பெரியார் ராமசாமியின் பூமியில் இருந்து.
பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வியக்க வேண்டாம்…
என்னை வைத்து அரசியல் செய்தார்கள்.. அவர்கள் அரசியலில் தோல்வி அடைந்த பிறகு என்னை மறந்துவிட்டார்கள்.
ஆம். நான் தற்போது அரசியல் அநாதை ராமாகி விட்டேன்.
நான் ராம பக்தர்களுக்காக இங்கு வரவில்லை.
நரேந்திரனுக்காக வந்திருக்கிறேன். யாராவது ஒருவர் நரேந்திரனுக்கு இதை மொழி பெயர்த்துக் கொடுத்தால் நல்லது.
ஓ நரேந்திரா….
முதலில் நான் அங்குதான் பிறந்தேன் என்று யாரிடம் நான் கூறினேன்…
நானே ஒரு கற்பனைப் பாத்திரமாகத்தானே இருக்கிறேன்.
இங்கு மட்டுமா? கிரேக்கத்திலும் எகிப்திலும் கூட ராமர், லட்சுமணன், சீதை கதை உள்ளதே..
அப்படி என்றால் அங்கே பிறந்த ராமனுக்கு கோவில் எங்கே கட்டுவது.
பரவாயில்லை., எனக்குக் கோவில் கட்ட மசூதியை இடிக்கக் கூறினேனா….
உங்களது அரசியலுக்காக எத்தனை உயிர்கள் மாண்டன?
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்கிறது நான் தற்போது இருக்கும் தமிழ் மண்ணின் சிலம்பு நூல்
அறம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் உங்களிடம் இதைச் சொல்லுவதால் பயனில்லை.
70 ஆண்டுகளாக என்னை வழிபட்டுவந்த அஞ்சலி என்பவரின் வீட்டை உடைத்துவிட்டாயே – அந்த மூதாட்டி தற்போது சாலை ஓரத்தில் மனநிலை சரியில்லாமல் அலைகிறாரே?
இது குறித்து நான் உன்னிடம் கேட்கலாம் என்று இருந்தேன்.
மஸ்துராம் என்பவர் மும்பையில் இருந்து சேர்த்த செல்வத்தை எல்லாம் போட்டு அழகிய சிகை அலங்காரக் கடையை அமைத்தாரே? அவரது சொந்த இடத்தில்! ஆனால் நீ செய்தது என்ன சாலை விரிவாக்கம் என்ற பெயரில் திறந்து 4 நாள் ஆன அந்தக் கடையை உடைத்து வீசிவிட்டாய்! அவரது தகப்பனார் இதனால் அதிர்ச்சி அடைந்து உயிர்விட்டார். இப்போது அவர் சாலை ஓரத்தில் பெஞ்ச் போட்டு சிகை அலங்காரம் செய்கிறார்.
ஓர் ஊடகவியலாளர் அவரிடம் பேட்டி கண்ட போது கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தனது கடமையைச் செய்கிறார். அவருக்குக் குடும்பம் இருக்கிறதே!
தனது மகளின் கல்விக்காக நிலத்தை வைத்து கடன் வாங்கியிருந்த தந்தை ஒருவரின் நிலத்தைப் பிடுங்கிக்கொண்டாய் இப்போது அந்த பத்திரம் செல்லாது என்று கூறி கடனைத் திருப்பித்தர நெருக்கடி கொடுக்கிறார்கள். அவரோ தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருக்கிறார். எனது பார்வையில் வந்த கொடூரத்தில் ஒரு சிலவற்றை மட்டுமே கூறியிருக்கிறேன்.
ராமாயணத்தில் நான் அயோத்தி வந்த போது மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினார்கள் என்றும், அதனால் தீபாவளி கொண்டாட்டம் என்றும் கதைவிட்டுள்ளார்கள்.
ஆனால் அப்படியே தலைகீழ் மாற்றம் – எனது பெயரைச் சொல்லி கோவில் கட்டினாய்! அதனால், அயோத்தியில் வீடிழந்த மக்களின் கண்ணீர் கதறல்தான். இதற்கு என்ன விழா கொண்டாடப்போகிறாய்.
நீ செய்த அக்கிரமத்தால், “ஜெய் சிறீராம்” என்று சொல்லாமல் “ஜெய் சம்பிதான் (வாழ்க அரசமைப்பு)” ‘ஜெய்பீம்’ என்று கூறிப் பரப்புரை மேற்கொண்ட ஒரு தாழ்த்தப்பட்டவர் என் மண்ணில் தேர்தெடுக்கப்பட்டார்.
