வணிக ஏடுகள் மக்களின் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும்!
வணிக ஏடுகள் குப்பைக்குப் போகும்; கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும்!
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில், தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளக்கவுரை !
சென்னை, ஜூன் 9 ‘‘வணிக இதழ்கள், மக்கள் பின்னால் செல்லும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அதை எழுதும். திரைப்படத் துறையில் கிசுகிசுதான் பிடிக்கும் என்றால், வண்டி வண்டியாக எழுதும். இந்த வணிக ஏடுகள் மக்களின் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும். வணிக ஏடுகள் குப்பைக்குப் போகும்; கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும்” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை எடுத்து விளக்கினார் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
கடந்த 1.6.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘விடுதலை 90’ ஆம் ஆண்டுதொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
மானமிகு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, திராவிடர் இயக்க ஆய்வாளர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மேடையில் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்களே, அரங்கில் கூடியிருக்கின்ற அருமைத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘விடுதலை’ ஏடு 90 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் அதனுடைய சிறப்பு இல்லை.
வெளிவந்துகொண்டிருக்கின்ற ‘விடுதலை’ ஏடு என்ன செய்திருக்கிறது என்பதுதான்.
‘விடுதலை’ ஏட்டினுடைய சிறப்பிதழில்…
இன்றைக்குக் காலையில் வெளியாகி இருக்கின்ற ‘விடுதலை’ ஏட்டினுடைய சிறப்பிதழில் கரிகாலன் என்பவருடைய ஒரு கவிதை வெளிவந்திருக்கிறது.
அந்தக் கவிதை இப்படித் தொடங்குகிறது.
‘‘செருப்புத் தைக்கின்றவரின் மகன்
அய்.அய்.டி., செல்கிறார்
மலம் அள்ளியவரின் பெயர்த்தி
மருத்துவம் படிக்கிறார்
எந்தக் கோவிலுக்கு நுழையக் கூடாது என்று தடுத்தார்களோ, அதே கோவிலுக்குள் அவர்களின் வாரிசுகள் இன்றைக்கு அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ‘விடுதலை’ சாதித்திருக்கிறது.
தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்!
சரியாகச் சொன்னால், 90 ஆண்டுகளாக நாம் ‘விடுதலை’ பத்திரிகையை நடத்திக் கொண்டா இருக்கிறோம்? யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்; தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த யுத்தங்கள் எல்லாம் நடக்கும் என்று அய்யா பெரியார் அவர்கள் அன்றைக்கே எழுதியிருக்கின்ற செய்தி இங்கே வெளியிடப்பட்ட ‘விடுதலை’ களஞ்சியத்திலே பதிவாகியிருக்கிறது.
ஆசிரியர் என்று ஏன் அழைக்கிறீர்கள்?
இளைஞர் ஒருவர் என்னிடத்தில் கேட்டார். எதற்காக எப்பொழுதும் அய்யாவை, ஆசிரியர் என்று அழைக்கிறீர்கள்? அவர் பள்ளிக்கூடத்திலோ, கல்லூரியிலோ ஆசிரியராக இருந்திருக்கிறாரா? என்று கேட்டார்.
‘‘இல்லை, பள்ளியில், கல்லூரியில் ஆசிரியர்களாக இருக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆசிரி யராக இருக்கிறார்” என்று நான் சொன்னேன்.
இது ஒரு பக்கம்.
‘விடுதலை’ ஏட்டில் 62 ஆண்டுகளாக அவர் ஆசிரியர்!
ஆனால், அய்யா அவர்களை ஆசிரியர் என்று நாங்கள் அழைப்பதற்கான காரணம், ‘விடுதலை’ ஏட்டில் 62 ஆண்டுகளாக அவர் ஆசிரியராக இருக்கிறார்.
எவ்வளவு பேர் இத்தனை ஆண்டுகாலம் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து ஆசிரியராக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆசிரியர் பொறுப்பேற்கின்ற பொழுது அய்யாவிற்கு வயது 29 என்று கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்னார்.
