1950 களில் அந்த தலைவன் பேசினான் ‘பராசக்தி’ கதாபாத்திரம் குணசேகரனாக…
“அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்… அறிவு கெட்டவனே?” என்று. அந்தக் குரலில் இருந்த நியாயம் இன்னும் முழுமை பெறவில்லை… இப்போதும் தொடர்கிறது… ‘ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்?” என்ற கேள்வியாக… நியாயவான்கள் பதில் சொல்லட்டும். அவர் கையில் எடுத்த பகுத்தறிவு ஆயுதம் கடைசி வரை சுழன்று கொண்டே இருந்தது. இப்போதும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கையில் அந்த வாள் சுழல்கிறது… ‘ஸநாதனத்தை ஒழிப்போம்’ என்று இளைய சூரியன் உதயநிதியின் போர்க்குரலாய் ஒலிக்கிறது…!
ஒடுக்குமுறை நீடிக்கின்றவரை… எங்கள் இனத்தின் மீதான அடக்குமுறை நிழல் படுகிறவரை… திராவிடத்தின் குரலாய் குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கள் இனத்தின் கருத்தை அழிக்க… சீலத்தை சிதறச் செய்ய… சிந்தனையை மழுங்கடிக்க அவாள்களின் ஆதிக்கக் கருவிகள் தர்ப்பைப் புல் தொடங்கி முப்பத்து முக்கோடி கடவுளர்களாய், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிமார்களாய்… 63 நாயன்மார்களாய், 12 ஆழ்வார்களாய்… வேதங்களாய்… இதிகாசங்களாய்… புராணங்களாய்… போராயுதங்களாய் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
கலைஞரின் துணிச்சல்…
அது ஒரு மிசா காலம்…
1975ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட இருண்ட காலம். அதை எதிர்த்து ஜனநாயகக் குரல் எழுப்பிய கலைஞரின் துணிச்சல்… எதுவும் நடக்கலாம். தனக்கும் தி.மு.கழகத்துக்கும் எனற சூழலில் அடக்குமுறை பற்றி அச்சங் கொள்ளாமல் அவரின் உள்ளம் அச்சமற்று செயலாற்றியது.
இந்திய துணைக் கண்டமே அரண்டு போய் இருந்த காலத்தில் தேர்ந்த அரசியல்வாதியாக இக்கட்டான நேரத்தில் எதைச் செயய வேண்டுமோ அதைச் செய்ததன் மூலம் ‘மாவீரர்’ என உயர்ந்தார் – தமது ஆட்சி கலைக்கட்டது… முரசொலியை போராயுதமாக மாற்றினார். உடன் பிறப்புக்கு கடிதங்கள், கரிகாலன் கேள்வி பதில்கள், வீதி நாடகங்கள் என எழுதி ஒடுக்கு முறைக்கு எதிராக நிற்க – போராட – துணிச்சலை தோழர்களுக்கு ஏற்படுத்தினார். மிசாவுக்கு எதிர்வினையாற்றிய செயல் அவரின் அஞ்சா நெஞ்சத்துக்கு எடுத்துக்காட்டு… மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க.வினர் யார் யாரென முரசொலியில் வெளியிடக் கூடாது என்று தணிக்கையாளர் மிரட்டியபோது – அண்ணா நினைவிடத்துக்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியலை வெளியிட்ட பாங்கு
கலைஞர் தேர்ந்த பத்திரிகையாளர் என்பதன் வெளிப்பாடு!
அவர் சிறையிலடைக்கப் பட்டபோது புரட்சிக்கவிஞரின் ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை’ என்று மகிழ்ந்து வரவேற்ற மனப்போக்கு துன்பத்தை எதிர்கொண்ட துணிச்சல் மிக்க செயல் அல்லவா? அரசியலில் அவருடைய பலமே – தாம் செய்கிற செயல்களின் பின் விளைவுகளை அறிந்திருந்ததும் – அரசியல் வாழ்வில் ஒரு போதும் தேவையற்ற அச்சம் கொள்ளாத மன நிலையும்தான்.
தன்னை ஆளாக்கிய தந்தை பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை செலுத்திட வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு… ஆட்சியே போகலாம் இதன் மூலம் என்று அரசுத் துறை அதிகாரிகளே சொன்னபோதும் ‘ஆட்சி போனாலும் பரவாயில்லை’ என்று கலைஞர் எடுத்த முடிவு துணிச்சல் மிக்க செயல்பாடே!
