நியூயார்க், ஜூன் 9- உலகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட நான் கில் ஒரு குழந்தை “கடுமையான” உணவு வறுமையில் வாழ்கின்றது என அய்.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
போதிய அளவு சத்தான உணவுகள் கிடைக்கா மல் உயிர் பிழைத்து மோசமான சூழலில் வாழும் குழந்தைகளின் நிலையை அந்த அறிக்கை விவரித்துள்ளது.
ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் வளர அய்.நா. குழந்தைகள் நிதியம் எட்டு முக்கிய உணவு தொகுப்புகளை பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய அதில் 5 உணவு தொகுப்புகளையாவது குழந்தைகள் சாப்பிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தாய்ப்பால்; தானியங்கள், வேர்கள், கிழங்குகள் மற்றும் வாழைப்பழங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி மற்றும் மீன், முட்டைகள், வைட்ட மின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பிற பழங்கள் காய்கறிகள் ஆகிய 8 உணவு வகை தொகுப்புகளை (அதில் உள்ள சத்துக்கள்) குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என அய்.நா குழந்தை கள் நிதியம் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.
44 கோடி குழந்தைகள்
இந்நிலையில் தான் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 100 நாடுகளில் வாழும் 5வயதுக்குட்பட்ட 44 கோடி குழந்தைகள் உணவு வறுமையில் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது. அதாவது, அக்குழந்தைகளின் தினசரி உணவுகளை அய்.நா. குழந்தைகள் நிதியத்தின் உணவு வழிகாட்டுதலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 5 வகையான உணவுகளைக் கூட அந்த குழந்தைகளால் பெற முடியவில்லை. அதிகபட்சமாகவே இரண்டு வகை உணவில் உள்ள சத்துக்கள் மட்டும் தான் அவர்களுக்கு கிடைக்கிறது என அய்.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த குழந்தைகளில் 18.1 கோடி பேர் “கடுமையான உணவு வறுமையை” அனுபவித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எட்டில் இரண்டு…
ஒரு நாளைக்கு இரண்டு உணவு தொகுப்புகளை மட்டுமே அதிகபட்சமாக உட்கொள்ளும் குழந்தைகளும் அரிசி, பால் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இதனால் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுகளை குழந்தைகள் அனுபவிக்கிறார்கள் என அய்.நா. குழந்தைகள் நிதியக தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான ஊட்டச்சத்துள்ள இக்குழந்தைகள் உயிர் பிழைத்து வளர்ந்தாலும் அவர்களால் முழுமையான வளர்ச்சி கொண்ட குழந்தைகளாக இருக்க இயலாது. இதன் காரணமாக அவர்கள் குறைந்த திறனுடையவர்களாகவே இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திறன் குறைபாட்டின் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின் தங்கி இருப்பார்கள். இதனால் அவர்களின் வறுமை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் அபாயம் உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.