சம்பூகன் வெற்றி பெற்றார் – இராமன் தோற்றுப் போனான்!
பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு இதுதான் அடையாளம்!!
‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்” சிறப்புக்கூட்டத்தில்
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, ஜூன் 12 ‘‘அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் – இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் – இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம், ஜனநாயக ராஜ்ஜியம் என்றாயிற்று? இதுதான் பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளமாகும். அயோத்தியில் பெரியார் பெற்றி பெற்றார். இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை நாங்கள். 1971 ஆம் ஆண்டே நிரூபித்திருக்கின்றோம்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’’ சிறப்புக்கூட்டம்!
நேற்று (11.6.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஒரு பெரிய ஆபத்திலிருந்து ஜனநாயகத்தை இன்றைக்குக் காப்பாற்றியிருக்கின்றோம்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளைப்பற்றி இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அதனை ஆய்வு செய்து – நோய்த் தொற்று ஏற்படும் காலகட்டத்தில், அந்த நோயைப்பற்றி ஆய்வு செய்யவேண்டியது ஒரு மருத்துவரின் கடமை. அந்த நோயிலிருந்து வெளியே வந்தாலும்கூட, அந்த நோயிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று நினைப்பதைவிட, வெளியில் வந்தவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஆய்வு செய்வது என்பது எப்படி மருத்துவரின் கடமையோ – அதுபோல, ஜனநாயகத்திற்கு வந்த மிகப்பெரிய நோய்க்கு – வரவிருந்த ஒரு பெரிய ஆபத்திலிருந்து இன்றைக்கு வெளியில் வந்திருக்கின்றோம் என்பது இந்தத் தேர்தல் முடிவு காட்டியிருக்கின்ற மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது எங்களைப் போன்றவர்கள் எல்லாம் சொன்னோம். உங்களுக்கும் அது தெரியும். அதை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை – இது அறிவார்ந்த அரங்கம் என்பதால்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியல்ல –
ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான்!
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், அந்த ஆட்சியை பி.ஜே.பி. ஆட்சி என்று சொல்வதற்கில்லை. உண்மையில் மோடியை அந்தப் பதவியில் அமர்த்தியது ஆர்.எஸ்.எஸ்.தான். ஆட்சி செய்ததும் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான்.
ஆனால், பிரதமர் மோடிக்கு அது நினைவிருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதனை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்பதை அவர்கள் வெளியில் சொல்ல விரும்புவதில்லை. ஏனென்றால், அது உள்விஷயம் என்பதால்.
ஆகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் உத்தரவுப் போடும் இடம். அந்த உத்தரவுக்குக் கீழ்படிவதுதான் அதனுடைய அரசியல் பிரிவாக இருக்கின்ற, சங் பரிவாரின் அரசியல் பிரிவாக இருக்கக்கூடிய பி.ஜே.பி.
தொடக்கத்தில் ‘சவுக்கிதார்’ –
கடைசியில் ‘கடவுள் அவதாரமாம்!’
ஆனால், இப்பொழுது எல்லாம் மாறிப் போய்விட்டது. மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு பதவியேற்கும்பொழுது அவர் தன்னை ‘‘சவுக்கிதார்” என்று சொன்னார். தன்னை ஒரு பாதுகாவலன் என்று சொன்னார். ஆனால், கடைசியில் அது படிப்படியாக மாறிப் போயிற்று.
முதலில், நாட்டைப் பாதுகாப்பதற்காக வந்தி ருக்கின்றேன், தொண்டாற்ற வந்திருக்கின்றேன் என்று 2014 இல் சொன்னவர், அது எப்படி படிப்படியாக மாறி வந்து, 2024 இல், கடந்த 10 ஆண்டுகளில் அவர் ‘‘அவதாரமாகவே” ஆகிவிட்டார்.
‘ஜீவாத்மா, பரமாத்மா என்று மகாத்மாவிற்கே’ தெரியும். அந்த அளவிற்கு டபுள் புரமோஷன். நாம் வெறும் ஆத்மாவையே நம்புவதில்லை.
பெரியார் கேட்ட கேள்விக்கு
இதுவரை பதில் இல்லை!
மக்கள் கேட்ட கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லியிருக்கிறாரே தவிர, பெரியார் அவர்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை.
