சென்னை, ஜூன் 12- பூடானைச் சோ்ந்த 6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனை யின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் நாகேஷ் கே ராவ் கூறிய தாவது:
பூடான் நாட்டைச் சோ்ந்த 7.5 கிலோ எடை கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததில் இருந்தே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘பிலியரி அட்ரேசியா’ என்ற நோய் ஏற்பட்டது.
இந்த வகை நோயால் பாதிப்புக்குள்ளானோருக்கு பித்த நீர் குழாய் தடைபட்டிருக்கும். இதனால், கல்லீரலில் இருந்து பித்த நீர் வெளியேறாமல் தேங்கிவிடும். நாளடைவில் இது கல்லீரலை செயலிழக்க செய்யும்.
20,000 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த அரிய பாதிப்புக்குள்ளான அந்தக் குழந்தைக்கு முதலில் கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.
இங்கு மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநா் டாக்டா் ஜாய் வா்கீஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அந்தக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனா்.
அதன்படி, குழந்தையின் தாயிடம் இருந்து 300 கிராம் கல்லீரல் கொடையாக பெறப்பட்டு 8 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது. திரள் நிதி மூலம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையின் மருத்துவ வல்லுநா்கள் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ரஜனிகாந்த், செல்வகுமாா் மல்லீஸ்வரன் உள்ளிட்டோா் இந்த அறுவை சிகிச்சைக் குழுவில் இடம் பெற்றிருந்தனா் என்றாா் அவா்.