதைத்தான் மற்றவர்கள் பெற்றுக்கொண்டு போகவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்தியாவில் இருக் கிறார்கள் என்றால், இந்தப் பெருமை திராவிட மாடல் ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சியில் வந்திருக்கிறது?
இதற்கு விதை எங்கே?
நீதிக்கட்சி – தியாகராயர்!
நூறாண்டுகளுக்கு முன்பு – நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பு – அந்தக் காலத்தில் சர் பிட்டி தியாகராயர் அவர்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கம் – நீதிக்கட்சியைத் தொடங்கிய அந்தத் தலைவர் – முதன்முறையாக, சென்னை மாநகராட் சிக்குத் தலைவராக வந்த நேரத்தில், பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு மதிய உணவு போடவேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். திராவிட இயக்கம்தான் முதன்முதலில் அந்தத் தத்துவத்தைக் கொண்டு வந்தது.
ஆனால், அன்றைக்கு முழு அதிகாரம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு இல்லை. வெள்ளைக்காரர்களிடம் முழு அதிகாரம் இருந்தது. இந்தத் திட்டத்திற்கு, நிதி இல்லை என்று மறுத்துவிட்டார்கள். ஆகவே, அந்த மதிய உணவுத் திட்டத் தைத் தொடங்கி சில காலம் நடத்தினார்கள். அதற்குப் பிறகு அந்தத் திட்டத்தைத் தொடர முடியவில்லை.
ஆகவே, இந்தத் திட்டத்தை முதலில் தொடங்கியவர் தியாகராயர் – பிறகு பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, ஓர் அருமையான பகல் உணவுத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறினாலும் கொள்கைகள் வளரும்
பிறகு அந்தத் திட்டம் படிப்படியாக நகர்ந்து வந்தது. எந்த ஆட்சி வந்தாலும், தமிழ்நாட்டு மண்ணுக்கு என்ன ஒரு சிறப்பு என்றால், ஓர் ஆட்சிக் கொண்டு வந்த திட்டத்தை சமூகநலத் துறையில், இன்னொரு ஆட்சி நிறுத்துவது கிடையாது. ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், இந்தக் கொள் கைகள் வளரும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 16 சதவிகித இட ஒதுக்கீடு – தாழ்த்தப்பட்ட சமூக சகோதரர்களுக்கு – பிறகு 18 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஆக்கியது நம்முடைய கலைஞர் அவர்கள்.
25 சதவிகித இட ஒதுக்கீடு – 31 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்கியது. அது எம்.ஜி.ஆர். ஆட்சியாக இருந்தாலும், 9 ஆயிரம் வருமான வரம்பை ஒழித்த பிறகு, 50 சதவிகித இட ஒதுக்கீடு; பிறகு 68 சதவிகித இட ஒதுக்கீடு; பிறகு 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு. அதை எடுக்க முடியாது. காரணம், திராவிட இயக்க வளர்ச்சி – பெரியார் மண்ணினுடைய தாக்கம்.
ஆகவே, 69 சதவிகித இட ஒதுக்கீடு – மூவரும் பார்ப் பனர்களாக இருந்தாலும் – ஒரு முதலமைச்சர்; ஒரு குடியரசுத் தலைவர்; ஒரு பிரதமர் – மூன்று பேரையும் வைத்துக்கொண்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்பிற்காக கையெழுத்துப் போடப்பட்டது என்ற சரித்திரம் இருக்கிறதே, அதை செய்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட இயக்கம் – திராவிடர் கழகம். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில், உண்ண உணவு இருக்கிறது; இருக்க இடம் கல்வி. இத்தனையும் இருக்கிறதே – இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
பெரியார் பிறந்த நாளில்
சமூகநீதி நாள் உறுதிமொழி
அதற்கு ஒரே வார்த்தையில் சொன்னார் – பெரியார் பிறந்த நாளை, நம்முடைய முதலமைச்சர் சமூகநீதி நாளாக உறுதிமொழி எடுக்க வைத்தார்.
யார் யாருக்கெல்லாம் பெரியாரைப்பற்றி கொஞ்சம் குமட்டல் இருக்கிறதோ, அந்த அதிகாரிகள் உள்பட – இவர் உறுதிமொழியைப் படிக்கிறார் – அவர்களும் உறுதிமொழி யைச் சொல்லித்தான் தீரவேண்டிய கட்டத்தில், ‘‘அனைவருக் கும் அனைத்தும்” என்று நம்முடைய முதலமைச்சர் சொல்ல, அந்த அதிகாரிகளும் ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொன்னார்கள்.
அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய ஒரே ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த ஆட்சி இருக்கிறது? விரல் விட்டுச் சொல்லுங்கள், திருத்திக் கொள்கின்றோம்.
அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான், இந்த ஆட்சியை எப்படியாவது உருக்குலைக்கவேண்டும்; செயல்பட விடக்கூடாது என்று வடக்கே இருந்து வந்துள்ள பீகார் பார்ப்பனரான ஒருவர், இங்கே ஆளுநராக அமர்ந்துகொண்டு, என்ன செய்கிறார் தெரியுமா?
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றத்தில் வாக்களித்து, மசோதாவை நிறைவேற்றி, அம்மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறார்கள்; ஆனால், அந்த மசோதாவில் கையெழுத்துப் போட மறுத்து, சண்டித்தனம் செய்கிறார்.
தபால்காரர் வேலையன்றி வேறு என்ன?
அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணப்படி நடந்துகொள்ளாமல், அவர் தூர விலகிச் செல்கிறார். அதையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, ‘‘நீங்கள் ஒரு தபால்காரர் வேலையைப் பார்க்கவேண்டியவரே தவிர, கடிதத்தை நிறுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது; இதோ அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவு இருக்கிறது” என்று எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் நாங்கள்.
‘‘யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே” என்று சொல்வதுபோன்று, எங்களுடைய பிரச்சாரம் நாடு தழுவிய அளவிற்கு நடைபெற்று வருவது எங்களுக்காக அல்ல நண்பர்களே, பெற்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்களுடைய பிள்ளைகளுக்காகத்தான் – உங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காகத்தான்.
நீட் தேர்வை எங்களுடைய அமைச்சர்களது பிள்ளைகள் எழுதப் போகிறார்களா? அவர்களுடைய பிள்ளைகள் டாக்டர்கள் ஆகவேண்டும் என்பதற்காகவா? அல்ல நண்பர் களே, உங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காக அல்லவா! அதற்காகத்தானே இன்றைக்கு இவ்வளவுப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லும்போது, இன்றுவரையில் அதற்கு என்ன பாடுபடுத்துகிறார்கள்?
இன்றைக்கு அந்த சட்டம் நிறைவேறி இருக்கிறது; உச்சநீதிமன்றத்திலும் அதற்குத் தடை இல்லை என்றாகி விட்டது; இருந்தாலும் அந்த சட்டத்தில் சந்து பொந்து இருக் குமா? குறுக்குச்சால் ஓட்டலாமா? என்று இந்த ஆட்சிக்கு விரோதமாக எதையாவது செய்யலாமா? என்று நினைக் கிறார்கள்.
சட்டத்திற்கு புறம்பாக எதுவுமில்லை
இன்னொரு கொடுமை என்னவென்றால், இங்கே நம் முடைய மாண்புமிகு நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மிகுந்த வேதனையோடு சொன்னார்கள்.
கிருஷ்ணகிரியில், 99 ஆண்டுகள் குத்தகைக்கு முறைப் படி, சட்டத் துறை ஆலோசனைப்படி அதனை வாங்கி, அதற்குரிய பணத்தையும் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.
குத்தகைக்கு எடுத்தவர்கள், அந்த இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. சட்டத்திற்குப் புறம்பாக திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ எதையும் செய்தது கிடையாது. அதிலும், இன்றைய முதலமைச்சர் அவர்கள் இன்னும் அதில் ஒருபடி மேலே போய், கவனமாக இருக்கக்கூடியவர்.
நீங்கள் எல்லாம் சென்னைக்குச் சென்றிருப்பீர்கள்; சென்னை கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் என்று இருக்கிறது. அந்த இடம் யாருக்குச் சொந்தம்? அரசாங்கத்திற்குச் சொந்தம். 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். விவேகானந்தர் அமைப்பு எடுத்திருக் கிறது- ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இன்னொரு பெயர் விவேகானந்தர் அமைப்பு.
அந்த அமைப்பு, குத்தகைக்கு எடுத்த இடத்தைவிட, நிறைய ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்று ஏராளமான மனுக்கள், வழக்குகள் இருக்கின்றன.