அய்யா கேட்டார், ‘‘ஆத்மா ஒரு உடலிலிருந்து பிரிந்து, இன்னொரு கூட்டுக்குள் போய்விடும்; ஆத்மாவிற்கே இறப்பே கிடையாது, உடல்தான் இறந்து போகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், ‘ஆத்மா’ என்று ஒன்று இல்லை, இல்லவே இல்லை” என்றார்.
அதிலும் பலவகையான ஆத்மாக்கள் – சாதாரண ஆத்மா, தவறு செய்கின்ற ஆத்மா – துர்ஆத்மா – அதை செய்யாத மகாத்மா – ஜீவாத்மா – ஜீவாத்மாவிற்கு மேலே பரமாத்மா என்று பலவகையான ‘கிரேடுகள்’ வைத்தி ருக்கிறார்கள்.
ஆனால், கடைசியாக இப்பொழுது என்ன நடந்தது என்றால், மக்களுக்கு நியாயமான சந்தேகம் எழுந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வயதான பாதிரியார் ஸ்டெயின் சாமி அவர்கள் இறந்தே போனார். அதேபோன்று பல பேரைப் பார்த்தீர்களேயானால், பேராசிரியர்கள், அறி வாளிகள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையின் பல பகுதிகளை சிறைச்சாலையில் கழிக்கிறார்கள். சிலர் பிணை பெற்று வெளியே வந்திருக்கிறார்கள். அந்தப் பிணையை ரத்து செய்யவேண்டும் என்று அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே
பாதுகாப்பு இல்லாத நிலை!
உச்சநீதிமன்ற நீதிபதிகளே, தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என்று வெளிப்படையாகவே சொல்லக்கூடிய சூழல்கள் எல்லாம் வந்தன.
எனவே, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கச் சொல்வதற்காக – விளக்கம் சொல்வதற்காக உச்சநீதி மன்றம் உள்ளது.
உச்சநீதிமன்றம்தான் கடைசி நம்பிக்கை குடி மக்களுக்கு. ஆனால், அந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளே, தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது இந்த மோடியினுடைய ஒன்றிய ஆட்சி யில்தான் வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளித்தனர்.
இதுவரையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாரும் இப்படிச் சொன்னதில்லை.
நமக்கு மோடி என்கிற நபர்மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபமோ, வெறுப்போ அல்லது விரோதமோ, குரோதமோ கிடையாது.
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?
அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றிய ஆட்சியை நடத்துவதற்குரிய ஒரு தலைவராக அமர்ந்தி ருக்கின்றார் என்று சொன்னால், அவர் என்ன உத்தரவாதம் கொடுத்தார் என்பது மிக முக்கியம் அல்லவா!
ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொன்னார்.
அதை நம்பி, அன்றைக்கு வேலை கிட்டாமல் இருந்த இளைஞர்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு அதெல்லாம் ‘‘ஜூம்லா” என்று சொன்னார்கள்.
‘அக்னிபாத்’ என்று சொல்லி, ராணுவத்தையே டெம்ப்ரவரியாக்கினார்கள்!
இவற்றையெல்லாம் செய்யவில்லையே என்று கேட்கக்கூடிய நிலைமை ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அதைவிட பெரிய ஆபத்து – வேலையில்லாத் திண்டாட்டம் – வேலை வாய்ப்புக்காக ஏராளமாகப் பெருகிய இளைஞர்களுக்கு சரியான திட்டத்தை வகுக்காமல், ‘அக்னிபாத்’ என்று சொல்லி, ராணுவத்தையே டெம்ப்ரவரியாக ஆக்கி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை அனுப்பி விடுவோம் என்று சொன்னார்கள். அதுவேதான் இன்றைக்கு பீகார் பற்றி எரிவதற்கு மிகப்பெரிய அடிப்படையாகும்.
பதவி நாற்காலியில்,
இரண்டு கால்கள் இரவல் கால்கள்!
இன்றைக்கு ஒன்றிய அமைச்சர்களாக ஆகியி ருக்கிறார்களே, அவர்கள் ‘அக்னிபாத்’ திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? நிதிஷ்குமாரிலிருந்து, கூட துணையாக இருக்கக்கூடியவர்கள் – பிரதமர் பதவி நாற்காலிக்கு நான்கு கால்கள் இருக்கின்றன என்றால், இல்லை, இல்லை; நான்கு கால்கள் அல்ல; இரண்டு கால்கள்தான் இருக்கின்றன. மீதம் உள்ள இரண்டு கால்கள் இரவல் கால்களால்தான் நின்று கொண்டிருக்கின்றது அந்த நாற்காலி – அதுதான் கூட்டணி.