29 வயதில் பொறுப்பேற்றார்; 92 வயதை நெருங்கு கின்றபொழுதும் அவரே ஆசிரியராக இருந்து நடத்திக் கொண்டிருக்கின்றார் என்பது இன்றைய விழாவின் மிகப்பெரிய சிறப்பு.எனக்குக் கிடைத்திருக்கின்றபெரிய சிறப்பு!
இந்த விழாவில், எனக்குக் கிடைத்திருக்கின்ற பெரிய சிறப்பு, இந்த ‘விடுதலை’ களஞ்சியத்தைப் பெற்றுக்கொண்டது மட்டுதான் என்று நான் கருதினேன். ஆசிரியரே வந்து எனக்குப் பொன்னாடை போர்த்துகின்ற பெருமையையும் இந்த மேடை எனக்குத் தந்திருக்கின்றது.
எப்பொழுதாவதுதான் வாழ்வில் இப்படிப்பட்ட பெருமைகள் வந்து சேரும்.
அய்யா ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அய்யா பெரியார் அவர்கள், ‘விடுதலை’ நாளேட்டைத் தொடங்குகின்ற பொழுது ஒரு செய்தியை எழுதியிருக்கிறார்.
நான் என் உரையைத் தொடங்குவதற்குமுன் ஒரு வேண்டுகோளை வைக்கவேண்டும்.
‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியில் ஏறத்தாழ 80 பக்கங்கள் ஓர் ஆய்வு முன்னுரையை ஆசிரியர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அதை அப்படியே இன்னொரு சிறு நூலாகத் தொகுத்துவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏராளமான செய்திகள். களஞ்சியத்திற்கு உள்ளும், முகவுரையிலும். நான், 10 நிமிடங்களுக்குள்தான் பேசப் போகிறேன். ஆசிரியர் அவர்களிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டேன். இங்கே பேசி முடித்தவுடன், நான் உடனடியாகப் புறப்பட்டு அரியலூருக்குச் செல்லவேண்டும்.
ஆகையினால், ஆசிரியர் அவர்களுடைய பேச்சையும், அண்ணன் திருநாவுக்கரசு அவர்களின் பேச்சையும் கேட்காமல் இடையிலேயே நான் விடைபெற வேண்டி இருக்கிறது – அதற்காக ஆசிரியரும், இந்த அவையும் என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும்.
பத்திரிகைகள் இரண்டு வகை!
அய்யா பெரியார் அவர்கள் என்ன எழுதியிருக்கின்றார் என்றால், பத்திரிகைகள் இரண்டு வகை.
தங்களுடைய தொழிலாக, வருமானத்திற்கான வழியாக ஒரு சுயநலத்தின் அடிப்படையில், மக்களின் பொழுதைப் போக்குவதற்காகத் தொடங்குகின்ற பத்திரிகைகள் ஒருவிதம்.
கொள்கைகளைச் சொல்வதற்காக மட்டுமே தொடங்கு கின்ற பத்திரிகைகள் இரண்டாவது விதம்.
முதல் விதப் பத்திரிகைகள் லட்சக்கணக்கில்கூட மக்களைச் சென்றடையும்.
இரண்டாவது விதப் பத்திரிகைகள் ஆயிரங்களைத் தொடுவதே கடினம். இது பெரியார் எழுதியிருக்கின்ற முதல் வரி.
இரண்டாவதாகச் சொல்லுகிறார், அதுதான் மிக முக்கியமான வேறுபாடு.
கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும்!
வணிக இதழ்கள், மக்கள் பின்னால் செல்லும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அதை எழுதும். திரைப்படத் துறையில் கிசுகிசுதான் பிடிக்கும் என்றால், வண்டி வண்டியாக எழுதும். இந்த வணிக ஏடுகள் மக்களின் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும். இதுதான் வேறுபாடு.
