முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாழ்த்தரங்கம் நிகழ்வில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ என்று புத்தகத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட நூல் ஆசிரியர் வா.மு. சேதுராமன் பெற்றுக் கொண்டார். உடன் (இடமிருந்து): திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே .பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே .எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்
இரா.முத்தரசன் உள்ளனர்.
சென்னை, ஜூன் 4- பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்
மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம் என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் சென்னை குருநானக் கல்லூரியில் நேற்று (3.6.2024) நடைபெற்றது.
இதில், தி.மு.க. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பேசும்போது, மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா சென்னையில் கடந்தாண்டு ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இன்று தொடங்கும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, ஜூலை இறுதி வரை நடைபெறும். அப்போது சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது, துணிச்சலுக்கு மறுபெயர் கலைஞர். தமிழ்நாடுதான் இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டி. ஸநாதனத்தைப் பற்றி பேசியதாகக் கூறி இந்த கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க நினைத்தனர். அது நடைபெறவில்லை. இதுவே நம் கொள்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, “குரலற்ற மக்களின் குரலாக கலைஞர் இருந்தார். மாற்றுக்கட்சியினரும் பாராட்டிய மிகப்பெரிய ஆளுமை” என புகழாரம் சூட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “சமத்துவத்தை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம். அதுவே கலைஞருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்” என்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது, “அனைவரும் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும். தற்போதைய சூழலில் அது மிகவும் அவசியம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்கினர்.
மாலையில், `புதுமைகள் படைத்த பூம்புகார் தலைவன்’ என்ற தலைப்பில் இசையரங்கம் நடைபெற்றது. இதில், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.மகாராஜன், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், சீர்காழி கோ.சிவசிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், `கருணை பொழிந்த காவியத்தலைவன்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், கவிஞர்கள் பா.விஜய், கபிலன், யுகபாரதி, சொற்கோ கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளருமான ச.அரவிந்த்ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.