நான் பிறந்தது… வளர்ந்தது… படித்தது எல்லாமே சென்னைதான். அம்மா காயிதேமில்லத் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். அப்பா தொழிலதிபர். கடின உழைப்பாளி. எனக்கு ஒரு தங்கை. அவரும் நியூசிலாந்து நாட்டில் பல் மருத்துவராக இருக்கிறார். நாங்கள் தாத்தா, பாட்டி அரவணைப்பிற்குள் வளர்ந்தவர்கள். என் தாத்தா ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றியவர்.
சிஎஸ்அய் இவர்ட் பள்ளியில் +2 வரை படித்து முடித்து, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தேன். பிறகு திருமணமாகி இங்கிலாந்து சென்றபோது எனக்கு வயது 22. என் கணவர் தேவேந்திரன் அப்போது ஆராய்ச்சிப் படிப்பில் இருந்தார்.
பகிர்ந்து வாழுகிற ஷேரிங் வீடுதான் எங்கள் வசிப்பிடமாக தொடக்கத்தில் இருந்தது. பணி செய்கிற இடத்திற்கும் நடந்தே செல்லும் நிலையில்தான் எங்கள் வாழ்க்கை பிரிட்டன் நாட்டில் ஆரம்பித்தது. குடும்பத்தைப் பிரிந்து, முற்றிலும் புதிய மனிதர்களுக்கு நடுவில் வாழ்க்கை கொஞ்சம் கடினமாகவே இருந்தது. என்றாலும் நமக்கென்ற ஒரு தனித்துவத்தோடு சொந்தக் காலில் எப்படி நிமிர்ந்து நிற்பது என்பதை அந்த நாட்டின் சூழல் முழுமையாவே கற்றுக் கொடுத்தது.
பயிற்சி டென்டல் சர்ஜனாக பணியை தொடங்கினேன். எனது கணவர் படிப்பை முடித்து ஆராய்ச்சியாளராக பணி செய்தார். பிறகு எங்கள் குழந்தையை வளர்க்கும் பொறுப்பும் வந்தது. பல் மருத்துவராய் சென்று வருவதை நிறுத்தி, ஒரு தொழிலதிபர் பார்வையில், டென்டல் இன்டஸ்ட்ரி தொடர்பான பயோமெடிக்கல் நிறுவனத்தை தொடங்கினேன். எனது நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பிறகு குளோபல் நிறுவனமாக அமெரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கும் அதனை விரிவுபடுத்தினேன்.
தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெறுகிறது. கூடவே வேர்ல்ட் டென்டல் கவுன்சில் என்கிற அமைப்பைத் தொடங்கி, உலக அளவில் செயல்படுகிற டென்டல் லீடர்களை இணைத்து, நாலேஜ் ஷேரிங் நெட்வொர்க்காகவும் அதை மாற்றினேன். இங்கிலாந்து நாட்டிற்கு நாங்கள் வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனது சேவையை, எனது செயல்பாடுகளை அறிந்தே கன்சர்வேட்டிவ் பார்ட்டியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இன்று நான் முழுநேர அரசியல்வாதியாகவும் செயல்படுகிறேன்.