12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடத்தில் தோல்வி மற்றும் உயிரியல் பாடத்தில் சொற்ப மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி நீட் தேர்வில் 705/720 வாங்கி ‘வியப்பை’ ஏற்படுத்தி உள்ளார்
மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு மிகவும் மோசமான நடைமுறையில் நடந்துள்ளது.
‘நீட்’ தேர்வு இத்தனை ஆண்டுகளும் மோசடியாக நடைபெற்ற போது சிலரைக் கைது செய்வது, பிறகு விட்டுவிடுவதுமாக தொடர்ந்து குழப்பத்துடனேயே 6 ஆண்டுகளாக நடந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு குறிப்பாக பீகார், ராஜஸ்தான், குஜராத், அரியானா போன்ற மாநிலங்களில் தேர்வு எழுதும் அறையின் மேற்பார்வையாளரையே கையில் போட்டு அனைவருக்கும் அவரே விடைகளைச் சொல்லித்தந்து தேர்வை எழுதவைத்தார். இதற்கு தலா ஒரு நபருக்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை முன்பணமாகவும், மீதமுள்ளவற்றை ரிசல்ட் வந்த பிறகு வாங்கவும் முடிவு செய்துள்ளார். இது சிலரின் வாட்ஸ் அப் உரையாடலின் மூலம் தெரியவந்தது. குறிப்பாக பீகார், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு மிகவும் மோசமாக நடைபெற்றது.
அதே போல் தேர்வு முடிவுகள் ஜூன் 14 அன்று வெளியாகும் என்று அட்டவணையில் குறிப்பிட்டுவிட்டு ஜூன் 4ஆம் தேதியே முடிவை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது, இவர்கள் செய்த மோசடித்தனம் பேசப்படாமல் இருக்க, தேர்தல் முடிவுகளின் பரபரப்பில் எல்லாம் அடங்கிப்போகும் என்ற நினைப்பில் இருந்தனர் போலும்! ராஜஸ்தானில் உள்ள கோடா நகரில் ஒரே தேர்வு அறையில் தேர்வெழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே போல் அரியானா, பீகார் மாநிலங்களிலும் ஒரே தேர்வு அறையில் எழுதிய அனைவருமே தேர்வாகி உள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்வு மதிப்பெண் கொடுப்பதிலும் முறைகேடு நடந்துள்ளது. கருணை மதிப்பெண் என்பது நீட் வரையறையின் கீழ் வராது. குறிப்பாக, வட இந்தியாவில் பல மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை எதற்கு கொடுத்தார்கள் என்று தேர்வு முகமை விளக்கவில்லை.
இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த அஞ்சலி ஹிர்ஜிபாய் என்ற மாணவி மருத்துவக் கல்விக்கு தேவையான பாடங்களான வேதியியல் மற்றும் இயற்பியலில் தேர்ச்சி பெறவில்லை, அதே போல் உயிரியியலில் மிகவும் சொற்ப மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆனால் அவர் நீட் தேர்வில் 705/720 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? இது ஒரு மோசடியா, இல்லையா?
ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த தேர்வில் முழுமையாக தோல்வி அடைந்த ஒரு மாணவி சில நாள்களுக்குப் பிறகு நடந்த நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண் பட்டியல் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளதால் இது எப்படி நடந்தது என்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நீட் தேர்வில் தொட்ட இடமெல்லாம் மோசடியும், தில்லுமுல்லும் போட்டிப் போட்டுக் ெகாண்டு களத்தில் குதித்துள்ளன!
‘‘மருத்துவக் கல்லூரியில் சேரவும், அவர்களே மருத்துவர்களாகவும் தகுதி – திறமைப் பரிசோதனை தேவையில்லையா? அதற்குத்தான் இந்த ‘நீட்’’’ என்று நீட்டி முழங்கும் உயர் ஜாதியினரும், அந்த மனப்பான்மை கொண்டவர்களும், ‘நீட்’ தேர்வின் மோசடிகளுக்கு என்ன சமாதானம் – காரணம் சொல்லப் போகிறார்கள்?
‘மார்க்’ என்பதே தகுதி, திறமைக்கு அளவுகோல் அல்ல என்று தந்தை பெரியாரும், முதிர்ச்சி அடைந்த கல்வியாளர்களும் கூறியுள்ள நிலையில், ‘மார்க்’ வாங்கும் வழிமுறையிலும் மாபெரும் மோசடியும், தில்லுமுல்லும் நடந்து வருவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!
ஒழியட்டும் ‘நீட்’!
ஓங்கட்டும் சமூகநீதியாளர்களின் உரத்த குரல்!!