இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம் நாள் திருச்சியில் கூடிய நிர்வாகக் கமிட்டி, அறப்போரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்று முடிவைச் செய்திருக்கிறது.
இந்தி எதிர்ப்பு இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியதாய் இருக்கும் என்பது யாரும் எதிர்பாராதது அல்ல. போர் தொடங்குவதற்கு முன்னாலேயே படைத்தலைவர் பெரியார் அவர்கள், குமுறிக் கொண்டிருந்த இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்லி நாளை அறப்போர், நாளை மறுநாள் மறப்போர் என்று நேரிடுமானால், நமது கலாச்சாரப் போரைச் சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டியதாய் நேரிடலாம் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.
ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டிருந்த இந்தச் செய்தியைத்தான், மறப்போர் தொடங்கியது என்ற செய்தியைக் கேட்டவுடன் அறப்போர் தற்காலிகமாக நிறுத்தம் எனப் பெரியார் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தினார்கள். போர்க்களத்தில் சூடேறிவரும் இந்த வேளையில், அதாவது பார்ப்பனிய ஆதிக்கம் தன் அழிவுக்கு அறிகுறியாக அடக்குமுறைகளை, தடியடிப் பிரயோகத்தை கடுங்காவல் தண்டனைகளை வழங்கிவரும் இந்த வேளையில், நம் அறப்போரைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டி நேரிட்டிருப்பதானது, பல தோழர்களுக்குப் பெருவருத்தத்தை உண்டு பண்ணி இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
அதேபோல், அய்தராபாத் பிரச்சினை மறப்போராக மாறுமேயானால், அறப்போர் நிறுத்தி வைக்கப்படும் என்று பெரியார் அறிவித்ததை அவநம்பிக்கையாகக் கொண்டு, இந்த அறப்போருக்கு எந்த விதத்தில் மாசு கற்பிக்கலாம்! அறப்போருக்குப் பின்பலம் அய்தராபாத் பணமூட்டை என்று சொல்ல சந்தர்ப்பம் வராதா? நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகர்கள் என்று சொல்லிச் சுலபமாகப் பொதுமக்கள் கண்ணில் மண்ணைத் தூவலாமே! என்றெல்லாம் எண்ணி இருந்த நரிக்கும்பல்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டன என்பதையும் நாமறிவோம்.
நம்முடைய நோக்கமெல்லாம், நமக்கு எதிர் வரிசையில் நிற்கும் அரசாங்கம் முழுப் படைபலத்தோடும், நம்மை அடக்கி ஒடுக்குவதற்கான மற்ற வசதிகளோடும் இருக்கும்போதுதான், நம் போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். படைபலம் குறைந்து, வசதிகள் இல்லாத நிலையில் நம் நெருக்கடியை அதிகமாக்கி, அதனால் மனமில்லாமலே கட்டாயமாக நம் எதிர்ப்புக்குக் கீழ்படியச் செய்துவிட வேண்டும் என்பது நம் விருப்பமும் அல்ல, விரும்பவும் கூடாது. அறப்போர் என்பதற்கு அழகும் அல்ல, அர்த்தமுமில்லை!
ஆபத்து வேளையில் தலைமாட்டில் இருந்து கொண்டே, தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது திராவிடத்தின் பண்பல்ல. ஆங்கிலேயன் எங்கே ஒழிந்து விடுவானோ என்று எண்ணி, அடுத்து வரவிருக்கும் ஜெர்மனியனை எப்படி வரவேற்கலாம் என்று திட்டமிட்டு, ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளும் சிறுமதியாளர்கள் அல்ல திராவிடர்கள். மறைந்து நின்று வாலியைக் கொன்ற மாவீரன் இராமனை, வடிகட்டிய பேடி என்று வற்புறுத்திக் கூறுவோர் நாம். அப்படி, இருக்க நமது மந்திரி சபையாரின் முழுக்கவனமும் அய்தராபாத்தில் இருக்கும் வேளையில், போரில் கலப்பதுடன் நில்லாமல் போரில் தீர்ப்பும் கூறவேண்டிய பொதுமக்கள், அடுத்தாற்போலிருக்கும் அய்தராபாத்தினால் நமக்கு என்ன ஆபத்துண்டாகுமோ என்று அஞ்ச வேண்டிய வேளையில், வேகிற வீட்டில் (மற்றொருத்தன்) பிடுங்கினது ஆதாயம் என்பது போல நமது இயக்கம் நடந்து கொள்ளும் என்றோ, நமது படைத்தலைவர் பெரியார் அவர்கள் அந்தப் போக்கிற்கு இடம் கொடுத்துவிடுவார் என்றோ யார்தான் எதிர்பார்க்க முடியும்? என்று கேட்கிறோம். ஆகவே, பெரியார் அவர்கள் மிகுந்த துணிச்சலோடு, தோழர்களின் வருத்தத்தைப் பொருட்படுத்தாமல் மிகமிகப் பாராட்டத்தகுந்த முறையில் விடுத்த அறிக்கையை, கமிட்டி அங்கீகரித்து முடிவுகட்டி இருப்பதை நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம். இந்த முடிவை ஏற்று ஒவ்வொரு ஊரில் உள்ள தோழர்களும் இந்தி எதிர்ப்பு சம்பந்தமான எதிர்ப்பு நடவடிக்கைகளில், முக்கியமாக நேரடி நடவடிக்கை என்று சொல்லப்பட்ட மறியல், ஊர்வலம், படைப்புறப்படுதல், மந்திரிகளைப் பகிஷ்காரம் செய்தல் ஆகியவைகளைப் படைத்தலைவரின் மறு உத்தரவை எதிர்பார்த்து நிறுத்திவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.