வணிக ஏடுகளுக்கு வரவேற்பு இருக்கும். ஆனால், கொள்கை ஏடுகளுக்கு எதிர்ப்புகள் போதுமான அளவிற்கு வந்து சேரும். அதன் விற்பனை பெருகும்; இங்கே எதிர்ப்புகள் பெருகும்.
ஓர் ஏடு 90 ஆண்டுகளாக நடப்பது என்பது அதிசயம் என்றுதான்!
எப்படிப்பட்ட எதிர்ப்புகள்? நாம் சந்தித்திருக்கின்ற எதிர்ப்புகள் எப்படிப்பட்டவை?
அரசாங்கம் எதிர்க்கும்
மதவாதிகள் எதிர்ப்பார்கள்
பார்ப்பனர்கள் எதிர்ப்பார்கள்
பணக்காரர்கள் எதிர்ப்பார்கள்
அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டித்தான் ஒரு கொள்கை ஏடு நடக்கலாம். அதுவும் கடவுளை மறுத்து, ஜாதியை மறுத்து, ஆணாதிக்கத்தை மறுத்து, ஓர் ஏடு 90 ஆண்டுகளாக நடப்பது என்பது அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆகையினால், வரவேற்பு அதிகமாக இல்லை என்றால்கூட குற்றமில்லை; எதிர்ப்புகள் அதிகமாக வரும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, அய்யா பெரியார் அவர்கள் சொல்கிறார், இரண்டு ஏட்டிற்குமிடையில், இன்னொரு பெரிய வேறுபாடு இருக்கிறது.
வணிக ஏடுகள் வரவேற்கப்படும், படிக்கப்படும். ஆனால், அடுத்த மாதமே அவை எடைக்குத்தான் போடப்படும்.
கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும்
வணிக ஏடுகள் குப்பைக்குப் போகும்; கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும் என்று எழுதுகிறார்.
எண்ணிப்பாருங்கள், 1935, 1936, 1937 ஆம் ஆண்டுகளில் வந்த செய்திகள், இன்றைக்கு ஒரு களஞ்சியமாகத் தொகுக்கப்படுகிறது. இன்றைக்கும் அந்த செய்திகளிலே நமக்குத் தேவையானவை இருக்கின்றன.
அன்றைக்கு அய்யா பெரியார் அவர்கள், 1937, மார்ச் 6 ஆம் தேதி எழுதியிருக்கின்ற ஒரு கட்டுரை, இன்றைக்கு இந்த மேடையில் மெய்யாக ஆகியிருக்கிறது என்பதுதான் ‘விடுதலை’ யின் பலம்.
என்ன எழுதியிருக்கின்றார் என்றால், 1937, மார்ச் மாதம் – 1935 ஆம் ஆண்டு நீதிக்கட்சியினால் தொடங்கப்பட்ட இந்த ‘விடுதலை’ ஏடு – பிறகு அவர்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் கொஞ்சம் தளர்வுற்று, அதற்குப் பின்னால், அய்யா பெரியார் அவர்கள் தொடங்கி, ‘விடுதலை’யை நாளேடாக நடத்துகின்றார். 1935, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, ‘விடுதலை’ ஏடு தொடங்கப்படுகிறபொழுது, வாரம் இருமுறை வருகிற இதழாகத்தான் வெளிவருகிறது – தினசரி நாளேடாக அல்ல.
‘‘எம்மால் ஒரு பத்திரிகையைகூட நடத்த முடியாது என்றால், நாட்டை எப்படி நடத்துவோம்?”
அப்பொழுது பெரியார் அவர்கள் என்ன எழுதுகிறார் என்றால், ‘‘எம்மால் ஒரு பத்திரிகையைகூட நடத்த முடியாது என்றால், நாட்டை எப்படி நடத்துவோம்? எமக்கு ஒரு பெயர் உண்டு. ஆரம்ப சூரர்கள் என்று நம்மைச் சொல்லுகிறார்கள்” என்கிறார்.
