திருச்சி, ஜூன் 4- திருச்சி, திருவெறும்பூர், எழில்நகரை சேர்ந்தவர் லட்சுமணன். பெல் நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் தான் இறப்பதற்கு முன்னால் தனது குடும்பத்தாரை அழைத்து திராவிடர் கழகத் தோழர்களிடம் சொல்லி எந்த வித மூடச் சடங்கும் செய்யாமல் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்க வேண்டும் என்று அவர் விருப்பத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த மே 16 ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.
அதன்படி மறைந்த லட்சுமணன் விருப்பத்தின்படி திராவிடர் கழகத் தோழர்கள் அவரது இறப்பின் போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து மூடச்சடங்கு இல்லாமல் வீரமுழக்கமிட்டு அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக அவரது குடும்பத்தினர் முன்னிலையில் வழங்கினார்கள்.
அதே போல காரியங்கள் செய்யக் கூடாது. படத்திறப்புத்தான் நடத்த வேண்டும். பார்ப்பானை அழைத்து எந்த சடங்கும் செய்யக் கூடாது என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதன்படி லட்சுமணன் அவர்களது படத்திறப்பு கடந்த 26.05.2024 அன்று திருவெறும்பூர் எழில்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா. தமிழ்ச்சுடர் தலைமையேற்று லட்சுமணன் படத்தைத் திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார். அவரது உரையில் லட்சுமணன் அவர்களது மகனும், மருமகளும் மருத்துவராக இருப்பதால் இந்தப் பகுதியில் லட்சுமணன் பெயரால் ஒரு மருத்துவமனை துவங்கி ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தால் லட்சுமணன் ஏழைகள் மனதில் நீண்ட காலம் வாழ்வார் என்று வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து பெல் ம.ஆறுமுகம் நினைவுரை ஆற்றினார். அவர் பேசும்போது ஒருவர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்குச் செய்யும் கொடுமைகளையும் அவமானங்களையும் எடுத்துரைத்தார். பார்ப்பனரை அழைத்துச் செய்யும் சடங்குகளில் அவர் கூறும் சமஸ்கிருத்தில் சொல்லப்படும் ஆபாசத்தை எடுத்துரைத்தார்.
இந்தக் குடும்பத்தில் இரண்டு மருத்துவர் இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் மருத்துவம் படிப்பு படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் அவசியம் என்று நிலை இருந்தது. அதனை நீதிக்கட்சி அகற்றாமல் இருந்திருந்தால் இன்றைக்கு தமிழர்கள் யாரும் மருத்துவராகி இருக்க முடியாது, சுதந்திரம் பெற்ற பின் மருத்துவக் கல்லூரியில் இருந்த இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்கள் ஒழித்துக்கட்டிய வரலாற்றையும், தந்தை பெரியாரின் போராட்டத்தால் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்படவில்லையானால் மருத்துவராகி இருக்க முடியாது என்ற வரலாற்றையும் கூறினார்.
அதைத் தொடர்ந்து செ.பா.செல்வம், திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் ஆ.அசோக்குமார், மாவட்ட கழக மகளிரணிச் செயலாளர் சாந்தி, கல்பாக்கம் இராமச்சந்திரன், பொதுவுடைமை இயக்கத் தோழரும், மேனாள் மாமன்ற உறுப்பினருமான தோழர் இராஜ்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோ.நீலமேகம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார். இதில் எழில்நகர் தாமஸ், செங்குட்டுவன், விடுதலை கிருட்டிணன் பெல் கணேசன், வசந்தி இராமச்சந்திரன், அன்புச்செல்வன், அறிவுச்செல்வன் உள்ளிட்ட கழகத் தோழர்களும் உறவினர்கள் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை லட்சுமணன் மகன் மருத்துவர் கதிரவன் வரவேற்று உரையாற்றினார். நிறைவாக மருமகள் மருத்துவர் அனிதா செல்லம் நன்றி கூறினார்.
மறைந்த லட்சுமணன் நினைவாக அவரது குடும்பத்தின் சார்பாக விடுதலை ஓராண்டு சந்தா பெல். ம.ஆறுமுகம் அவர்களிடம் வழங்கப்பட்டது.