சென்னை, ஜூன் 9 தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதிமுக 8 தொகுதிகளிலும் பாமக 3 தொகுதிகளிலும் தேமுதிக 2 தொகுதிகளிலும் மட்டும் தான் அதிக வாக்கு வாங்கியுள்ளன.
எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் பாமக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக 1 தொகுத்தியில் கூட அதிக வாக்குகளைப் பெற வில்லை.
கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்உள்ள தொகுதியிலேயே பாஜக அதிக வாக்குகள் பெறாத நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.