மருத்துவ உலகில் பல விநோதமான நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது கெய்லி டாய்ல், 22 நாள்கள் இடைவெளியில் வெவ்வேறு மருத்துவமனைகளில் தன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்
அக்டோபர் 2020இல் இப்பெண் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்துள்ளார். நிலைமை நன்றாகச் சென்று கொண்டிருக்க 2021இல் கருவுற்ற 22 வாரங்களில் முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்திருக்கிறது. சுகப்பிரசவமாக இருந்தாலும் ஆர்லோ எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை நஞ்சுக்கொடியில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக இறந்து பிறந்தது. இரட்டையர்களில் ஒரு குழந்தை மட்டும் பிறந்த நிலையில் மற்றொரு குழந்தை பிறக்கவில்லை. இரண்டாவது குழந்தை உயிர் பிழைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். பிரசவ வேதனை நின்று இயல்பு நிலைக்கு அவர் திரும்பவே மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
எதிர்பாராத விதமாக 22 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தையான ஆஸ்ட்ரோவை அறுவை சிகிச்சையின் (C-section) மூலம் பெற்றெடுத்தார். மருத்துவ கணிப்பை மீறி இரண்டாவது குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால், இரட்டையர்களின் பிரசவத்துக்கு இடையேயான கால இடைவெளி மருத்துவ நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து அப்பெண் கூறுகையில், “என் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சிக்குப் பிறகு, நான் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறியபோது நான் திகைத்துப் போனேன். இன்றுவரை, இங்கிலாந்தில் 22 நாள்களின் இடைவெளியில் இரட்டையர்களைப் பெற்ற ஒரு பெண்ணைக்கூட நான் பார்த்ததில்லை.
வேறொரு மருத்துவமனையில் எனக்கு ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டார், மேலும், இரண்டு பிறப்புகளுக்கு இடையில் தினசரி பரிசோதனை செய்தேன். இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதால் ஏற்படும் அனைத்து ஆபத்துகளையும் நான் அறிந்திருந்தேன். சிக்கல்களை பற்றி நான் மிகவும் கவலைப்பட்டதால், தனியார் மருத்துவரின் சந்திப்புகளுக்குக்கூட பணம் செலுத்தினேன். ஆஸ்ட்ரோ பிறந்தபோது அவன் உயிர்பிழைத்திருப்பதை என்னால் நம்ப இயலவில்லை’’ என்றார்.