சென்னை, ஜூன் 9- நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜனதாவை புறக்கணித்துள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. பா.ஜனதாவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி அதிகார ஆணவத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்டவர்களின் இறுமாப்பை இது நொறுக்கியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவே இந்திய மக்களோடு இந்தியா கூட்டணி களமாடியது.
இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் ‘இந்தியா கூட்டணி’ பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே. இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க இயலவில்லை என்றாலும், பா.ஜனதாவுக்கு மிகப் பெருமளவில் அதிர்ச்சியளிக்கும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இத்தகைய வரலாற்று தீர்ப்பை வழங்கிய மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி . பெரும்பான்மை இந்து சமூகமே பா.ஜனதாவை புறக்கணித்துள்ளது என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்.
அத்துடன், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்த தமிழ் சொந்தங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி.
மேலும், எங்களது 25 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கேற்ப, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட்டி, மய்ய நீரோட்ட அரசியலில் அங்கீகரித்துள்ள அந்த தொகுதிகளை சார்ந்த வாக்காளர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கண்டனம்
இதேபோல தொல்.திருமா வளவன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:-
நாடாளுமன்ற வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள காந்தியார், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவச் சிலைகள் எல்லாவற்றையும் பா.ஜனதா அரசு அகற்றியுள்ளது. அவற்றை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து காட்சி பொருளாக்குவதற்கு திட்ட மிட்டுள்ளது. இந்த எதேச்சதிகார நடவடிக்கையை கண்டிக்கிறேன். அவற்றை பழைய இடங்களிலேயே நிறுவவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.