பகிஷ்காரம் செய்வது கூடவா இந்த மறப்போரைப் பாதிக்கும்? சமாதானமாக சாத்வீக முறையில்தான் பகிஷ்காரத்தை நாம் செய்கிறோம் என்பதைப் பிரதமர் ரெட்டியாரே ஒப்புக் கொண்டிருக்கிறாரே! மற்ற மந்திரிகளின் மதியூகப் போக்கினால் தானே மதுரையும் சேலமும் நடந்திருக்கிறது. இதற்கு நாமா குற்றவாளி? போலிசார் கூடத் தேவைப்படாத நிலையில் அமைதியாக நாம் காட்டும் வெறுப்பை ஏன் நிறுத்த வேண்டும்? இவ்வாறு நம்மில் ஒரு சிலர் எண்ணினாலும் எண்ணலாம். இது நூற்றுக்கு நூறு உண்மை என்றாலும், அவமானத்தால் ஆத்திரம் கொப்புளிக்கும் நம் அமைச்சர்கள், இன்று நடந்து கொள்ளும் அடாவடித்தனத்தினால், இந்த இந்தி எதிர்ப்பாளர்களால்தான் நாங்கள் அய்தராபாத்தில் கொஞ்சம் கஷ்டப்படவேண்டியதாயிற்று என்பதுபோல. நாளைப் பேசும்படியான நிலைமைக்கெல்லாம் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்கே எதிர்ப்பு நடவடிக்கைகளில் யாதொன்றும் வேண்டாம் என மிகமிக வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
இன்று போய் நாளை வா, என்று இராமனுக்கு இல்லாத குணத்தை திராவிடனுக்கே உள்ள சீரிய பண்பை, இராமன் மீது சுமத்தி இராவணன் ஆயுதம் இழந்த நிலையில் இராமன் இப்படிச் சொன்னான் என்பதாக, நம்மினத்தை நயவஞ்சகருக்குக் காட்டிக் கொடுத்த கம்பன் கூறி இருப்பதைப்போல, அதாவது ஆயுதம் இழந்தவனை இன்றுபோய் நாளை வா என்று கூறும் சாதாரண திராவிட வீரனின் இலக்கணத்தைப் போல, நம் அறப்போருக்கு எதிர் நிற்பவர்களையும், அவர்களின் ஆயுதபலம் குறைவு ஏற்படுவதை எண்ணி இன்று போய் (இன்றைய அய்தாராபாத் சிக்கல் தீர்ந்து போய்) நாளை வா (அடுத்த நம் அறப்போருக்குத் தயாராய் இருப்பீர்!) என்கிற முறையிலேயே அறப்போரின் தற்காலிக நிறுத்தம் என்பதைத் திட்ட வட்டமாக மந்திரிமார்களுக்கும் அறிவித்துக் கொள்ளுகிறோம்.
நிறுத்தப்பட்டிருக்கும் அறப்போர் இன்றோ, நாளையோ என்று சொல்லத்தக்க விதமாய் (அய்தராபாத் சிக்கல் எப்படியோ ஒரு வகையில் தீர்ந்த பிறகு) விரைவாகவே விட்ட இடத்திலிருந்து தொடங்கப்பட்டு விடலாம் என்பதோடு அதற்கு ஆயத்தமாகவே திராவிடத் தோழர்கள் எப்பொழுதும் தயாராக விளங்குகிறார்கள் என்பதையும், நாம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.