அ.அன்வர் உசேன்
இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் நடந்த 2024 தேர்தல் அட்டவணை பாஜக வுக்கு குறிப்பாக மோடி பிரச்சாரத்துக்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.
2019 தேர்தல் அட்ட வணை அவ்வாறு மோடி பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. ஆனால் இந்த தேர்தல் இடைவெளி பாஜக வுக்கு சாத கத்துக்கு மாறாக பாதகமாக மாறிவிட்டது என்பதே பொதுவான மதிப்பீடு. பாஜக சந்தித்த பாதகமான அம்சங்களில் ஆர்.எஸ்.எஸ்.- மோடி – அமித்ஷா தலைமைக்கு இடையே உருவான உரசல்களும் ஒன்று! இது பற்றி பலமான விவாதங்கள் ஊடகங்களில் நடந்து வருகின்றன. ராம் மாதவ் உட்பட ஆர்எஸ்எஸ்-சின் தலைவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் இது பற்றி எழுத நிர்ப்பந்தம் உருவாகும் அளவுக்கு இந்த பிரச்சினை முன்னுக்கு வந்துள்ளது.
ஆர்எஸ்எஸ்-சின் பல முகங்கள்
ஆர்எஸ்எஸ் தனது இந்து ராஷ்ட்ரா கொள்கை களை அமலாக்க பல முகங்களை உருவாக்கி யுள்ளது. அதில் அரசியல் முகமாக முதலில் பாரதிய ஜனசங்கமும் பின்னர் பாஜகவும் உருவாக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் தனக்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அழுத்தமாக கூறிவருகிறது.
தங்கள் அமைப்பு சட்டத்தின் 4பி பிரிவில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் கிடையாது என தெளிவாக உள்ளதாக ராம் மாதவ் கூறுகிறார். ஆனால் இது வடி கட்டிய பொய் என்பது அரசியல் தெரிந்த எவர் ஒருவரும் அறிவர். ராம் மாதவ் தனது கட்டுரையிலேயே 1977ஆம் ஆண்டும் 2014ஆம் ஆண்டும் விதிவிலக்காக காங்கிரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தனது ஊழியர்களை செயல்பட வைத்தது என குறிப்பிடுகிறார். ஆனால் அரசியல் தொடர்பு என்பது விதிவிலக்கு அல்ல; ஒரு முக்கிய விதியாக ஆர்எஸ்எஸ்க்கு இருந்து வருகிறது என்பதே உண்மை.
காந்தியார் படுகொலைக்கு பின்னர் சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஆர்எஸ்எஸ்-அய் தடை செய்தார். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் சில வாக்குறுதிகள் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தடை நீக்கப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ்-க்குள் பலமான விவாதம் எழுந்தது. தமது ஊழியர்கள் சிறை உட்பட துன்பங் களை சந்தித்த பொழுது எந்த அரசியல் கட்சியும் ஆதரவு தர முன்வரவில்லை.
எனவே, ஆர்எஸ்எஸ் நேரடியாக அரசியலில் ஈடுபட வேண்டும் என ஒரு பகுதியினர் வாதிட்டனர். கோல்வல்கர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு மாற்று ஏற்பாடாக சில ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் அரசியல் கட்சியை தொடங்குவது எனவும் அதனை ஆர்எஸ்எஸ் வழி நடத்தி ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டது. தீன்தயாள் உபாத்யாயா – பால்ராஜ் மதோக் – நானாஜி தேஷ்முக் – சுந்தர் சிங் பண்டாரி ஆகிய ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் ஜனசங்கம் கட்சியை நடத்த அனுப்பப்பட்டனர்.
அன்றிலிருந்து இன்றுவரை முதலில் ஜனசங்கத்திலும் பின்னர் பாஜகவிலும் அமைப்பு பொது செயலாளர் பொறுப்பில் அனைத்து மட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் தீவிர ஊழியர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மூலம்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை கட்டுப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்-சின் அடிப்படைக் கொள்கையிலிருந்து பாஜக விலகிப்போகாமல் இருக்கும் பணியை அமைப்பு செயலாளர்கள் செய்கின்றனர். எனவே ஆர்எஸ்எஸ்-க்கும் அரசியலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது அப்பட்டமான பொய் ஆகும்.
“இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவது போல தெரியவில்லை என ஆர்எஸ்எஸ் எண்ணுகிறது. ஒருவேளை பாஜக பெரும்பான்மை பெற்றாலும் “எஜமானருக்கு” பதிலாக வேறு ஒருவர் பிரதமராக முன் நிறுத்தப்படுவார் என ஆர்எஸ்எஸ் உள்தகவல்கள் கூறுகின்றன”. “எஜமானர்” என்பது மோடி என்பதை கூறத்தேவையில்லை. ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே புகைச்சல்கள் உள்ளன என்பதை பல செய்திகளும் வெளிப்படுத்துகின்றன. எனினும் இந்த உரசல்கள் எதுவும் தேசம் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கப் போவது இல்லை. ஏனெனில் இரு தரப்பும் இந்துத்துவா கருத்துகளை கைவிடப்போவது இல்லை.
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் பாஜக
இந்து ராஷ்ட்ரா கொள்கைகளை பொறுத்தவரை பாஜக மீது தனது ஆளுமையை முற்றிலும் ஆர்எஸ்எஸ் நிலைநாட்டியுள்ளது. இதர சில பிரச்சினைகளில் பாஜக சிறிதளவு தானாக செயல்பட அனுமதிக்கப்பட்டாலும் அடிப்படைக் கொள்கைகளை பொறுத்த வரை ஆர்எஸ்எஸ் கிழித்த கோட்டை பாஜக மீற அனுமதிக்கப்படுவது இல்லை. எனினும் அவ்வப்பொழுது உரசல்கள் உருவாகியுள்ளன. ஆனால், உரசல்கள் தீர்க்கப்படும் பொழுது ஆர்எஸ்எஸ் தான் எப்பொழுதும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
கோல்வல்கர் ஆசியுடன் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை தொடங்கிய பொழுது அவர் தலைவர் என்ற முறையில் இரண்டு பொது செயலாளர்களை நியமித்தார். ஒருவர் தீன்தயாள் உபாத்யாயா. இவர் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். மற்றொருவர் மவுலி சந்திர சர்மா! இவர் ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர். ஷியாம் பிரசாத் முகர்ஜி மரணத்துக்கு பின்னர் யார் தலைவர் எனும் போட்டி எழுந்தது. ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாத சர்மா தலைவராக நியமிக்கப்பட்டாலும் ஆர்எஸ்எஸ் பின்னணி இருந்த தீன்தயாள் உபாத்யாயாவும் பல அமைப்பு செயலாளர்களும்தான் அதிகாரத்தை கையில் வைத்திருந்தனர். இதனை மாற்ற முயன்று தோல்வி அடைந்த சர்மா பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் சொஹானி தலைவராக நியமிக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் தனது இரும்புப் பிடியை தக்க வைத்துக் கொண்டது.
1968ஆம் ஆண்டு தீன்தயாள் உபாத்யாயா மரணத்துக்கு பிறகு பால்ராஜ் மதோக்- வாஜ்பாய் இடையே தலைமை பதவிக்கு போட்டி உருவானது. ஆர்எஸ்எஸ் வாஜ்பாய் பக்கம் நின்றது. தீன்தயாள் உபாத்யாயாவை வாஜ்பாயும் ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரசும் இணைந்து கொன்றுவிட்டனர் என மதோக் குற்றம்சாட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது. இறுதியில் மதோக் வெளியேற்றப்பட்டார்.
