சட்டப் பேரவை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

2 Min Read

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு சட்டப்பேரவை வருகிற 24ஆம் தேதி கூடும் நிலையில், என்னென்ன தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து நாளை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்கிறது.

2024ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 19ஆம் தேதியும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை கூட்டம் முடிந்ததும், மார்ச் மாதம் துறை வாரிய மானிய கோரிக்கை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான கூட்டம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் அந்த கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் “தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 24ஆம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும்” என்று கடந்த வாரம் அறிவிக் கப்பட்டது. இந்த கூட்டத்தில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் மீது எந்தெந்த நாட்களில் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து நாளை (12.6.2024) தலைமை செய லகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *