பேரா.க.கணேசன் கொட்டாரம்
“பக்தர்கள் உணவு உண்ட வாழை இலைகளில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீக பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாபாரத காலத்தில்கூட சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீகப் பலனாகக் கருதப்பட்டது. கிராமங்களில் மத நிகழ்வுகளை நடத்த அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. பக்தர்கள் உணவு உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் நன்றாகப் பயன்படுத்த முடியும். இதில் அதிகாரிகள் தலையிட முடியாது” என்று சமீபத்தில் சென்னைஉயர் நீதிமன்றக் கிளை மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு சொல்லும் அளவு மக்களுக்கு வழிகாட்டும் நிலை தடுமாறுகிறது.
வாரணாசித் தொகுதியில் மக்களிடமிருந்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று நாட்டையே ஆளும் பிரதமர் “தன்னை மக்களுக்காக சேவை செய்ய நேரடியாக என்னை ஆண்டவர் அனுப்பினார். உயிரியல் ரீதியாக நான் பிறக்கவில்லை என்பது இப்போது தெரிகிறது” என்று கூறுவது காலத்தின் கோலம். ஓட்டுப் போட்ட லட்சக்கணக்கான மக்கள் அவரை கடவுள் அவதாரம் என்று கருதியா வாக்களித்தார்கள்?
இவையெல்லாம் அப்பாவி மக்களைக் கவரக்கூடிய தந்திரம். மக்களிடம் அறிவியல் கல்வியை வாழ்வோடு பொருத்தும் அளவு பயிற்றுவிக்காததன் விளைவுதான் இது.
மதத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லாத ஆட்சி முறை என்றும் (மதச்சார்பற்ற இந்திய குடியரசு ) அரசமைப்புச் சட்டம் 51 ஏ(எச்) பிரிவின் கீழ் 11 கடமைகளில் “ அறிவியல் மனோபாவம், மனித நேயம் மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது “ என்பது எட்டாவது அம்சம்
இந்திய மக்கள் அனைவரின் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டியது ஒன்றிய அரசு. அந்த அரசுக்கு வழிகாட்டி இந்திய அரசியல் சாசனம். அந்த அரசமைப்புச் சட்டத்தை பிரதமர் உள்ளிட்ட அரசில் பங்கெடுக்கும் அனைவரும் மக்களும் மாணவர்களும் ஆசிரியர்களும், அனைத்து தொழிற்சங்கவாதிகளும் கற்பதே முதல் கடமை. அதைக் குறித்து இதுவரை கல்வித்திட்டம் கவலைப்படாததன் விளைவால்தான் ஜனநாயகம் தடுமாறுகிறது. மக்கள் குழம்புகிறார்கள். மூட நம்பிக்கை முடை நாற்றமெடுக்கிறது.
அப்படி படித்திருந்தால்தான், மக்கள் அறிவியல் பார்வையில் அரசைத் தேர்ந்தெடுப்பார்கள். ஜனநாயகம் சிறந்தோங்கும் .1998 இல் கே.என். பணிக்கர் எழுதிய “வகுப்பு வாத அச்சுறுத்தலும் மதச்சார்பின்மை சவால்களும் “2001 இல் கல்வியில் வகுப்பு மயமாதலுக்கு எதிராக “ எனும் ஆங்கில நூல் டில்லி ஷப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்ட அற்புதப் படைப்பு, 2016 இல் ரானா அயூப் அரும்பாடுபட்டு படைத்த “குஜராத் கோப்புகள் “ நூலும் ஆர்.எஸ்.எஸ்.பற்றி அறிவோமா என்ற நூல் உட்பட ஏராளமான விழிப்புணர்வு முற்போக்கு நூல்கள், சில நாளிதழ்கள், மாத இதழ்கள் அணிவகுத்து வரத்தான் செய்கின்றன. அந்தக் கருத்துகள் ஏராளமான மக்களைச் சென்றடைவதில் கடுமையான முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இவற்றை மக்களிடம் எளிமையாகக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.
சில இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் மத வெறியை எதிர்த்தும் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் நடத்திய இயக்கங்களும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல பரந்த இயக்கத்தைக் கட்ட வேண்டியுள்ளது.