1980இல் ஜனதா கட்சி பரிசோதனை தோல்வி அடைந்த பின்னர் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்குவதில் வாஜ்பாயும் அத்வானியும் முக்கிய பங்கை ஆற்றினர். பாஜகவின் கோட்பாடு “காந்திய சோசலிசம்” என பிரகடனப்படுத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ் பிரசாரகர்கள் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியது. ஆனால் பாஜக ஆர்எஸ்எஸ் பிடியில் இல்லை என்பதை வெளி உலகை நம்பவைக்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை.
எனவே, வாஜ்பாயிக்கு பின்னர் தலைவர் பொறுப்பை ஏற்ற அத்வானி மீண்டும் பாஜகவை ஆர்எஸ்எஸ்-ன் இரும்பு வளையத்துக்குள் கொண்டு சென்றார். வாஜ்பாய் மற்றும் அத்வானி அணுகு முறைகளிடையே வெளியில் முரண்பாடு இருப்பது போல தோற்றமளித்தாலும் உண்மையில் முரண்பாடு இல்லை.
ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் முகத்தை மக்களிடையே விரிவாக்கம் செய்ய வாஜ்பாய் மூலம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அது எடுபடவில்லை என்றவுடனே மீண்டும் பழைய அணுகுமுறை நிலைநாட்டப்படது. ஆர்எஸ்எஸ் விசு வாசத்தை பொறுத்தவரை வாஜ்பாயிக்கும் அத்வானி க்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
1998-2004 வாஜ்பாய் NDA கூட்டணியின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்–பாஜக இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டன. 2005ஆம் ஆண்டு அத்வானியும் வாஜ்பாயும் அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் பகிரங்கமாக கோரினார். அதே ஆண்டு முகமதலி ஜின்னாவை புகழ்ந்ததற்காக அத்வானி தலைவர் பதவியை இழந்தார். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாள ராக இருக்க அத்வானி விரும்பினார். ஆனால் ஆர்எஸ்எஸ் தனது இரும்புக் கரத்தை பயன்படுத்தி மோடிதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது. பாபர் மசூதியை இடித்ததில் முக்கியப் பங்கு உட்பட எந்த “இந்துத்துவா சேவையும்” அத்வானிக்கு உதவ வில்லை. பாஜக மீதான தனது இரும்புப்பிடியை ஆர்எஸ்எஸ் விலக்க தயாராக இல்லை.
மோடி-ஆர்எஸ்எஸ் முரண்பாடுகள்
வாஜ்பாய் காலத்துக்கும் மோடி காலத்துக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக உறவு குறித்து வேறுபாடு என்ன என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் கேள்விக்கு சென்ற வாரம் பதிலளித்த ஜே.பி.நட்டா, “தொடக்கத்தில் பாஜக வலிமை குறைவாக இருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் தேவைப்பட்டது. இப்பொழுது பாஜகவின் வலிமை அதிகரித்துள்ளது. எனவே ஆர்எஸ்எஸ் உதவி இல்லாமலே பாஜக செயல்படும்” எனக் கூறினார். மேலும் பாஜக அரசியல் களத்திலும் ஆர்எஸ் எஸ் சித்தாந்த களத்திலும் செயல்படும் அமைப்பு கள் எனவும் கூறினார்.
நட்டாவின் பதில்கள் இரு அம்சங்களை முன்வைக்கின்றன. ஒன்று ஆர்எஸ்எஸ் ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை. இரண்டாவது ஆர்எஸ்எஸ் குருபீட அமைப்பு அல்ல! மாறாக பாஜக ஒரு அரசியல் அமைப்பு போல ஆர்எஸ்எஸ் சித்தாந்த அமைப்பு.
இந்த பதில்கள்தான் மீண்டும் ஒருமுறை பாஜக – ஆர்எஸ்எஸ் இடையே நிலவும் உரசல்கள் குறித்து விவாதத்துக்கு காரணி யாக அமைந்தது. இதுவரை எந்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை குறைத்து மதிப்பிட்டு பேசி யது கிடையாது. மோடி அல்லது அமித்ஷா அனுமதி யின்றி நட்டா இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. எனவே நெருப்பில்லாமல் புகையுமா எனும் கேள்வி முன்வந்தது.
