புதுடில்லி, ஜூன் 6- இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாய்க்கு இதய நோய்
டில்லியை சேர்ந்த ஒரு இணையர் ‘பீகிள்’ வகையை சேர்ந்த நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். ஜூலியட் என பெயரிடப்பட்ட 7 வயதான அந்த பெண் நாய் ‘மிட்ரல் வால்வு நோய்’ என்று அழைக்கப்படும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய் பாதிப்புக்கு ஆளான ஜூலியட் நாய்க்கு அதன் உரிமையாளர்கள் கடந்த ஓர் ஆண்டாக இதய நோய்க்கான மருந்துகளை கொடுத்து வந்தனர். இருப்பினும் நோய் குணமடையவில்லை.
இந்த சூழலில் அண்மையில் அமெரிக்கா சென்ற டில்லி இணையர் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று, தங்கள் நாய்க்கு இருக்கும் நோய் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தனர்.
அறுவை சிகிச்சை தான் தீர்வு
அப்போது இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஒரு மருத்துவமனையில் நாய் ஒன்றுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் நிம்மதி அடைந்த இணையர் தங்கள் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யும் முடிவுடன் இந்தியாவுக்கு திரும்பினர். இருப்பினும் இந்தியாவில் இதுவரை நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இல்லை என்கிற நிலையில் அந்த இணையர் சரியான மருத்துவர்களை தேடி அலைந்தனர்.
அப்போது தான் டில்லியில் உள்ள ஒரு கால்நடை மருததுவமனையில் பணியாற்றி வரும் விலங்குகளுக்கான இதயநோய் நிபுணரான மருத்துவர் பானுதேவ் குறித்து அறிந்து அவரை சென்று சந்தித்தனர்.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
தங்கள் நாய்க்கு இருக்கும் இதய நோய் குறித்தும், அதற்கு அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு என அமெரிக்க மருத்துவர்கள் கூறியதையும் அவர்கள் மருத்துவர் பானு தேவ்விடம் கூறினர்.
அதைதொடர்ந்து, நாய்க்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த மருத்துவர் பானு தேவ், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 30ஆம் தேதி மருத்துவர் பானு தேவ் மற்றும் பிற அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து அந்த நாய்க்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்தனர். 2 நாட்களுக்கு பிறகு நாய் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த நாய் தற்போது நலமாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.