அவர், நாணயத்தின் இரு பக்கமாக இருக்கும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் கருத்துக்களையும் சுமந்துகொண்டு அயோத்தி சாலைகளில் பரப்புரை மேற்கொண்டார்.
என் மண்ணில் வெற்றி பெற்ற அவதேஷ் பிரசாத் அம்பேத்கர் கொள்கைகளைச் சுமந்துகொண்டு சமத்துவம், சமூகநீதி பேசிக்கொண்டு எனது மண்ணில் பரப்புரை செய்தார். அவர் ஒரு பவுத்தர் என்பது அயோத்தியாவில் உள்ள அனைவருக்குமே தெரியும்.
அவர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகளை மேடைதோறும் கூறிக்கொண்டு பரப்புரை மேற்கொண்டார்.
அதில் ஒன்று “ராமர், விநாயகர், சிவன் உள்ளிட்ட எந்த ஹிந்துக் கடவுளர்களையும் வழிபடமாட்டோம்” என்பதாகும்! இதை அயோத்தி மக்களும் அறிவார்கள். இருப்பினும் அவருக்கு வாய்ப்பளித்தனர்.
இந்த மண்ணில் எனக்கு இருந்த மரியாதை எங்கே போனது என்று தெரியவில்லை.
உனது கட்சியினரோ சமூகவலைதளங்களில் என்னை வசை பாடுகின்றனர்,
ஜனனி பிரசாத் என்பவர் எழுதிகிறார். ராமருக்கு கோவில் கட்டியவர் மோடி. ஆனால், அவருக்கு அங்கே கிடைத்தது என்ன என்கிறார்.
எனக்கு கோவில் கட்ட மோடி யார் என்று அம் மக்கள் கேட்கிறார்கள்.
தேர்தலின் போது கூட ராமரைக் கொண்டுவந்தவருக்கு ஒட்டுப் போடுங்கள் என்றுதானே போஸ்டர்கள் ஒட்டினார்கள்.
“கடவுள் இல்லை கடவுள் இல்லை” என்று கூறிய பெரியார் ராமசாமியின் கூற்றை உண்மையாக்கிவிட்டீர்களே?
பெரியார் ராமசாமி கூறினார்.
“சாமானியர்கள் கருவறையில் நுழைந்தால், என்னை பூஜிக்கும் பார்ப்பனர்களே, “கடவுள் இல்லை இது வெறும் கல்” என்று சொல்லிக்கொண்டு எனது சிலையை சாலையில் வீசிவிட்டு ஓடுவார்கள்” என்று!
அதை உண்மையாக்கிவிட்டீர்களே?
எப்படியா?
வெற்றிச் சந்திப்பு என்ற பெயரில் 4 ஆம் தேதி மாலை உங்கள் கட்சியினரைச் சந்தித்தீர்கள். அப்போது என்ன முழக்கம் – ஜெய் ஜெகன்னாத்…
அடப்பாவி நரேந்திரா! நீ கடைசியாக உத்தரப்பிரதேசத்தில் பரப்புரை செய்யும் போது கூட “ஜெய் சிறீராம்” என்று எனது பெயரைச் சொல்லித்தானே முடித்தாய்!
ஆனால் ஒரு வாரத்திற்குள் என்னைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டாயே?
பரவாயில்லை! ஆனால். எனக்கு என்ன கவலை என்றால் ஜெகன்னாத் மீதான கவலைதான்.
அரசியல் வாழ்க்கை கொடுத்து பிரதமர் பதவி வரை உயர்த்திய என்னையே ஒரே ஒரு தோல்வியினால் தூக்கி வீசிவிட்டாய்.
78 இடங்கள் மட்டுமே கொடுத்து பெரும்பான்மைக்குச் சில உறுப்பினர்கள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலத்தில் உள்ள ஜெகன்னாத்தின் நாளைய நிலையை நினைத்தேன் – சிரிப்பு வந்தது.
நல்லவேளை ராமனாகிய நான், உன்னால், உனது அகம்பாவத்தினால் பெரியார் ராமசாமியைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
காரணம், காவி வாடைகூட அசிங்கம் என்றியம்பும் மண் அவருடையது. அதன் தாக்கத்தால் வடக்கு மக்கள் தற்போது உசாராகி வருகிறார்கள். ஆகவே, அவர்களை மீண்டும் மதவாதப்பிடியில் மூழ்கடிக்க நான் விரும்பவில்லை. நானே மீண்டும் சராயூவுக்குள் மூழ்கி விடுகிறேன்.
இப்படிக்கு ராமசாமி பூமியிலிருந்து ராம் பேசுகிறேன் தமிழில்…