நீங்கள் கவனிக்கவேண்டும், நீதிக்கட்சித் தொடங்கு கின்றபொழுது, ‘‘பார்ப்பனரல்லாதாருக்கு என்று ஒரு கட்சியாம்; பார்ப்பனரல்லாதார் என்று ஒரு ஜாதியா இருக்கிறது? இவையெல்லாம் நெடுநாள் இருக்காது” என்று எழுதியவர் நம் மதிப்பிற்குரிய பாரதியார் அவர்கள். பாரதியார் கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் என்று ஒரு ஜாதியா இருக்கிறது? இந்தக் கட்சியெல்லாம் நிலைக்காது என்று பாரதியாரே எழுதினார்.
நிலைக்காது என்று எழுதியவர்கள் எல்லாம் நிலைக்கவில்லை; ‘விடுதலை’ ஏடு நிலைத்து நிற்கிறது!
‘விடுதலை’யைத் தொடங்கும்பொழுதும் இந்தப் பத்திரிகை எல்லாம் நிலைக்காது என்று எழுதினார்கள். நிலைக்காது என்று எழுதியவர்கள் எல்லாம் நிலைக்கவில்லை. ‘விடுதலை’ ஏடு நிலைத்து நின்று இருக்கிறது. எதிர்ப்புகளைத் தாண்டித் தாண்டித்தான் வந்திருக்கின்றோம்.
ஒரு பத்திரிகையைக்கூட நம்மால் தொடர்ந்து நடத்த முடியாதா? அப்படி முயற்சி செய்தவர்கள் சிலர் தோற்றுப் போனார்கள் என்பதையும் பெரியார் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
அன்றைக்கு இரண்டு ஏடுகள்தான். 1937 இல் எழுதுகிறபொழுது பெரியார் எழுதுகிறார்,
50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தங்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒவ்வொரு பத்திரிகையைத் தொடங்கிவிட்டார்கள். ஒன்று, ‘இந்து’, இன்னொன்று ‘சுதேசமித்திரன்.’
50 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால், 1937 ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால்.
ஆங்கிலத்தில் இந்து, தமிழில் சுதேசமித்திரன்.
97 பேராக இருக்கக்கூடிய நம்மால் ஏன் ஒரு பத்திரிகையை நடத்த முடியவில்லை?
அவைதான் பத்திரிகைகளின் இலக்கணம் என்று நம்மவர்கள் நம்புகிறார்கள். 100-க்கு 3 பேராக இருக்கிற வர்களால் தொடர்ந்து பத்திரிகையை நடத்த முடிகிறது. 97 பேராக இருக்கக்கூடிய நம்மால் ஏன் நடத்த முடியவில்லை?
முயற்சிகள் நடந்தன. பரமேசுவரன் பிள்ளை ‘‘மெட்ராஸ் ஸ்டேண்டர்டு” என்று ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அதைப் படித்துவிட்டு, நம்மவர்களே என்ன சொன்னார்கள் என்றால்,
‘‘என்ன இருந்தாலும், ‘இந்து’ நாளேடு போன்று வராதுங்க.”
இன்றைக்கும் சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். இப்படி சொல்வது வேறு யாருமில்லை, நம்மாட்கள்தான்.
என்ன இருந்தாலும், இந்து போன்று வராதுங்க. இந்து மாதிரி வருவதற்கு, இந்து ஒன்று போதும் அல்லவா!
சிவாஜி கணேசன் போன்று நடிக்க முடியாது. அதற்குத்தான் அவர் இருக்கிறாரே! நீ வேறு மாதிரி நடி.
எங்கள் கருத்து, எங்கள் சிந்தனை வேறுமாதிரி இருக்கும்.
அய்யா ஆசிரியர் அவர்கள், எனக்கு ஒருமுறை சொன்னார்.
ஆங்கிலப் பத்திரிகை தொடங்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் மிக உறுதியாக இருந்த காலகட்டத்தில். அதற்கான தொடக்கம் தள்ளிக்கொண்டே போகிறது.