யாராவது அவர்களைத் தடுத்திருக்கிறார்களா? ஆனால், இங்கே சட்டப்படி எல்லாவற்றையும் மேற்கொண்டோம்; ஆனால், மூன்று முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது; மூன்று முறை அல்ல, முப்பது முறை தள்ளி வைத்தாலும், அதே அமைச்சர்கள் வந்து, இங்கே இதைத் திறக்கவேண்டும் என்று சொன்னேன்.
இதில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளி வாக இருந்தார்.
26.8.2023 அரசு ஆணை – முதலமைச்சரும் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். இதை நகராட்சித் துறை அமைச்சர் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.
திராவிட மாடல் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம், கோப்புகளைப் பார்த்துவிட்டு, கையெழுத்துப் போடுகிறார் முதலமைச்சர் – எங்கே கையெழுத்துப் போடுகிறார் தெரியுமா?
வேகமாக செயல்படுகின்ற
முதலமைச்சர் – வேறு யார்?
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்” – வேலை செய்பவர் களுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. வள்ளுவரும் அதைத்தான் சொன்னார். பெரியாருக்கு அந்தக் குறள்தான் மிகவும் பிடித்த குறளாகும்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கின்றார் 200 கிலோ மீட்டருக்கு அப்பால், வெளியூரில். இந்தக் கோப்பும் ஓட்டப் பயிற்சி செய்கிறது; அந்தக் கோப்பைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுகிறார்.
சராசரி முதலமைச்சராக இருந்தால் என்ன சொல்லியிருப்பார், ‘‘இப்பொழுது என்ன அவசரம், என்று கோபப்பட்டு இருப்பார்.”
ஆனால், நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், அதிகாரிகளைத் திரும்பிப் பார்த்து, ‘‘என்ன?” என்று கேட்கிறார்.
கோப்பு என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.
கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அந்தக் கோப்பில் கையெழுத்துப் போட்டார் என்று அமைச்சர் இங்கே சொன்னார்.
இதுபோன்ற ஒரு முதலமைச்சர், வேகமாக செயல்படுகின்ற முதலமைச்சர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறார்களா?
நினைத்துப் பார்க்கும்பொழுது எனக்கு உடலெல்லாம் சிலிர்க்கின்றது நண்பர்களே – அவ்வளவு அனுபவம் பெற்றவர்கள் – அவ்வளவு கசப்பான அனுபவம் பெற்றவர்கள் நாங்கள்.
டில்லியில், பெரியார் மய்யம் கட்டினோம். கலைஞர்தான் மறுமய்யத்தைத் திறந்து வைத்து பெருமையோடு சொன்னார். அய்ந்து மாடி பெரியார் மய்யத்தை – இரண்டாவது மய்யமாகத் திறந்தோம்.
மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்
காட்டிய அக்கறை
முதலில் கட்டிய பெரியார் மய்யத்தை அவர்கள் இடித்துத் தள்ளிய நேரத்தில், அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர் களிடம் சொல்லவேண்டும் என்று, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் துடித்தார். அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
வி.பி.சிங் அவர்கள் இருந்த அப்பல்லோ மருத்துவ மனைக்குச் சென்றோம்.
எங்களைப் பார்த்த வி.பி.சிங் அவர்கள், ‘‘வீரமணி ஜி, ஹேவ் யூ பிராட் இட்?” (நீங்கள் அந்த மனுவை கொண்டு வந்திருக்கிறீர்களா?)
அந்த மனுவில் அவர் முதல் கையெழுத்துப் போட வேண்டும் என்பதற்காகக் கேட்கிறார்.
‘‘நோ, நோ! யூ பிளிஸ் கிவ் மீ” என்று பேனாவைக் கேட்கிறார்.
அப்பலோ மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது; அப்பொழுது அந்த மனுவை வாங்கி கையெழுத்துப் போடுகிறார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.
பிறகு, வி.பி.சிங் அவர்களும், நாங்களும் பிரதமர் வாஜ்பேயி அவர்களை சந்தித்து, மனு கொடுத்தோம்.
வாஜ்பேயி அவர்கள் நிதானமானவர்; பி.ஜே.பி.யில் இருந்தாலும், கருத்து மாறுபாடுகள் எவ்வளவுதான் இருந்தா லும் அவர், அதிகாரிகளிடம் சொன்னார், ‘‘வீரமணியும், மற்றவர்களும் எந்த இடம் கேட்கிறார்களோ, அந்த இடத்தைக் கொடுங்கள்” என்று சொன்னார்.
