தேர்தலுக்குப்பின் மதவெறியர்களின் வெறியூட்டும் பேச்சுகள் – ஆபத்தானவை!

3 Min Read

அயோத்தியில் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவருமான அவதேஷ் பிரசாத்தை வெற்றி பெறச்செய்த மக்களை ஹிந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து இழிவுபடுத்தி காணொலிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அயோத்தி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதி யில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும் அம்பேத்கரிய வாதியும் பவுத்த சமயத்தைச் சேர்ந்தவருமான அவதேஷ் பிரசாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட – மூன்று முறை தொடர்ந்து பைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற – பாஜகவைச் சேர்ந்த லாலுசிங் என்பவரை தோற்கடித்தார்.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. பெரும்பாலான தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித்தொகுதிகளில் வெற்றி வாகை சூடி பாஜகவை விட அதிக இடங்களை இம்முறை இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இதனால் ஹிந்துத்துவ அமைப்பினர் மிகவும் மோசமான வகையில் சமூகவலை தளங்களில் பேசிவருகின்றனர்.
ராஜஸ்தான் பிள்வாரா பகுதியைச் சேர்ந்த பவன் சாகூ என்பவர் குறிப்பாக அயோத்தி மக்களை மிகவும் ஆபாசமான வசைச்சொற்களால் திட்டி காணொலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அயோத்திநகரில் வாழும் ஹிந்துக்களின் முன்னோர்கள் முசல்மான்களா என்றும், அயோத்தி மக்கள் ஆண்மையற்றவர்கள் என்றும் வேலை வாய்ப்பு இன்மை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு இது போன்ற சின்ன சின்ன நெருக்கடிகளுக்கு பலியாகி – நமது ஹிந்துமதத்தின் பாதுகாவலராக விளங்கிய மோடிக்கு இழிவைத் தேடித்தந்துவிட்டீர்கள்–
நீங்கள் ஓர் உயர்ஜாதி நபரைத் தேர்ந்தெடுத்தி ருந்தால்கூட நாங்கள் விட்டுவிடுவோம் ஆனால் ராமரின் மண்ணில் நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் தகுதியானவரா (அவர் தாழ்த்தப்பட்டவர்) என்று பார்க்கவேண்டாமா?
உங்களால் ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் வெட்கப்படுகிறது!
நீங்கள் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்களின் பெயர் தெரியாத முஸ்லீம் அப்பனின் குல்லாவை வாங்கி அணிந்துகொள்ளுங்கள். இனி நீங்கள் ஹிந்து என்று கூறிக்கொள்ளாதீர்கள்! என்று மிகவும் மோசமாக பேசி காணொலியை வெளியிட்டுள்ளார்.
இந்து ராஜ்யம் அமைக்கப் போவதாக வாய்ப்பறை கொட்டும் கும்பல், இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை என்று நினைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காவல்துறை யினரிடம் இணையவழியில் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து பவன் சாகூ எனும் அந்த நபர் தான் வெளியிட்ட அத்தனை காணொலிகளையும் அழித்துவிட்டு – தான் பாஜக கட்சியின்சார்பில் ராஜஸ்தான் முதலமைச்சராக இருக்கும் பஜன்லால் சர்மாவோடு இருக்கும் ஒளிப்படத்தை தொடர்ந்து பதிந்து, தன்னை ராஜஸ்தான் காவல்துறை ஒன்றும் செய்யக்கூடாது, நான் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவன் என்றும் பேசி வருகிறார். இது வரை ராஜஸ்தான் காவல்துறை இவர்மீது எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இவரைப் போன்றே பலர் தொடர்ந்து மிகவும் மோசமாக சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். தர்மேந்திர ராகவ் என்பவர் இஸ்லாமியர் போன்று வேடம் அணிந்து அயோத்தி ஹிந்துக்களை கேவலமான முறையில் பேசியுள்ளார்! இவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது, தன் மீது புகார் அளிக்கப்பட்டது. என்று தெரிந்த பிறகு தர்மேந்திரா ராகவ் தலைமறைவாகி விட்டார்.

ஏற்கெனவே இது தொடர்பாக அரியானாவில் தக்கேஷ் சவுத்ரி என்பவரும் அவரது நண்பர் ஒருவரும் அயோத்தி ஹிந்துக்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள், இல்லை என்றால் எங்கு பார்த்தாலும் கொலை செய்வேன் என்று கூறியிருதார், இது தொடர்பாக புகார் அளித்ததும் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உ.பி. மக்கள் பிஜேபிக்குச் சரியாகப் பாடம் கற்பித்துள்ளனர்; பட்டும் புத்தி வரவில்லை – மதவெறி பிஜேபிக்கு; உ.பி.யில் பெருவாரியாக பிஜேபி வெற்றி பெற்று இருந்தால் இஸ்லாமிய மக்களின் நிலை என்னவாகி இருக்கும்? நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது. பிஜேபி – சங்பரிவார்களை முற்றாக மக்கள் நிராகரித்தால்தான் நாடு அமைதி பெறும் – வளம் பெறும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *