கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பைச் சந்தித்த ஏடு ‘விடுதலை’ நாளேடுதான் என்பது வரலாறு!
கரோனா தொற்று காலகட்டத்தில் – ஒரு நாள்கூட நிற்காமல் ‘விடுதலை’ வெளிவந்தது!
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, ஜூன் 6 ‘விடுதலை’ பத்திரிகையைத் தொடங்குவதற்கு முன்பே தடை – எப்படி கருவி லிருக்கும் பெண் குழந்தையை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதுபோன்று, கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பைச் சந்தித்த ஏடு ஒன்று இருக்கிறது என்றால், அது ‘விடுதலை’ நாளேடுதான் என்பது வரலாறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 1.6.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அகில உலக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் லெவி பிராகல்
லெவி பிராகல் என்பவர் அகில உலக பகுத்தறி வாளர் கழகத்தின் தலைவர். இப்பொழுதும் அவர் உயிரோடுதான் இருக்கிறார், நார்வே நாட்டில்.
உலக நாடுகளில் 56 நாடுகள் இணைந்த ஓர் அமைப்பு அது. அந்த அமைப்பில், திராவிடர் கழகத்தையும் இணைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாராட்டி இருக்கிறார். தந்தை பெரியார் அவர்களை நேரிடையாகத் தெரியாவிட்டாலும், பெரியார் திடலுக்கு வந்திருக்கிறார். டில்லியில், நம்முடைய பெரியார் மய்யத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பெரியார் அவர்கள், மக்களைத் தென்னாட்டில், தமிழ்நாட்டில் பக்குவப்படுத்தி இருக்கிறார்!
அவரது உரையில், ‘‘உலக அளவில் அமைப்புகளை நாங்கள் வைத்திருக்கின்றோம். ஆனால், ஒரு வாரப் பத்திரிகையைக்கூட எங்களால் நடத்த முடியவில்லை. காரணம், இந்தக் கொள்கையைச் சொல்லி நடத்தினால், அவ்வளவு ஆதரவு கொடுப்பதாக இல்லை. மதமற்றவர்கள் என்று தங்களைப் பதிவு செய்யக்கூடிய மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, சுயமரியாதைக் கருத்துள்ளவர்கள், மனித உரிமைகளுக்காகப் போராடக் கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அப்படி இருந்தும், ஒரு வாரப் பத்திரிகையைக்கூட எங்களால் நடத்த முடிய வில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரக்கூடிய பத்திரிகையைத்தான் எங்களால் நடத்த முடிகிறது. ஆனால், உலகத்திலேயே ‘விடுதலை’ நாளேடுதான் பகுத்தறிவு நாளேடாக இத்தனை ஆண்டுகளாக நடப்பது எங்களுக்கு உலக அதிசயமாகத் தோன்றுகிறது. அந்த அளவிற்குப் பெரியார் அவர்கள், மக்களைத் தென்னாட்டில், தமிழ்நாட்டில் பக்குவப்படுத்தி இருக்கிறார்” என்று சொன்னார்.
அவருடைய உரை எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தது; இன்னமும் தருகிறது.
அந்த வகையில் நண்பர்களே, இந்த ‘விடுத லை’யினுடைய வரலாறு என்பது அன்று தொடங்கி இன்றுவரையில் இருக்கிறது; நாளை யும் தொடரும்.
எத்தனை அடக்குமுறைகள் –
எத்தனை எதிர்ப்புகள்!
அதுமட்டுமல்ல, ‘விடுதலை’ சந்தித்த வெற்றி களைப்பற்றி சொன்னார்கள்; விளைவுகளைப்பற்றி இங்கே உரையாற்றும்பொழுது கவிஞர் அவர்களும், மற்ற தோழர்களும் சொன்னார்கள்.
ஆனால், ‘விடுதலை’ சந்தித்த போராட்டங்களில், விழுப்புண்கள் ஏராளம். எத்தனை அடக்குமுறைகள் – எத்தனை எதிர்ப்புகள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஈரோட்டில், ‘விடுதலை’யைப் பதிவு செய்யும்பொழுது முதல் களஞ்சியத்தை வாங்கிப் படித்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும். நண்பர் சுப.வீ. அவர்கள் இங்கே சொன்னதைப்போல, 80 பக்கம் உள்ள அறிமுகத்தில்கூட எழுதியிருக்கின்றோம்.
எந்த ஒரு பத்திரிகையாவது இதுவரையில் தொடங்கப்படும்பொழுது, விமர்சனங்களை சந்தித்து உண்டா? இங்கே பத்திரிகை நண்பர்கள் இருக்கிறார்கள்; ஊடக நண்பர்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம்கூட தெரியும்.
பத்திரிகையைத் தொடங்குவதற்குமுன், பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்யும்பொழுது, எப்பொழுது மறுக்கப்படும் என்றால், அதே பெயரில் வேறு யாராவது ஏற்கெனவே பதிவு செய்திருந்தால்தான். அதற்குப் பிறகு வேறு பெயர் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். ஆனால், பதிவு செய்வதில் எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது.
பல பேர், பத்திரிகையை நடத்தாமலேயே பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள். ஆனால், ‘விடுதலை’யைத் தொடங்கச் சொல்லிவிட்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தந்தை பெரியார் அவர்கள் இலங்கைக்குப் போயிருந்தார். இந்தத் தகவல்கள் எல்லாம் ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியில் இருக்கும்.
தந்தை பெரியாரின் சகோதரர்
ஈ.வெ.கிருஷ்ணசாமி
அய்யாவினுடைய சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, நம்முடைய ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய தந்தையார் – ஈ.வெ.கி.ச.இளங்கோவினுடைய தாத்தா ஆவார் அவர்.
மாவட்ட ஆட்சியர்முன் பதிவு செய்யச் சென்ற பொழுது தந்தை பெரியார், அவரை ஆசிரியராகக் கொண்டு, கையெழுத்துப் போடச் சொல்லியிருந்தார். ஆனால், அந்தப் பெயர் பதிவு செய்யப்படவில்லை.
ஏன் பதிவு செய்யப்படவில்லை என்றால், அந்தப் பெயரில் பிரச்சினை இருக்கிறது என்றனர். அப்பொழுது வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடைபெற்ற காலகட்டம்.
சிலர், தவறாக, நம்மை வெள்ளைக்காரர்களுக்குக் கால் பிடித்தவர்கள், வெள்ளைக்காரர்களை ஆதரித்தவர்கள் என்று சொல்வது எவ்வளவு தவறான அனுமானம் என்பதையும் இந்தத் தகவல்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்!
‘விடுதலை’ பெயரில் பத்திரிகை தொடங்குவதற்கு அனுமதிக்கவில்லை. ‘விடுதலை’ என்ற பெயரில் பத்திரிகையை நீங்கள் தொடங்கவேண்டும் என்றால், 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இதுபோன்ற நிபந்தனை வேறு எந்தப் பத்திரிகைகளுக்கும் கிடையாது. அந்த நிபந்தனையை விதித்தார்கள். 2 ஆயிரம் ரூபாய் கட்டித்தான் அந்தப் பெயரை பதிவு செய்தனர்.
கருவில் உருவாகும்பொழுதே
எதிர்ப்பைச் சந்தித்த ஏடு!
‘விடுதலை’ பத்திரிகையைத் தொடங்கு வதற்கு முன்பே தடை – எப்படி கருவிலிருக்கும் பெண் குழந்தையை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதுபோன்று, கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பைச் சந்தித்த ஏடு ஒன்று இருக்கிறது என்றால், அது ‘விடுதலை’ நாளேடுதான் என்பது வரலாறு. இது அனுமானம் அல்ல; அழகுப் பேச்சு அல்ல.
ஆகவே, அப்படிப்பட்ட ‘விடுதலை’ பிறப்ப தற்கு முன்பே எதிர்ப்பு. எப்பொழுதுமே எதிர்ப்பு! எதிர்ப்பு!! எதிர்ப்பு!!! என்பதை நாம் மிக லாவக மாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
நெருக்கடி காலத்தில், முற்போக்குக் கருத்துள்ள ஏடுகள் படாதபாடுபட்டன!
நெருக்கடி காலத்தைச் சந்தித்தது என்ன சாதாரணமானதா? ‘முரசொலி’ சந்தித்தது என்ன சாதாரணமானதா? ‘தீக்கதிர்’ சந்தித்தது என்ன சாதாரணமானதா?
முற்போக்குக் கருத்துள்ள ஏடுகள் எவையோ, அந்த ஏடுகள் எல்லாம் அப்போது படாதபாடுபட்டன.
இது அரசியல் நெருக்கடி. இங்கே நண்பர்கள் சொன்னார்கள்; நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் சுட்டிக்காட்டினார். கோவிட்-19 கரோனா தொற்று காலகட்டத்தில், பல பத்திரிகைகள் வெளிவரவில்லை. நிறுத்தினார்கள். பிறகு அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஆனால், அந்த காலகட்டத்தில்கூட, ‘விடுதலை’ நாளேடு ஒரு நாள்கூட நிறுத்தப்படவில்லை, தொடர்ந்து வந்தது. வேண்டுமானால் பக்கங்கள் குறைந்திருக்கலாம்.