முதலில் இடித்த இடம் கால் ஏக்கரா; பிறகு அவர்கள் கொடுத்தது ஒரு ஏக்கர். மறைமுகமாக எங்களுக்கு லாபமாக ஆனதே தவிர, எங்களுக்கு நட்டமாகவில்லை. இன்றைக்கு அந்த இடத்தில் அய்ந்து மாடி கட்டடம் கட்டி பெரியார் மய்யம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு காசும், எங்கள் வீட்டிற்குப் போகாது; மக்களுக்குக் கிடைக்கும். அதுதான் தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்; அதுதான் திராவிடர் இயக்கம்.
பெரியார் மய்ய செய்திக்குப் பிறகு, இரண்டாவது செய்திதான் – இந்த கிருஷ்ணகிரி செய்தி.
இந்த இடம் இன்றைக்கு எவ்வளவு தூய்மையாக இருக்கிறது; இந்த மண்ணுக்கு எவ்வளவு பெருமை? இந்த மண்ணுக்கு எவ்வளவு மதிப்பீடு அதிகம் என்பதைப்பற்றி சிந்திக்காமல், யாரோ ஒரு சிலர் காவி அணிந்து கொண்டிருப் பவர்கள், வருவாய்த் துறையிலும் ஊடுருவி இருக்கிறார்கள்; காவல்துறையிலும் ஊடுருவி இருக்கிறார்கள். அதை நினைத்து வெட்கப்படுகின்றோம்.
ஏனென்றால், அவர்களுக்கும் சமூகநீதி வேண்டும் என்பதற்காகத்தான் கத்திக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் திராவிட இயக்கத்தவர். அதற்காகத்தான் மண்டல் கமிசனைப் பற்றி பேசுகிறோம்; அதற்காகத்தான் வகுப்பு வாரி உரிமை யைப்பற்ற பேசுகின்றோம்.
நாங்கள் ஆதங்கப்படுவோமே தவிர, கோபப்பட மாட்டோம்.
சமூகநீதிக்காக உழைப்பவர்களின் – அந்தத் தாயின் மடியை அறுப்பதுபோல – அந்தத் தாயின் மடியை எட்டி உதைப்பதுபோல நீங்கள் தொல்லை கொடுத்தாலும், அப் போதும் உங்கள்மீது நாங்கள் வருத்தப்படமாட்டோம்; உங்கள் மீது நாங்கள் பரிதாப்படுவோம்; உங்களை திருத்த முடிய வில்லையே என்றுதான் நாங்கள் ஆதங்கப்படுவோமே தவிர, கோபப்படமாட்டோம்.
அதேநேரத்தில், நீங்கள் குறுக்குவழியில் போனால், வெற்றி பெற முடியாது என்பதற்கு, இந்த கிருஷ்ணகிரியில் உள்ள பெரியார் மய்யம்தான் உதாரணம். திராவிட இயக் கத்தை எதிர்த்து நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதற்கு இந்தப் பெரியார் மய்யத்தினுடைய சாதனைதான் சரியான சான்று என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!
இவ்விழா சிறப்பாக நடைபெற உழைத்த அத்துணைத் தோழர்களுக்கும், நன்கொடை கொடுத்தவர்களுக்கும் என்னு டைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அய்.ஏ.எஸ்.,அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
இங்கே அமைக்கப்பட்டுள்ள பெரியார் மய்யத்தில், நம்முடைய பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி தேர்விற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நம்முடைய மாவட்டச் செயலாளர் அழகாகச் சொன்னார், ஒரு மாடியில், போட்டித் தேர்விற்கான அனைத்து புத்தகங் களையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்; இந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகள் அதனை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். வேண்டுமானால், ஒரு வகுப்பை உருவாக்கவேண்டுமானால், அய்.பி.எஸ்., அய்.ஏ.எஸ்., போட்டித் தேர்வு பயிற்சி மய்யமாக இந்தப் பகுதியில் ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். அதன் பயனை நம்முடைய பிள்ளைகள் பெறவேண்டும்.
அதேநேரத்தில் நண்பர்களே, இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிறோம்; ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறோம்.