ஆசிரியரை அழைத்து, ‘‘என்னப்பா, ஆயிற்று?” என்று கேட்கிறார்.
‘‘எல்லாம் முடிந்து விட்டது அய்யா; ஆங்கிலத் தொடர்களில் கொஞ்சம் தவறு இருக்கிறது; அதைத் திருத்திக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.
படிக்கின்றவன் திருத்திப் படித்துக் கொள்வான்!
பெரியார் சொல்கிறார், ‘‘அதையெல்லாம் படிக்கின்றவன் திருத்திப் படித்துக் கொள்வான்” என்றார்.
அவருடைய இயல்பான போக்கு அதுதான். செய்தி போய் மக்களிடம் சேரவேண்டும். நீங்கள் என்ன காம்போசிசன் நோட்டையா திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கிலீஷ் தெரிந்தவன்தானே படிக்கப் போகிறான். அதையெல்லாம் அவனே திருத்தி, சரி செய்து படித்துக்கொள்வான் என்றாராம்.
செய்தியைக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்று சொல்லுகிற இயல்பு பெரியார் அவர்களிடத்தில்தான் உண்டு.
பல கூட்டங்களில்கூட நான் சொல்லியிருக்கிறேன்.
அச்சுக் கோர்க்கின்ற தோழர், அய்யாவிடம் வந்து கேட்கிறார்.
‘‘அய்யா, இவர் இறந்து போய்விட்டார்; அந்தச் செய்தியை எப்படிப் போடலாம். மறைவுற்றார் என்று போடவேண்டுமா? இயற்கை எய்தினார்? என்று போடவேண்டுமா?” என்று கேட்கிறார்.
அதற்கு என்ன ஓர் அலங்காரம்?
பெரியார் சொல்கிறார், ‘‘செத்துப் போனவரை செத்துப் போனார் என்று எழுதுங்கள். அதற்கு என்ன ஓர் அலங்காரம்” என்றார்.
‘‘இல்லீங்க, செத்துப் போனார் என்று எழுதினால், அவ்வளவு நன்றாக இருக்காதே?” என்று சொன்னார் அவர்.
‘‘செத்துப் போவது நல்லாதான் இருக்காது. எங்கேயாவது செத்துப் போனது ரொம்ப அழகாக இருக்குமா, என்ன?” என்று பெரியார் சொன்னார்.
இயற்கையை, உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற துணிச்சல் இன்றைக்கும் நம்மிடத்திலே இல்லை.
இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு, கவிதை நூல் வெளியிட்டு விழா ஒன்றில் நான் கலந்துகொண்டபொழுது, ‘‘அய்யா சுப.வீ. அவர்கள் தன் திருக்கரங்களால் வெளியிடுவார்” என்று சொன்னார்கள்.
ஒரு கரங்களால் வெளியிடுவதில் தவறில்லை அல்லவா!
ஒரு தோழரின் சொல்லாடலும் –
அய்யா ஆசிரியரின் கண்டிப்பும்!
நமக்குள் இப்படி பல எண்ணங்கள் வருகின்றன. நான் இந்த அரங்கத்திற்குள் வருகின்றபொழுது, அய்யாவிடத்தில் ஒரு நண்பர் சொன்னார், ‘‘வாழும் பெரியார் நீங்கள்தான்” என்று.
அய்யா ஆசிரியர் சொன்னார், ‘‘இப்படி சொல்வதை இன்றோடு நிறுத்திவிடுங்கள்” என்றார்.
‘‘பெரியாரே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பிறகு நான் என்ன வாழும் பெரியார்?” என்று கேட்டார்.
இன்னொன்றும் சொன்னார், ‘‘பெரியாரை அப்படியெல்லாம் நகல் எடுத்துவிட முடியாது” என்று சொன்னார்.
நான் அருகில் இருந்தபொழுது, அதை கவனித்துக் கொண்டிருந்தேன் என்பதைவிட, கற்றுக்கொண்டேன் என்று சொல்லவேண்டும்.
