கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்… ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
அன்னாசி:
இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கக் கூடியது.
இலந்தை:
இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.
ஆப்பிள்:
தூக்கத்தில் நடமாடும் பிரச்சினை உள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுப்பது நல்லது. இருதய நோய்களுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்ணலாம்.
ஆரஞ்சு:
ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுக்கப்படுகிறது. உணவுக் கழிவுகள் குடலில் தங்கி விடாமல் தடுக்கிறது. முகப்பருவிற்கு ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
திராட்சை:
உடல் சூட்டை தணிக்கும். கபக்கட்டு நீக்கும். ரத்தம் விருத்தியாகும். மூளைத் திறன் அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை அகற்றும். ஆஸ்துமா பிரச்னைக்கு திராட்சை ரசம் நல்ல பலன் அளிக்கும். சிறுநீரக அழற்சியை நீக்கும்.
நெல்லிக்கனி:
நீண்ட ஆயுளைத் தரும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு நெல்லிக்கனிச்சாறு பலன் தரும். இதன் சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் சுவாசக் கோளாறு, விக்கல், பித்த மயக்கம் குணமாகும்.
பப்பாளி:
பப்பாளியில் வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. ஜீரணம் ஆகக் கூடியது. இளமையும், அழகும் தருவது. பெண்களின் கருப்பைத் தசை நார்களை சுருங்கச் செய்வதற்கு பப்பாளி உதவுகிறது. முறையான மாதவிடாய்ப் போக்கை நிகழ்த்தும்.