ஆனால், பள்ளிக்கூடத்தில் படிக்கும் சின்ன பிள்ளை களுக்கு அடையாளம் காட்டுகிறார்கள்; கைகளில் கயிறு கட்டு கிறார்கள்; இன்ன ஜாதிக்காரர்கள் இந்தப் பகுதியில் அதிகம்; ஆகவே, அந்த வண்ணத்தில் கயிறு கட்டு என்கிறார்கள். இது என்ன கொடுமை?
அண்மையில் தென்மாவட்டங்களில் நாங்குநேரி போன்ற பகுதிகளில் நடைபெற்ற கொடுமை பள்ளி மாணவர்களிடையே புகுந்துள்ள ஜாதி வேறுபாடுகளும் பள்ளிக்கூட மாணவர்கள் கைகளில் ஜாதிக் கயிறு கட்டிக் கொண்டு வரக்கூடாது என்று நம்முடைய அரசு, அதிகாரிகளுக்கு, கல்வி அதிகாரிகளுக்கு தெளிவாகச் சொல்லி, ஜாதி ஒழிப்பிற்கு, தீண்டாமை ஒழிப்பிற்கு வழிவகை செய்திருக்கிறது.
இப்பொழுது ஒரு குறுக்கு வழியை மேற்கொண் டிருக்கிறார்கள்; அதிகமாக இருக்கிறார்களோ, அந்தப் பஞ்சாயத்தில், அந்தந்த ஊரில், மின்சார கம்பங்கள், குடிநீர் குழாய்க்கு – எந்த ஜாதிக்காரன் அதை முறிக்கின்ற வண்ணம் தீட்டுகிறார்கள். அதைக் கண்டுபிடிப்பதற்கே பெரியார் கண்ணாடி தேவை – பெரியார் கண்ணாடி இருந்தால்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும்.
அந்த வண்ணம் அடித்தால், அந்த ஜாதிக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று அர்த்தமாம். ஏற்கெனவே கைகளில் கட்டிய கயிறு வண்ணத்தில், அந்தக் குழாய்க்கு, கம்பங்களுக்கு அந்த வண்ணத்தில் அமைக்கிறார்கள்.
அதையும் இப்பொழுது அரசாங்கம் கண்டுபிடித்து, அந்த வண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எண்ணங்கள் மாறவேண்டுமானால், வண்ணங்களும் மாறவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
வண்ணங்களால்தான் ஆபத்து அதிகம். காவி வண்ணத்தைவிட மிகப்பெரிய ஆபத்து வேறு உண்டா?
சுற்றுலா மாளிகையில், இன்றைக்குக் காலையில் நடைபயிற்சியின்போது நான் கவனித்தேன், பாறை உச்சியில் காவிக் கொடி கட்டியிருக்கிறார்கள்; இதற்கு என்ன அர்த்தம்? கிருட் டினகிரியில் காவிக் கொடியா? எல்லாக் கட்சிக்காரர்களும் அங்கே கொடி கட்டத் தொடங்கினால், என்னாகும்?
அங்கே காவி கொடி எப்படி பறக்கிறது? அந்தக் கொடியவர்கள் யார்? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மண்ணில் ஒரு பொய்க்கால் குதிரையை நட்டுவிட முடியாது.
ஜாதியை ஒழிப்பதற்காக முயற்சி செய்வது திராவிட இயக்கம்.
ஆனால், பிரதமர் மோடி என்ன சொல்கிறார்?
பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்?
காமராசர் அவர்களை பெரியார் ஆதரித்தார்; அண்ணா சொன்னார், ‘‘குணக்கொழுந்தே, குணாளா!” என்றார் குடியாத்தத்தில்.
ஆச்சாரியார் மூடிய பள்ளிகளை
காமராசர் திறந்தார்
ஆச்சாரியார் அவர்கள் ஆட்சியின்பொழுது, இதே கிருஷ்ணகிரியில்தான், மதுவிலக்கு என்கிற பெயரால், பள்ளிக்கூடங்களை மூடிய பகுதி இதுதான்.
ஆகவே, ஆச்சாரியாரால் மூடப்பட்ட பள்ளிக்கூடங் களை கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் திறந்தார்.
இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் காலைச் சிற்றுண்டி, பகல் உணவு – கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற சூழல்.
இப்படிப்பட்ட சூழலில், நாம் எல்லோரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நம்முடைய முதலமைச்சர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆனால், டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும்பொழுது ஒரு கருத்தைச் சொல்லுகிறார்,
Vishwakarma scheme will aid 30 lakh artisan families: Centre
The Cabinet Committee on Economic Affairs (CCEA) on Wednesday approved the “PM Vishwakarma” with an outlay of ₹ 13,000 crore. The scheme, announced by Prime Minister Narendra Modi during his Independence Day speech on Tuesday (August 15), will be available for traditional craftspeople and artisans for five financial years from 2023-2024 to 2027-2028.
The Centre said in a release that the scheme aims to strengthen and nurture the “Guru-Shishya parampara” or the family-based practice of traditional skills by artisans and craftspeople working with their hands and tools.
“The scheme also aims at improving the quality, as well as the reach of products and services of artisans and craftspeople and to ensure that the Vishwakarmas are integrated with the domestic and global value chains,” it added.
18 traditional trades such as carpenter, boat maker, armourer, blacksmith, hammer and tool kit maker, locksmith, goldsmith, potter, sculptor, stone breaker, cobbler, mason, basket/mat/broom maker/coir weaver, traditional Doll & toy maker,barber, garland maker, washerman, tailor and fishing net maker will be covered under the scheme. The artisans and craftspeople will get PM Vishwakarma certificate and ID card, credit support up to ₹1 lakh (first tranche) and ₹2 lakh (second tranche) at a concessional interest rate of 5%.
“The scheme will further provide skill upgradation, toolkit incentive, incentive for digital transactions and marketing support,” the release added.
Briefing presspersons after the meeting, Union Minister Ashwini Vaishnaw said there will be two types of skilling programmes — basic and advanced under the scheme and a stipend of ₹500 per day will also be provided to beneficiaries while undergoing skill training. “They will also get a support of up to ₹15,000 to buy modern tools,” he said adding that five lakh families will be covered in the first year of the scheme and 30 lakh families will be covered over five years.
“In the days to come, we will launch a scheme on the occasion of Vishwakarma Jayanti, benefiting individuals skilled in traditional craftsmanship, particularly from the OBC community. Weavers, goldsmiths, blacksmiths, laundry workers, barbers, and such families will be empowered through the Vishwakarma Yojana, which will begin with an allocation of around 13-15 thousand crore rupees,” Mr. Modi had said on Tuesday.
இதன் தமிழாக்கம் வருமாறு:
பிரதமர் மோடி அவர்கள், புதிதாக ஒரு குலக்கல்வித் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளே விடுகிறார்.
அது என்ன தெரியுமா?
திராவிட இயக்கத்திற்கு
இதைவிட வேறு சவால் உண்டா?
ஜாதித் தொழில் செய்கின்ற கிராமத் தொழில் இருக்கிறது பாருங்கள் – சலவையாளர், தச்சுப் பட்டறையாளர், கருமான், செருப்பு தைப்பவர், பார்பர், முகச்சவரம் செய்பவர் – இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம், கல்வி பயிலுவதற்குப் பதிலாக, அவரவர் குலத் தொழிலைப் பயின்றால், அவர் களுக்கு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுப்போம்.
அதற்காக 30 லட்சம் கைத் தொழிலாளர்களை இந்தியா முழுவதும் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுத்து இருக்கின்றோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். அரசு, பி.ஜே.பி. அரசு கொண்டு வருகிறது என்றால், இதைவிட திராவிடர் இயக்கத்திற்கு மிகப்பெரிய சவால் வேறு கிடையாது.
இது ஒன்றிற்காக மட்டுமே பி.ஜே.பி. இந்தியாவை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டிய கட்சி – ஆட்சியிலிருந்து கீழே இறக்கப்படவேண்டிய ஆட்சி என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் ஓட ஓட விரட்டியதை, மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது பாசிச பா.ஜ.க. ஆட்சி.
நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக ஆகக்கூடாது; நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்களாக ஆகக்கூடாது; நம்முடைய பிள்ளைகள் கல்வி கற்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.
அதனால்தான், நம்முடைய முதலமைச்சர் திருவாரூரில் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இது துரோணாச்சாரியார் களின் காலம் அல்ல; இது ஏகலைவன்களின் காலம்” என்றார்.
இன்றைக்கு யாராவது துரோணாச்சாரியார்கள், ஏகவ லைவனின் கட்டை விரலை வெட்ட வேண்டும் என்று சொன்னால், அவனையே வெட்டுவான் எங்கள் ஆள். தானாக வெட்டமாட்டார்கள்; அவர்கள் தூண்டினால், வெட்டு வார்கள் என்று சொல்லக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது அதுதான் தந்தை பெரியார் மண்ணினுடைய தனித்தன்மை; திராவிட மண்ணினுடைய தனித்தன்மை.