‘‘இனி வாழும் பெரியார் என்று, யாரும், யாரையும் சொல்லாதீர்கள்; பெரியார் ஒருவர்தான்.”
பணமே வாழ்க்கை அல்ல; ஆனால், பணம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை!
ஆனால், அவர் பெருமை எங்கே இருக்கிறது?
பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்து போயிருக்குமானால், பெரியாரோடு ஏடுகள் நின்று போயிருக்குமானால், பெரியாருக்கு அது பெருமை சேர்க்காது. 62 ஆண்டுகளுக்குப் பிறகும், நீங்கள் நின்று நிலைக்கின்ற ஏட்டை நடத்திக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், திரும்பத் திரும்ப என்ன சொல்லப்படுகிறது – ‘‘மேடைக்கு எல்லோரும் வாருங்கள்; சந்தாவோடு வாருங்கள்! சந்தாவோடு வாருங்கள்” சும்மா வந்து கைகொடுக்கின்ற வேலையெல்லாம் வேண்டாம்! என்பதால்தான், இன்றைக்கும் ‘விடுதலை’ பத்திரிகை நிலைத்து நிற்கின்றது. அறிவு மட்டுமல்ல, பொருளாதாரம் இல்லாமல் நீங்கள் நடத்திச் செல்ல முடியாது.
நடைமுறை அறிவு என்பது, பொருளாதாரமே எங்களுக்கு வேண்டாம் என்பதல்ல. பணமே வாழ்க்கை அல்ல. ஆனால், பணம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை.
இதைப் புரிந்துகொண்டால்தான், அந்தப் பணம்தான் இயக்கத்திற்குச் செய்திகளைக் கொண்டு போகும்.
பரமேசுவரன் பிள்ளையின் ‘‘மெட்ராஸ் ஸ்டேண்டர்டு’’ பத்திரிகை!
பரமேசுவரன் பிள்ளை அவர்கள், ‘‘மெட்ராஸ் ஸ்டேண்டர்டு” பத்திரிகையைத் தொடங்கியபொழுது, நம்மவர்கள் சொன்னார்கள், ‘‘இல்லை, இல்லை இது இந்து மாதிரி இல்லை” என்று. பிறகு அந்தப் பத்திரிகை நின்று போயிற்று.
அதற்குப் பிறகு இன்னொரு பத்திரிகை தொடங்கப்பட்டது – ‘‘இண்டியன் பேட்ரியாட்” என்ற தலைப்பில், இந்து பத்திரிகையில் பணியாற்றிய கருணாகரமேனன் தொடங்கினார்.
அவர் இந்து பத்திரிகையிலே பணியாற்றி, அந்த அறிவைப் பெற்றுக்கொண்டவர். பத்திரிகை நடத்துதல் என்பது ஒரு கலை. எனவே, அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவார் என்று கருதினார்கள். அவராலும் முடியவில்லை.
பெரியார் எழுதுகிறார், ‘‘ஒரு பத்திரிகையைக்கூட நம்மால் நடத்த முடியவில்லை என்றால், ஒரு நாட்டை, ஓர் இயக்கத்தை எப்படி நடத்துவோம்? கண்டிப்பாக நமக்கு ஒரு தினசரி வேண்டும்” என்று பெரியார் எழுதியது, 1937, மார்ச் 6 ஆம் தேதி. சரியாக மூன்று மாதங்களில், 1937, ஜூன் ஒன்றாம் தேதி முதல் ‘விடுதலை’ நாளேடாக ஆயிற்று.
அவர் எழுதுகிறபொழுதே, அந்த உறுதியோடும், பிடிமானத்தோடும் இப்படித்தான் என்று முடிவு செய்து எழுதியிருக்கிறார்.
அந்த முடிவை அவர் செயல்படுத்தி இருக்கிறார் நண்பர்களே!
என்னென்ன செய்திகள் எல்லாம் வந்திருக்கின்றன என்று புரட்டிப் பார்க்கின்றபொழுது எனக்கு வியப்பாக இருந்தது.
