ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவது என்பதுதான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘தெளிவான இலக்கு’ என காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்ச வரம்பினை நீக்க முன் வருவாரா? எனவும் வினவியுள்ளது.
“மக்களவைக்கான தேர்தல் அடுத்தடுத்து நடந்து வந்த வேளையில் ‘ஆரவாரமும் அச்சமும்’ கொண்டு பிரதமர் மோடி நாகரிகமற்ற வகையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, நாங்கள் ஒரு நேரடிக் கேள்வியை பிரதமரிடம் முன் வைக்கிறோம். உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள, 32 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இடஒதுக்கீட்டின் 50 விழுக்காடு உச்சவரம்பினை நீக்கிட பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டணையினைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.” என்று ஜெயராம் ரமேஷ் தனது ‘X’ சுட்டுரைப் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
‘காங்கிரசுக் கட்சியானது அரசமைப்புச் சட்டத்தினை திருத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடுக்கு மேல் உயர்த்திடும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
தனது மற்றொரு பதிவில், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) – ராஷ்ட்ரிய சுயம் சேவச் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஆகிய அமைப்புகளின் ‘தெளிவான இலக்கு’ என்பதே இடஒதுக்கீட்டை ரத்து செய்வதுதான். இதன் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்கிற போக்கில் பிஜேபியின் தலைவர்கள் பேசிய காட்சிப் பதிவுகளையும் ஜெயராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.