எனவேதான் நண்பர்களே, இந்த ஒரு பிரச்சாரம் போதும்; தமிழ்நாடு முழுவதுமல்ல – இந்தியா முழுவதுமே இதை வைத்துக்கொண்டு, இந்த நிகழ்வைப் பற்றிச் சொல்வோம்.
இந்தியா முழுவதும் இன்றைக்கு விழிப்புணர்வு வந்தாயிற்று; மக்கள் தயாராகி விட்டார்கள்; ஊழல், ஊழல் என்று சொல்லி, தி.மு.க.வை மிரட்ட முடியாது.
நேற்றுகூட வந்திருக்கிறது – ஆதாரப்பூர்வமாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை – பிரதமர் மோடி அரசில் ஊழல்.
மற்றவர்கள் தூங்குவார்கள்- அப்படி தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புவதுதான் எங்களுடைய வேலை.
கருப்புச் சட்டைக்காரன் – காவலுக்குக் கெட்டிக்காரன். எங்களுடைய வேலை சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத் திற்கோ உள்ளே போவது இல்லை. இவர்களைப் போன்ற வர்களை உள்ளே அனுப்புவோம்; அமைச்சர்களை உள்ளே அனுப்புவோம்; நாங்கள் வெளியில்தான் நிற்போம்; நாங்கள் காவலாளிகள்தான். பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் பதவி யைக் கூட நாங்கள் ஏற்கமாட்டோம்.
ஆனால், அந்த இடத்தை யாருக்குக் கொடுத்தால், அமர்ந் தால் மக்கள் நலன் பாதுகாக்கப்படுமோ, உங்கள் பிள்ளை களுடைய உரிமைகள் காக்கப்படுமோ, இந்த மாநிலத்தினு டைய உரிமைகள் காக்கப்படுமோ அவர்களை அமர்த்து வதற்காகப் பாடுபடுவோம்.
அதற்குத்தான் தோழர்களே, நாங்கள் இப்படி பாடுபடுகின் றோம். அதற்காகத்தானே இங்கே பெரியார் சிலை; அந்தப் பெரியார் சிலையைப் பார்த்தவுடன், உங்களுக்கு உணர்ச்சி வருமே- உங்களுடைய உரிமைகள் நினைவிற்கு வருமே!
அண்ணாவின் பெயரைக் கேட்டதுமே, உணர்வு வருமே! கலைஞருடைய பெயரைக் கேட்டவுடன், உங்களுக்கு ஆவேசம் வருமே!
அவர்கள் எல்லாம் இல்லாவிட்டால், நம்முடைய பிள்ளை கள் துணி துவைத்துக்கொண்டோ, செருப்புத் தைத்துக் கொண்டோ, மாடு மேய்த்துக் கொண்டோதானே இருந் திருப்பார்கள்.
மறுபடியும் ஆடு மேய்க்கச் சொல்கிறார்கள்
ஆடு மேய்த்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் அய்.பி. எஸ். அதிகாரிகளாக ஆகக்கூடிய வாய்ப்பு எப்படி வந்தது? இந்த இயக்கத்தினல் வந்தது என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
மறுபடியும் ஆடு மேய்க்க அனுப்ப நினைக்கிறார்கள்.
எது வேண்டும்?
திராவிடமா? சனாதனமா?
மீண்டும் ஆடு மேய்க்கப் போ!
மீண்டும் சிரைக்கப் போ!
மீண்டும் வெளுக்கப் போ!
மீண்டும் செருப்புத் தைக்கப் போ!
என்று சொல்வது சனதானம்!!
மீண்டும் படிக்கப் போ!
மீண்டும் டாக்டராகு!
மீண்டும் பொறியாளராக ஆகு!
மீண்டும் மேலே மேலே வா! என்று சொல்வது எங்கள் திராவிடர் இயக்கம் – எங்கள் முதலமைச்சர் – எங்கள் ஆட்சி!
எது வேண்டும் மக்களே?
காவிகளே நீங்கள், தமிழ்நாட்டில் வாலாட்ட முடியாது. இந்தியா முழுவதும் ஆட்சி மாறப் போகிறது – ஆறே மாதங்கள்தான்.