ஆனால், இதே பத்திரிகையாளர்கள் என்ன சொன்னார்கள்? இந்தியா கூட்டணி ஒன்று சேருமா? ஒரே கருத்தைச் சொல்லுவார்களா? இது எவ்வளவு நாள்களுக்கு இருக்கும்? என்றெல்லாம் கேட்டார்கள்.
ஆனால், அன்றைக்கு அப்படி கேட்டவர்களே, இன்றைக்குக் கூட்டணியை நம்பித்தான் வாழுகிறார்கள். அதுதான் வேடிக்கையானதாகும்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற சூழல் என்ன வென்றால், இங்கே உரையாற்றிய தோழர்கள் நிறைய சொன்னார்கள். நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.
விவாதங்களே இல்லாமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றினார்கள்!
ஜனநாயகம், எதேச்சதிகார சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் தனி நபரை குறி வைக்கின்ற நிலை அல்ல. ஆனால், இன்றைக்கு சட்டங்கள் எப்படி இருக்கின்றது என்றால், ‘‘யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கலாம்” என்கிற நிலைதான்.
விவாதங்களே இல்லாமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் சில மணிநேரங்களில் நிறைவேற்றப்படு கின்றன.
அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் – அடிக்கட்டு மானத்திற்கே விரோதமானவை எனப்படும் நிலை.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற அவர்களின் கனவு தகர்ந்தது!
இவையெல்லாம் வந்ததினால்தான், ஜனநாயகம், எதேச்சதிகாரத்தின் பக்கம் சென்றுவிட்டது. எனவே, மிகப்பெரிய நோயாக கோவிட்-19 – கரோனா தொற்று வந்து, மனிதர்கள் பிழைக்க முடியாது என்று எப்படி அச்சப்பட்டார்களோ, அதுபோல, நம்முடைய இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்து என்பது – 10 ஆண்டுகாலத்திற்குப் பிறகு, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற குரலெல்லாம் எழுந்த பிறகு, அதற்குரிய ஏற்பாடுகளை சில நாள்களில், சில வாரங்களில் முடித்து, தயாராக வைத்திருந்தார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அறிவிக்கலாம் என்று நினைத்தார்கள். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தார்கள். இப்பொழுது ‘நான் 100′ என்ற நிலைதான். நீங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்கள், ஆனால், காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
முதல் கட்டம் அவர்களுடைய வெற்றி எப்படி என்பதைப் பார்க்கவேண்டும் என்று இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
வெற்றி பெற்றவர் வருத்தத்தோடு இருக்கிறார்; தோற்றுப் போனவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்!
வெற்றி பெற்றவர், எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். தோல்வியுற்றவர், வருத்தமாக இருப்பார் என்பதுதான் இயல்பு.
ஆனால், இந்தத் தேர்தலில், மக்கள் கொடுத்திருக்கின்ற தீர்ப்பு இருக்கிறதே, வெற்றி பெற்றவர் வருத்தத்தோடு இருக்கிறார்; தோற்றுப் போனவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
காரணம் என்னவென்றால், தோல்வி அடைந்தவர், ‘‘இது நமக்குத் தோல்வியே அல்ல; தத்துவ ரீதியாக நாம் வெற்றி பெற்று இருக்கின்றோம். எண்ணிக்கை ரீதியாக தோற்று இருக்கிறோம்” என்பதை அழகாக அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இன்று வெளிவந்துள்ள ‘தினமலர்’ நாளேட்டில்கூட நாம் சொன்னதை கிண்டல் செய்து எழுதியிருக்கிறார்கள்.
தோல்விக்குச் சமமான வெற்றி!
ஆங்கிலம் படித்த நண்பர்களுக்குத் தெரியும். ‘Victory’ வெற்றி என்று சொல்லும்பொழுது, ‘Pyrrhic Victory’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்றால், A Victory as bad as defeater – தோல்விக்குச் சமமான வெற்றி என்பதுதான்.
எண்ணிக்கையைவிட நண்பர்களே, இப்பொழுது எல்லோரும் கொஞ்சம் மூச்சுவிடக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜனநாயகம் இன்றைக்குப் பொது வார்டுக்கு வந்திருக்கிறது!
கடந்த 10 ஆண்டுகாலத்தில், மோடி ஆட்சியில், ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில், இறுதிக்கட்டத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்தது.
இப்பொழுது நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவால், தீவிர சிகிச்சைப் பிரிவில் நல்ல அளவிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஜனநாயகம் பொது வார்டுக்கு வந்துவிட்டது.
பொது வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் ஒரு வர், அங்கேயே குடியிருக்கமாட்டார். நிச்சயமாக உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வெளியில் போவார்.
அதற்கு உதாரணத்தை வேறு எங்கும் தேடவேண்டாம்; இங்கே உரையாற்றுகின்ற நானே ஒரு உதாரணம்தான். இதற்காக நாம் அடுத்தவர்களை உதாரணத்திற்குத் தேடவேண்டிய அவசியமில்லை.
மருத்துவத்தினுடைய அதிசய விஞ்ஞான சாதனை!
எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, 33 ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுது நான் காலத்தைப் பைபாஸ் செய்துவிட்டேன். இது ஒன்றும் பெரிய சாதனையல்ல. ‘‘அது பகவான் செயல்” என்று சொல்வார்கள், மற்றவர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், ‘‘எல்லாம் டாக்டர்களின் செயல்; என்னுடைய ஒத்துழைப்பு – மருத்துவத்தினுடைய அதிசய விஞ்ஞான சாதனை” என்றுதான் சொல்வேன்.
அதுபோன்று, இந்தியா கூட்டணி இப்பொழுது தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும்கூட, மருத்துவ மனையில், பொது வார்டிலேயே இருக்காது. வெளியில் நிச்சயமாக வந்துவிடும். ஜனநாயகம் கண்டிப்பாகப் பிழைக்கும்.
எண்ணிக்கை எல்லாம் பிறகு. யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதெல்லாம் பிறகுதான்.
மனுதர்மத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக மாற்றுவோம் என்று சொன்னவர்களுக்குத்தான் தோல்வி!
புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்களால் எழுதப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், அதனுடைய முகப்புரையில் எழுதப்பட்ட தத்துவங்கள், உரிமைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிடுவோம்; மனுதர்மத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் இருந்த இடத்தில் வைப்போம் என்று சொன்னவர்களுக்கு ஏற்பட்டதுதான் தோல்வி.
எனவேதான், தோற்றவர்கள் மகிழ்ச்சிய டைகிறோம். வெற்றி பெற்றவர்களால், ‘‘அய்யோ, நாம் மனுதர்மத்தை அரசாட்சி அடிப்படையாகக் கொண்டு வர முடியவில்லையே! நாம் நினைத்த சமதர்மமற்ற நிலையை நிலைநாட்ட முடியவில்லையே; சமூகநீதியை நாம் சொல்லவேண்டிய நிலை இருக்கிறதே” என்று வருத்தப்படுகின்ற நிலைதான் இன்றைக்கு.
கொள்கையைப்பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை!
ஆட்சியில் இருக்கின்றவர்கள், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று நினைத்தார்களே தவிர, கொள்கையைப்பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.
நேற்று ஒன்று சொல்வார்; இன்றைக்கு அதை மாற்றி சொல்வார்; இது அவருடைய வழமையான செயலாகும்.
இங்கே உரையாற்றிய நம்முடைய தோழர்கள் இராமன் கோவிலைப்பற்றி சொன்னார்கள். இன்னும் முழுமையாக அந்தக் கோவில் கட்டி முடிக்கப்படவில்லை. அதற்குள்ளேயே திறப்பு விழாவினை நடத்தினார்கள். ஏனென்றால், மோடி அவர்களின் நோக்கம் என்ன வென்றால், தேர்தலுக்கு அது பயன்படவேண்டும் என்பதற்காகத்தான்.
இராமன் கோவில் திறப்பு விழா தேர்தலுக்குப் பயன்பட்டதா?
ஆனால், அவருடைய நோக்கம் நிறைவேறியதா? தேர்தலுக்கு, இராமன் கோவில் திறப்பு விழா பயன்பட்டதா? இராமன் பயன்பட்டானா?
தமிழ்நாடு, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இங்கே வராதவர் பிரதமர் மோடி, ஆனால், எல்லா ஊர்களிலும் இருக்கின்ற தண்ணீரை எடுத்து, இராமனைக் குளிப்பாட்டினார்.
இன்றைக்கு என்ன நிலை?
அயோத்தியில் பெரியார் வெற்றி பெற்றார்!
அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் – இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் – இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம், ஜனநாயக ராஜ்ஜியம் என்றாயிற்று.
இதுதான் பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளமாகும். அயோத்தியில் பெரியார் பெற்றி பெற்றார்.
இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை நாங்கள். 1971 ஆம் ஆண்டே நிரூபித்திருக்கின்றோம்.
1971 இல் ஏற்பட்ட நிலைதான் –
2024 ஆம் ஆண்டிலும்!
இங்கே இருக்கின்ற சிலர் அன்றைக்குப் பிறந்திருக்கமாட்டார்கள்; வயதானவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். சேலத்தில் நடை பெற்ற கழக ஊர்வலத்தில், ‘‘இராமனை அவ மதித்துவிட்டார்களே” என்று சொல்லி, ஒரு தவ றான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். தி.மு.க. தோழர்களே, கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். ‘‘நாம் ஆட்சிக்கு வருவதைக் கெடுத்துவிட்டார்களே திராவிடர் கழகத்துக்காரர்கள்” என்று சொன்னார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
காமராஜரும் – இராஜகோபாலாச்சாரியாரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்த காலகட்டம் அது.
‘‘இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?’’
ஆனால், பிற்காலத்தில் காமராஜர் சொன்னார், ‘‘என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய அரசியல் தவறு, இராஜகோபாலச்சாரியாரோடு தேர்தலில் கூட்டணி வைத்ததுதான்” என்றார்.
அந்தத் தேர்தலில், ‘‘இராமனை செருப்பாலடித்த வர்களுக்கா உங்கள் ஓட்டு?” என்று பெரிய பெரிய போஸ்டர்களை அடித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இந்த யோசனையை சொன்னவர், ‘துக்ளக்’ சோ அவர்கள்தான்.
அதே நிலைதான் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்திலும்.
இடிப்பது யார் பழக்கம்? என்று எல்லோருக்கும் தெரியும்!
தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி என்ன சொன்னார்? ‘‘இந்தியா கூட்டணிக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்றால் என்னாகும் தெரியுமா?” என்றார்.
‘‘மீண்டும் பால இராமர் டெண்டுக்கே போய்விடுவார்; இராமர் கோவிலை இடித்துவிடுவார்கள்” என்றார்.
இடிப்பது யார் பழக்கம்? என்று எல்லோருக்கும் தெரியும். கடப்பாரை யார் கையில் இருந்தது என்பதும் தெரியும்.
அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்துதான், இராமன் கோவிலை கட்டியிருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
அயோத்தியில் உள்ள பைசாபாத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார். இராமன் கோவிலும் பத்திரமாகத்தான் இருக்கிறது.
அயோத்தியைச் சுற்றியுள்ள அய்ந்து தொகுதிகளிலும்
பா.ஜ.க. கூட்டணியினரால் வெற்றி பெற முடியவில்லை!
மசூதியை இடித்ததினால்தான், அவர்கள் தோற்றுப் போனார்கள். அயோத்தியைச் சுற்றி யுள்ள அய்ந்து தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி யினரால் வெற்றி பெற முடியவில்லை.
1971 இல் தமிழ்நாட்டு சேலத்தையும் – 2024 இல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியும் – இங்கே இருக்கின்ற பால இராமர் – தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரியார் ராமர் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் என்னவென்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மோடி, இராமனைக் கைவிட்டுவிட்டார்; அதுதான் நமக்கு மிகப்பெரிய வெற்றி
ஏன் தோற்றவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் – வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று சொன்னால், இதில் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய செய்தி என்னவென்றால், அயோத்தில் உள்ளவர்கள் இராமனை நம்பாமல், இராமன் கோவில் திறப்பிற்காக ஓட்டுப் போடாமல் விட்டவர்கள் எல்லாம் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள்.
(தொடரும்)
அயோத்தியில் பெரியார் வெற்றி பெற்றார்!
அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் – இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் – இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம்!ஜனநாயக ராஜ்ஜியம் என்றாயிற்று?
இதுதான் பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளமாகும். அயோத்தியில் பெரியார் பெற்றி பெற்றார்.
இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை நாங்கள். 1971 ஆம் ஆண்டே நிரூபித்திருக்கின்றோம்.