அப்பொழுது எந்த உலகப் போரும் தொடங்கப்படவில்லை. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் உலகப் போர் தொடங்குகிறது.
1937 ஆம் ஆண்டில் பெரியார் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார், ‘‘இத்தாலியில் முசோலினினுடைய பாசிஸ்ட் அரசாங்கம், படைகளைக் கூட்டுகிறது; மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கப் போகிற செய்திகள் கிடைக்கின்றன” என்று.
இன்னொன்றும் எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது. இன்றைக்கு உலகத்தில் நடைபெறுகின்ற எந்தச் செய்தியும் அடுத்த நொடியில் நமக்கு செய்தியாக வந்துவிடும். அறிவியலின் வளர்ச்சியின் காரணமாக.
ஆனால், பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில், எந்தவிதமான தொலைத்தொடர்பு ஊடகங்களும் இல்லை. அன்றைக்கு என்ன கைப்பேசியா வைத்திருந்தார்? எப்படி அவரால் முடிந்தது?
மேரிஸ்டோக் அம்மையார் குடும்பக் கட்டுப்பாட்டை இந்திய அரசு அறிவித்து 1950 ஆம் ஆண்டு. ஆனால், 1936 இல் பெரியார் எழுதுகிறார், ‘‘நாம் குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக்கொண்டு, வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று எழுதிவிட்டு, இதைத்தான் லண்டனில் இருக்கின்ற மேரிஸ்டோக் என்கிற அம்மையார் எழுதுகிறார்” என்கிறார்.
அதற்குப் பிறகு நான் கூகுளில் தேடிப் பார்த்தேன்; யார் அந்த மேரிஸ்டோக். 1921 ஆம் ஆண்டு லண்டனில் மேரிஸ்டோக் என்ற ஒருவர் இருந்திருக்கிறார். அவர் குடும்பக் கட்டுப்பாட்டைப்பற்றி எழுதியிருக்கிறார். எப்படி பெரியாருக்குத் தெரிந்தது என்று நமக்குத் தெரியவில்லை.
லண்டனில் எங்கோ இருக்கின்ற ஒருவர் சொன்னதை, எந்த ஊடகத் தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
அன்றைக்கு இத்தாலி நாடு, உலக நாடுகளை ஆக்கிரமிக்கின்ற முயற்சியில் இறங்கி இருக்கின்றது என்ற செய்தியை இரண்டாண்டுகளுக்கு முன்கூட்டியே தந்திருக்கின்றார்.
எல்லாவற்றிற்கும் எது அடிப்படை?
பெரியாரைப் போல் உழைத்தவர்கள்
உலகத்தில் யாரும் கிடைக்க மாட்டார்கள்!
அவருடைய அறிவு. கொஞ்சம்கூட ஓய்வெடுக்காத உழைப்பு. பெரியாரைப் போல் உழைத்தவர்கள் உலகத்தில் யாரும் கிடைக்க மாட்டார்கள்.
தங்களுக்காக உழைக்கின்றவர்கள் உண்டு. தன்னை மறந்து உழைத்தவர் அவர்.
பெரியார் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!
அதனால்தான், கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து மறைந்தார்கள். பெரியார் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவருடைய அறிவுத் திறன், அவருடைய ஆற்றல், அவருடைய ஓயாத உழைப்பு இன்றைக்கும் நம்மையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.
ஒன்றைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கின்றேன் நண்பர்களே, இன்னும் 4 நாட்களுக்குப் பிறகு, சிலருக்கு தியானம் செய்வதற்கு நெடுநேரம் கிடைக்கலாம். கன்னியாகுமரியிலேயே தங்கினாலும் தங்கிவிடலாம். போய் வரவேண்டிய தேவையில்லை என்று கருதுகிறேன். தொடர்ந்து அவர்கள் தியானம் செய்யட்டும். நாம் செயல்படுவோம்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.