அதற்காக மக்கள் தயாராகிவிட்டார்கள்; கட்சிகளின் தலைவர்கள்தான் அதற்குத் தயாராகவேண்டும்.
அதற்குத் தயார்படுத்துகின்ற தளகர்த்தர்தான் நம்முடைய தளபதி அவர்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
முன்பு இந்தியா என்று சொன்னால், வேறு அர்த்தம்.
இன்றைக்கு இந்தியா என்றால், என்ன அர்த்தம் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
நாளைக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சார்பாக மிக முக்கியமானவர் பங்கேற்க உள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
விஸ்வகர்மா திட்டம் என்கிற மீண்டும் ஜாதித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதை எதிர்த்து, மாநிலம் அளவில் நம்முடைய எதிர்ப்பைக் காட்டியாக வேண்டும்; அதையும் தாண்டி, டில்லியிலேயே அதற்கு எதிர்ப்பைக் காட்டக் கூடிய அளவிற்கு, எங்களுடைய பேரணிகளும், எங்களுடைய பிரச்சாரமும் மிகத் தெளிவாக நடைபெறும்.
‘இந்தி‘-யா? என்று கேட்ட கேள்வி
– ‘இந்தியா’ என்று ஆனது!
நாம் முன்பு ‘இந்தி’-யா? என்று கேள்வி கேட்டோம்.
‘இந்தி’-யா? என்று நாம் கேட்டது, இப்பொழுது எப்படி மாறிப் போய்விட்டது என்றால், ‘இந்தியா’, ‘இந்தியா’ என்று. அப்படியென்றால், எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டோம், வடநாட்டில். மோடி அவர்களே காலி செய்வதற்குத் தயாராக இருங்கள்.
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலும் டில்லி செங்கோட்டையில் நானே கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடி சொன்னார்.
அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது – இதுவரையில், நான்தான் அடுத்த முறையும் கொடியேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறாரா? இப்பொழுது அதுபோன்று சொல்கிறார் என்றால், அவருக்குப் பயம் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.
மக்களிடமே அதிகாரம்!
அதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள், ‘‘அடுத்த ஆண்டும் மோடி கொடியேற்றுவார்; அவருடைய வீட்டில்” என்றார்.
வீட்டில்கூட கொடியேற்றுவாரா? அல்லது காட்டில் கொடி ஏற்றுவாரா? என்று சொல்லவேண்டியது மக்கள்.
மக்களிடம்தான் கடைசி அதிகாரம் இருக்கிறது.
பிரதமரிடம் அதிகாரம் இல்லை –
குடியரசுத் தலைவரிடம் அதிகாரம் இல்லை –
முதலமைச்சரிடம் அதிகாரம் இல்லை –
நீதிபதிகளிடம் அதிகாரம் இல்லை –
அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறது?
மக்கள்! மக்கள்!! மக்கள்!!!
அந்த மக்கள்தான் நீங்கள்!
முடிவு செய்யுங்கள் – உங்களுக்காக – உங்கள் பிள்ளைகளுக்காக – உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக!
எனவே, திராவிடம் வெல்லும் – அந்த வரலாற்றை நாளை சொல்லும்!
திராவிட ஆட்சி நீள வேண்டும்!
உறுதியாக இருங்கள்!
திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள்!
தெருமுனைப் பிரச்சாரம் செய்யுங்கள்!
திராவிடம் வெல்லவேண்டும்!
திராவிட ஆட்சி நீள வேண்டும்!
நம்முடைய முதலமைச்சர் தலைமையில் வெற்றி காணவேண்டும்!
அதற்காக ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி!
பெரியார் மய்யத்தைப் பயன்படுத்துங்கள் இளைஞர்களே!
இந்த இயக்கம் உங்களுக்காக!
இந்த இடம் உங்களுக்காக!
இந்த நூலகம் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக!
இதற்கு ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
அமைச்சர் பெருமக்களுக்கும், முதலமைச்சர் அவர்கள் இந்த ஆணையை சிறப்பாகத் தந்தமைக்கும், அரசுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
ஒரு சாதாரண நிகழ்ச்சியாக நடத்தவேண்டிய நிகழ்ச்சியை எதிர்ப்புத் தெரிவித்து, ஒரு மாநாடு போன்று மிகச் சிறப்பாக நடத்தியமைக்காக – நம்முடைய உற்சாகமான எதிரிகளுக்கும் நன்றி கூறி முடிக்கின்றோம்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.