‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் புகழாரம்!
சென்னை, ஜூன்.7- ‘நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி மூலம் நிமிர்ந்து நடைபோடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’ என்று ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மற்றும் சென்னையைப் பொறுத்தவரை புனித ஜார்ஜ் கோட்டை தான் எப்போதுமே அதிகாரத்தின் மய்யமாக இருந்து வருகிறது. சமூகநீதி, மகளிர் முன்னேற்றம் போன்ற கொள்கைகளை வெளிப்படுத்துகிற, பாதுகாக்கிற கருத்தியல் கோட்டையாக இன்றைய காலத்தில் தமிழ்நாடு உருவாகியுள்ளது.
இந்த சமூகநீதிக் கொள்கை கோட்டை யின் உச்சியில் அமர்ந்திருப்பவர் மு.க. ஸ்டாலின். தேர்தல் முடிவுகளுக்கு முன்பு தியானத்தில் அமர்ந்தது உள்பட, பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழ்நாடு வந்து அம்மக்களின் ஆதரவைப் பெற முயன்றபோதிலும், நாற்பதுக்கு நாற்பது என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியா கூட்டணிக்கு சொன்னபடியே அந்த வெற்றியைப் பெற்றும் தந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
எப்போதுமே காங்கிரஸ் தலைமை யிலான அய்க்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரிகளின் இடது முன்னணிக்கும் இடையிலான போர்க்களமாகத் திகழும் கேரளத்தில் கூட, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி மூலம் பாஜக உள்ளே நுழைந்துவிட்டது. மறுபுறம் கருநாடகத்தில் ஆதிக்கம் செலுத்தி,ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் உடனான கூட்டணி மூலம் பெருவெற்றி பெற்றுள்ளது.
திராவிட நிலத்தில் அந்நியர்களுக்கு இடமில்லை!
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த தெலங்கானாவிலும்குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடுதான் தெற்கின் குறியீட்டள விலான நுழைவுவாயில் என்று வைத்துக்கொண்டால், அதன் கதவுகள் திராவிட நிலத்துக்கு அந்நியர்களுக்கு எதிராகத் தி.மு.கழகத்தினால் பலமாகச் சாத்தப்பட்டிருக்கிறது. 2019-லும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க.வால் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்தியா கூட்டணிக்கு 40 இடங்களைப் பெற்றுத் தந்த சிறப்பான செயல்பாட்டில் மிக முக்கியக் காரணி என்பது, தங்களது தொண்டர்படையின் வாக்குகளைப் பெருமளவில் தங்களது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (9+1 புதுவை), சி.பி.எம் (2), சி.பி.அய் (2), வி.சி.க (2), ம.தி.மு.க (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகியோருக்குக் பெற்றுத் தந்ததுதான்.
காங்கிரசின் நம்பிக்கையான கூட்டணி!
இந்தியா கூட்டணி மட்டும் ஆட்சியைப் பிடித்திருந்தால், அப்போதும் மு.க.ஸ்டாலின் மாநிலத்திலேயேஒரு வலிமையான தலைவராக இருப்பதில்தான் நிறைவடைந்திருப்பார். எனினும், தனது சகாக்களில் ஒருவருக்கு நிதித்துறை உள்பட, ஒன்றிய அமைச்சரவையில் அதிக இடங்களைக் கோரியிருப்பார். வாஜ்பாயி அவர்களின் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இருந்து தனது தந்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் விலகி 2004-இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில்இணைந்த காலந்தொட்டு காங்கிரசின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்துவரும் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் தலைமைப் பொறுப்புக்குக் காங்கிரசை உறுதியாக முன்னிறுத்துபவராகவும் இருந்துவருகிறார்.
இவ்வாறு ‘டெக்கான் கிரானிக்கல்’ தமது தலையங்கத்தில் கூறியுள்ளது.