தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள் வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து

சென்னை, ஜூன் 9 மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்புக் கனவை தொலைத்து மட்டுமல்லாமல், பல்வேறு குழப்பங்களையும் சந்தித்து வருகிறார்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால், மன உளைச்சல் காரணமாக கடந்த ஆண்டுகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடே கொந்தளித்தபோதும், இதனை எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஒன்றிய அரசு தேர்வை நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளும் திமுக அரசு நிறைவேற்றி அனுப்்பினாலும், அதனை தொட்டுக் கூடப் பார்க்காத ஆளுநராகத்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்து வருகிறார்.

முதன் முதலில் தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் பரவி, நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையில்தான் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகளும், குழப்பங்களும் அரங்கேறியுள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் மே 5ஆம் தேதி 4,750 மய்யங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் இந்த முறை 67 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், டில்லி, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கருநாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்குவங்கம் ஆகிய 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராஜஸ்தானில் 11 பேரும், தமிழ்நாட்டில் 8 பேரும், மகாராட்டிராவில் 7 பேரும் முதலிடம் பெற்றுள்ளனர். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத்தாளில் இடம் பெற்றிருந்தன. நீட் தேர்வைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகடிவ் மார்க் என்ற முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும். அவ்வாறு கணக்கிடும்போது அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர் சரியாக விடையளிக்கும்போது 720 மதிப்பெண்கள் கிடைக்கும்.

தவறாக விடை அளித்தாலும் மதிப்பெண்ணா?
ஒரே ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான 4 மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அந்த வகையில் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அளித்துள்ள விளக்கத்தில், “தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் சில காரணங்களால் எதிர்பாராமல் விரையமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 பேர் கைது
ஆனால், எப்போது, யாரெல்லாம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேபோல், நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஒரே மய்யத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் சில மாணவர்கள் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டி பதிவுகள் வெளியிட்டுள்ளனர். முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தபோதிலும், இந்த விவகாரம் தொடர்பாக 13 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தி லிருந்து மட்டும் 11 பேர் நடப்பாண்டில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஆண்டில் 720-க்கு 137 என இருந்த கட்-ஆஃப் மதிப்பெண் நடப்பாண்டில் 720-க்கு 164 ஆக உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் பெருமளவு மோசடி நடந்திருப்பதாக மனுவில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். வழக்கின் விசாரணை 12ஆம் தேதி நடைபெறும் என்று டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆக, தமிழ்நாடு கருதுவது போல், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு கனவாக மட்டுமல்ல, பெரும் தலைவலியாகவும் இருந்து வருகிறது. மாணவர்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் நீட் தேர்வை அகற்ற முடியும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு என்பது வணிக சூதாட்டம்
நீட் தேர்வு குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நீட் தேர்வின் முறைகேடு இந்த ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மய்யங்கள் இருக்கின்றன. எப்படி ஒரு மய்யத்தில் இருந்தவர்கள் மட்டும் முழு மதிப்பெண்கள் பெற்றனர்? அவர்களின் பெயர்கள் முழுமையாக இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். கருணை மதிப்பெண் வழங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை. மதிப்பெண் குளறுபடிகள் மட்டுமல்ல, மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பும் இந்த ஆண்டு குளறுபடியாகத்தான் இருக்கும்.

கடந்த முறை 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இந்த முறை 660 மதிப்பெண்கள் எடுத்தவருக்கு கூட இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. தனியார் பயிற்சி மய்யங்களின் வருமானத்திற்காக இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நீட் தேர்வு என்பது வணிகத்தின் சூதாட்டம். இதனை மாணவர்களை வலுவான போராட்டத்தின் மூலமே தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

TAGGED:
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *