சென்னை, ஜூன் 11- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் இன்னமும் கூட முறை யாக தொடங்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கி கணக்கு எண் ஆகிய சேவைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (10.6.2024) தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசிடம் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கை. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முழுமையாக ஜேஅய்சிஏ (JICA)விடம் கடன் கேட்டு கட்டுவதற்குதான் திட்டமிட்டிருந்தார்கள். மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தோடு கட்ட முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜேஅய்சிஏ நிதி ஆதாரத்தோடு கட்ட முடிவெடுத்திருந்தார்கள். இன்னமும் கூட அந்த பணிகள் முறையாக தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் நில ஒப்படைப்பு, சுற்றுச்சூழல் அனுமதி தந்தாகிவிட்டது. இந்த புதிய அரசாவது ஜேஅய்சிஏ-விடமிருந்து நிதி கேட்டு காலம் கடத்துவதை விட்டுவிட்டு, ஒன்றிய அரசே நிதி தந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை கட்டித்தந்தால் நன்றாக இருக்கும்.
இதுவரை 150 மாணவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இடநெருக்கடி இருந்து கொண்டிருக்கிறது. விரைந்து கட்ட வேண்டிய அவசியமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.