ஒருபுறம் ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே உறவு முற்றிலும் புதிய தளத்துக்கு சென்றுள்ளது எனவும் இனி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்திருக்காது எனவும் விவேக் தேஷ்பாண்டே எனும் மேனாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணை ஆசிரியர் எழுதுகிறார். மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலான ராமர் கோவில் – 370ஆவது பிரிவு நீக்கம் – பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் – குடி யுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை அமலாக்கியுள்ள மோடியை ஏன் ஆர்எஸ்எஸ் பகைத்துக் கொள்ள வேண்டும்; அது சாத்தியமில்லை எனவும் சிலர் பதில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். உத்தரப் பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் தேர்தல் களத்தில் இல்லை என சில ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
‘தி பிரிண்ட்’ இதழின் செய்தியாளர் சானியா திங்க்ரா உ.பி.யில் பல ஆர்எஸ்எஸ் ஊழியர்களை பேட்டி கண்டு எழுதிய கட்டுரையில் இது உண்மை எனக்கூறுகிறார்.
இந்த்ரா பகதூர் சிங் எனும் ஆர்எஸ்எஸ் ஊழியர் “ஆர்எஸ்எஸ் ஊழியர்களாகிய எங்களது வாக்குகள் பாஜக வுக்குதான்! ஆனால் நாங்கள் வேறு யாரையும் பாஜகவிற்கு வாக்களிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்போவது இல்லை” என அவர் கூறியதை சானியா திங்க்ரா பதிவு செய்துள்ளார்.
இப்படி பல ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் புலம்புவதாக அவர் கூறுகிறார். ஆர்எஸ்எஸ் – மோடிக்கு இடையே ஏன் உரசல்கள்? ஹிந்துத்துவாவின் மய்யப்புள்ளியாக இருப்பது ஆர்எஸ்எஸ் குருபீடமா அல்லது மோடியா? இதுதான் அடிப்படை பிரச்சினை எனக்கூறப்படுகிறது. இந்துத்துவா வலுவடைகிறது.
ஆனால் அதன் புகழ் மோடிக்கு சென்றுவிடுகிறது.
மேலும் மேலும் இந்துத்துவா எனில் மோடிதான் எனும் பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதனை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. மேலும் இதர கட்சிகளிலிருந்து ஏராளமானவர்கள் பாஜகவுக்குள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆர்எஸ்எஸ்-சின் அதிருப்திக்கு காரணம்.
டைனிக் பாஸ்கர் எனும் ஹிந்தி பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கே.பி. மலிக், எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:
“இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவது போல தெரியவில்லை என ஆர்எஸ்எஸ் எண்ணுகிறது. ஒருவேளை பாஜக பெரும்பான்மை பெற்றாலும் “எஜமானருக்கு” பதிலாக வேறு ஒருவர் பிரதமராக முன் நிறுத்தப்படுவார் என ஆர்எஸ்எஸ் உள்தகவல்கள் கூறுகின்றன”. “எஜமானர்” என்பது மோடி என்பதை கூறத்தேவையில்லை. ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே புகைச்சல்கள் உள்ளன என்பதை பல செய்திகளும் வெளிப்படுத்துகின்றன. எனினும் இந்த உரசல்கள் எதுவும் தேசம் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கப் போவது இல்லை. ஏனெனில் இருதரப்பும் இந்துத்துவா கருத்துகளை கைவிடப்போவது இல்லை. பாஜக பெரும்பான்மை பெற இயலாது என்பதே களநிலவரம். பாஜகவின் தோல்வி மோடி-அமித் ஷா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை பின்னுக்கு தள்ளலாம்.
எனினும் பாஜக தோல்வி அடைந்தாலும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான அரசியல் சித்தாந்த –பண்பாட்டுப் போரை வலுவாக தொடர வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி: ‘தீக்கதிர்’ 3.6.2024