மாறாக காவிமய சித்தாந்த ஆட்சி அதிகாரத் துணையோடு நீண்ட காலமாக அடித்தட்டு மக்களிடம் பக்தி அரசியலை முதலெடுக்கும் பணி அகலமாகப் பரவி விட்டது.
இந்தச் சூழலிலதான் 2024 தேர்தலில் 10 ஆண்டு காலம் அனைத்து மக்களின் பாதுகாவலர் என்பவர் அரசமைப்புச் சட்டம் வழங்கிய பதவியை மறந்து மக்களிடம் பிரிவினையை விதைக்கும் அளவு மூட நம்பிக்கையை தெளிக்கும் தன்மை யோடு உளறுவதைப் பார்க்கிறோம். பாவப்பட்ட மக்களிடம் உள்ள பக்தியை வாக்குகளாக அறுவடை செய்ய முயற்சிக்கும் செயல்தான் இந்த உலக மகா நடிப்பு. எதிர்கால தேசம் இருளில் மூழ்குமோ என்ற அச்சம் எதிர்நோக்குகிறது. அரசின் தூண்கள் இவிஎம் உள்பட அத்தனையும் மதவெறி ஆட்சி முறைக்கு அடிபணியாமல் இருப்பது நாட்டுக்கு நலம் பயக்கும்.
கவிஞர் தமிழ் ஒளி 1948 இல் சென்னை மாகாண பிரதமர் ஓமந்தூரார் முன்னிலையில் நடந்த வானொலிக் கவியரங்கில் சுதந்திரம் என்ற தலைப்பில் வாசித்த நீண்ட கவிதையில்
“சுதந்திரம் -உழைப்பவர்க்கே
சுதந்திரம் -எளியவர்க்கே
மதத்திமிர் – சாதிக் கூச்சல்
மக்களில் உயர்வு தாழ்வும்
மதர்த்தெழும் அடிமை வாழ்வு
மடிந்தபின் துன்பமுற்றுக்
கதறிடும் குரல் எழுந்தால்
கடும் புயல் புரட்சி வீசும்” என்று எச்சரிக்கை விடுத்தார். பாரதிதாசனின் மாணவன், சீடன் ஆவார்.
“இந்தியாவில் பக்தி அல்லது நாயக வழிபாட்டின் பாதை என்று அழைக்கப்படுவது, அதன் அரசியலில் உலகின் வேறு எந்த நாட்டின் அரசியலிலும் வகிக்கும் பங்கிற்கு நிகரற்ற பங்கை வகிக்கிறது மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் இரட்சிப்புக்கான பாதையாக இருக்கலாம் .ஆனால் அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவிற்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் ஒரு உறுதியான பாதையாகும் “ என்றும் “அரசியல் கட்சிகள் மதத்தை விட நாடு பெரிதென்று நினைத்தால் பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஆனால் நாட்டு மக்களை விட மதமே பெரிதென்று நினைத்தால் போராடிப் பெற்ற சுதந்திரம் இன்னொரு முறை பறிபோகும். அப்போது நாம் இரத்தம் சிந்தியாவது இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும்“ என்று அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் 25.11.1949 இல் அறிமுகப்படுத்திப் பேசும் போதே எச்சரிக்கை விடுத்தார்.
இந்த தன்மைகளை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்.அந்த அற்புதமான உரையில் நாடு எதிர்கொள்ள இருக்கின்ற பல அபாயங்கள் குறித்து எச்சரிக்கை செய்தார். அந்த உரையை எத்தனை பேர் படித்தார்களென்று தெரியாது.இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இப்போது அந்த உரையில் குறிப்பிட்ட “இழந்த “சுதந்திரத்தை மீட்டெடுக்க “ நடக்கின்ற போராட்டம் தான் இந்தத் தேர்தல். ஆணவ சர்வாதிகார அரசு செய்கின்ற அரசமைப்பு சட்டவிரோத முயற்சிகளை மீறி, இந்தியா கூட்டணி வென்றால் டாக்டர் அம்பேத்கர் கனவு கண்ட நாடாளுமன்ற ஜனநாயகம் மீண்டும் உயிர் பெறும். அதுவே இரண்டாம் சுதந்திரப் புரட்சி என்றே கருதி மக்களை வணங்குவோம், வாழ்த்துவோம்!