‘விடுதலை’ குழுமத்தைச் சார்ந்தது!
‘விடுதலை’ நாளேடு நிறுத்தப்படவில்லை என்று சொன்னால், அந்தப் பெருமை யாரைச் சார்ந்தது என்று நினைக்கிறீர்கள். ‘விடுதலை’ குழுமத்தைச் சார்ந்தது. தியாக உள்ளம் படைத்த எங்கள் தோழர்கள், தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல், தொற்று வந்தால், நாங்கள் தாங்குகிறோம் என்று சொல்லி, பெரியார் திடலில் மேலாளர் சீதாராமன், பிரின்சு என்னாரெசு பெரியார், இன்னும் சில தோழர்கள் இருப்பார்கள். நாங்கள் ஓர் அறையில் அமர்ந்திருப்போம்.
வெளியில் வரக்கூடாது, போக்குவரத்துக் கிடையாது – எல்லாவற்றையுமே முடக்கி விட்டார்கள்.
கரோனா தொற்று காலகட்டத்தில் –
ஒரு நாள்கூட நிற்காமல்
‘விடுதலை’ வெளிவந்தது!
அதனால், கணினியை இயக்கக்கூடிய தோழர்கள் அவரவர் வீட்டிலிருந்து நாள்தோறும் ‘விடுதலை’யை தயார் செய்து, இணைய தளம்மூலம் பெரியார் திடலுக்கு அனுப்பி, இங்கே தங்கி இருந்தவர்களோடு நடத்திய அனுபவம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். ஒரு நாள்கூட நிற்காமல் ‘விடுதலை’ வெளிவந்தது.
நெருக்கடி காலத்தில் தணிக்கைமூலம் ஒரு சவால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு, நோய்த் தொற்று காரணமாக, கட்டுப்பாடு என்கிற காரணத்தினால் ஏற்பட்ட ஒரு சவால்.
அப்படி இருந்தும், எதிர்ப்புகளைப்பற்றி கவ லைப்படாமல், அந்த எதிர்நீச்சலும் போட்டு வந்த ஏடு என்ற பெருமை ‘விடுதலை’க்கு உண்டு. அந்தக் காலகட்டத்தில்தான், பிடிஎஃப் முறையில் விடுத லையை அனுப்புவது என்கிற பழக்கம் உருவாயிற்று.
பிடிஎஃப் வடிவத்தில்
‘விடுதலை’யை அனுப்பினார்கள்!
இன்றைக்கு சந்தா வசூல் செய்த தோழர்கள் ஒவ்வொருவரும் ஒருமுறையைக் கையாண்டார்கள். என்ன அந்த முறை என்றால், ஒவ்வொரு தோழரும் 100, 200 பேரை தங்களின் கைப்பேசி எண் பட்டிய லில் வைத்திருந்தார்கள். ‘விடுதலை’ தயாராகி, இணையத்தில் அனுப்பப்பட்டதும்; அந்தப் பட்டிய லில் உள்ளவர்களுக்கு பிடிஎஃப் வடிவத்தில் ‘விடுதலை’யை அனுப்பினார்கள். உடனே எல்லா தோழர்களும் ‘விடுதலை’யைப் படித்துவிடுவார்கள்.
அந்தக் கரோனா தொற்று காலகட்டத்தில், பெரியார் திடல் அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால், எங்களுடைய வீட்டின் மேல் பகுதியை அலுவலகமாக மாற்றிக் கொண்டோம். நான் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, ‘விடுதலை’ப் பணியை மேற்கொள்வேன். நிர்வாக ஆசிரியர் கவிஞர்
கலி.பூங்குன்றன், அவருடைய வீட்டில் தயாராக இருப்பார். இதற்கெல்லாம் அறிவியல் துணையாக இருந்தது.
தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறோம்; அதை தட்டச்சு செய்து, அனுப்புங்கள் என்று சொல்வோம். ‘விடு தலை’ பணித் தோழர்களும் உடனே அதனை தயார் செய்து அனுப்புவார்கள். அதனை ஒருங்கிணைக்கும் பணியை தோழர்கள் செய்வார்கள். இப்படியெல்லாம் கரோனா தொற்று காலகட்டத்தில் பணி செய்தோம்.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது…
இவற்றையெல்லாம் தாண்டி, அரசாங்கத்தில் வழக்கமான பழைய எதிர்ப்புகள். ஜாமீன் கட்டவேண்டும். ஒருமுறை அல்ல, மூன்று முறை தடை செய்யப்பட்டது. திடீரென்று சோதனை செய்வார்கள். நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகுகூட, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, சிந்தாதிரிப்பேட்டை ‘விடுதலை’ அலுவலகத்திற்கு வந்து, சோதனை செய்த காவல்துறையினர், ‘விடுதலை’ ஏடுகளை எடுத்துச் சென்றனர்.
அன்றைக்கு அடக்குமுறைகள் இருந்தது. இப்படி அடக்குமுறை, இயற்கையான தொல்லைகள் – இவற்றையெல்லாம் தாண்டி, அன்றுமுதல் இன்றுவரை ‘விடுதலை’ நாளேடு வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இன்றைக்குக்கூட நாமெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று.
400 என்று சொன்னவர்கள் எல்லாம், இப்பொழுது சுருங்கிவிட்டார்களே!
400 என்று சொன்னவர்கள் எல்லாம், இப்பொழுது சுருங்கிவிட்டார்களே – 400 என்று ஆரம்பித்து, ‘நான் 100′ என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தி ருக்கிறார்கள். அதனை முதன்முதலில் சொன்னது ‘விடுதலை’தான்.
பதவித் திருட்டு, ஓட்டுத் திருட்டெல்லாம் நடைபெறுகிறது!
இதுவரை பொருள்கள் திருடு போயிருக்கிறது என்றுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த விசித்திர ஜனநாயகத்தில் ஓட்டுத் திருட்டு நடைபெற்று இருக்கிறது; பதவித் திருட்டு, ஓட்டுத் திருட்டெல்லாம் நடைபெறுகிறது.
எண்ணிக்கையில் மாறுபாடுகள் வருகின்றன. நல்ல வாய்ப்பாக இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, உச்சநீதிமன்றம் வரையில் சென்று, என்னென்ன பட்டியல் கொடுத்தாக வேண்டும் என்கிற அளவிற்கு வந்தாயிற்று.
எல்லோரும் ‘‘தேர்தல் பத்திரம், தேர்தல் பத்திரம்” என்று சொன்னார்கள். நாம்தான் ‘விடுதலை’யில் ‘பத்திரமாக தேர்தல்’ நடைபெறட்டும் என்று எழுதி னோம். நாணயமான தேர்தல் நடைபெற வேண்டும்; முடிவுகள் நியாயமாக இருக்கவேண்டும் என்று சொன்னோம்.
தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொள்வது எப்படி என்பது எனக்குத் தெரியும்: தந்தை பெரியார்!
எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படாதவர்கள். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்,
‘‘தோல்விகள் வந்தாலும், அந்தத் தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொள்வது எப்படி என்பது எனக்குத் தெரியும், அந்த ரகசியம். அதற்கு ‘விடுதலை’ படியுங்கள்” என்று சொன்னார்.
நாம் தோற்றுப் போகவேண்டும் என்று சொல்ல வில்லை. ஒரு போர்க்களத்தில் நிற்கக்கூடிய போர் வீரன், வெற்றி – தோல்வியைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக, இறுதிவரை தன்னை ஒப்ப டைத்துக் கொண்டிருக்கக் கூடியவன்.
லட்சிய வெற்றியை
நாம் அடைந்திருக்கின்றோம்!
இந்தத் தேர்தலில் ஒரு பெரிய லாபம், இரண்டு வெற்றி. அவை என்னவென்றால், தேர்தலில் வாக்கு வெற்றி என்பது, எண்ணிப் பார்த்து, அது வருவது. அது அரசியல் வெற்றி. ஆனால், லட்சிய வெற்றியை நாம் அடைந்தி ருக்கின்றோம்.
என்ன அந்த லட்சிய வெற்றி தெரியுமா?
மோடி என்பவர், மதவெறியைக் கொண்டு, ஜாதி வெறியைக் கொண்டு தன்னை உயர்த்திக்கொண்ட ஒரு பிம்பத்தை தொடர்ந்து ஒரு 10 ஆண்டுகாலமாக உருவாக்கிக் கொண்டே வந்தார்.
முதலில் ‘ச்சாய்வாலா’ என்று ஆரம்பித்து, பிறகு ‘சவுக்கிதார்’ என்று சொல்லி, கடைசியில் ‘கடவுள் அவதாரமாகவே’ ஆகிவிட்டார்.
(தொடரும்)