தலைவர் கலைஞரின் பெண்கள் முன்னேற்றத்தில் நுட்பமான சிந்தனை – செயலாக்கம்!
ஜாதியைக் கடந்து திருமணம் செய்பவர்களை குடும்பங்கள் கைவிடும் பட்சத்தில் அவர்களை அணைக்க மற்றொருவர் தேவைப்படுகிறார். குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கு இந்த அரவணைப்பு தேவை. குடும்பங்களைத் தாண்டி ஜாதியைக் கடக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். அப்படிப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக அரசையே மாற்றியவர் கலைஞர். ஜாதி மறுப்பு திருமணம் புரிபவர்கட்கு பாதுகாப்பாக வாழ்வதறகு அரசை ஆதரவு அமைப்பாக ஆக்கியவர் கலைஞர். அதுபோலவே கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்கவிக்கும் விதமாகவும் அரசை மாற்றியவர் கலைஞர்.
கணவனை இழந்த பெண்கள் படும் அவலம், சுமக்கும் இழிவு ஜாதிக் கலப்பைத் தடுப்பது என்கிற சமூக செயல்பாட்டுக்கு எதிர்நீச்சல் போட்டு மகளிரின் அக – புற வாழ்க்கையை தனதுயிர் உள்ள வரை வாழ வகை செய்தவர் கலைஞர்.
வரலாறு நெடுக சுரண்டப்பட்டு வந்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டப் பூர்வமாக இயற்றி இந்தியாவுக்கே வழிகாட்டியவர் கலைஞர். குடும்ப அமைப்பினுள் சிதறல்களை ஏற்படுத்தும் – கட்சியின் வாக்குகள் குறையலாம் என்பது தெரிந்தும் அதை இயற்றாமல் விடவில்லை.
அரசு வேலைவாய்பு வழியாக நடைபெறும் ஒரு குடும்ப முன்னேற்றம் ஆணின் வழியாக மட்டும் நடந்தால் அது குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும். இதைத் தவிர்க்க அரசு வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு பெண்களுக்கும் வழங்கியவர் கலைஞர். பெண்கள் பணம் ஈட்டும்போது அவர்களின் மன பலம் பெருகுகின்றது. குடும்பங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் தங்களின் கணவன்மார்களிடமிருந்து அதிகாரத்தை பேரமிட்டு தங்கள் ஆளுகைக்கு சிறிது சிறிதாக சமப்படுத்துகின்றனர். கணவர் இல்லாத வீட்டில் பெண் தலைமை ஏற்கவும் இந்த ஒதுக்கீடு வழிசெய்தது.
கல்வித் துறையில் கலைஞரின் சாதனை!
கல்வி வள்ளல் காமராசரை அடுத்து 2006 – 2011இல் கலைஞர் செய்திட்ட கல்விப் பரட்சி மகத்தானது.
பள்ளிக் கல்வியில் சமச்சீர் கல்வி முறை…
உயர்கல்வியில் கல்லூரி நுழைவுத் தேர்வு ரத்து…
முதலாம் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே வழங்கியது. இவையெல்லாம் கல்வித் தடத்தில் மறக்க முடியாத கல்விச் சீரிதிருத்தங்கள்…
(நானே ஒரு உதாரணம்…)
கல்வி வேலைவாய்ப்பில் அருந்ததியர்களுக்கு… இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு சமூக நீதியின் நீட்சி…
பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் சட்டம் செய்ததோடு வாளாவிருக்காமல் தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கும் அளித்து ஊக்கம் தந்தவர் கலைஞர். அது மட்டுமா? தமிழில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20% இடஒதுக்கீட்டையும் வழங்கி தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவசியத்தை தூண்டியவர் கலைஞர்.
பள்ளிச் சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டை, முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப் பழங்கள் தந்தவர் கலைஞர். முட்டை 5 நாட்கள் போடுவதற்கு எத்தனை எதிர்ப்பு… எதிர்ப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் குழந்தைகள் நலனைப் பற்றி அக்கறை கொண்டு செயல்படுத்தியவர் கலைஞர்.
அமெரிக்காவில் நான் கண்டு வியந்த விடயங்களில் நூலகங்கள் முக்கியமானவை. அப்படி ஒரு பிரமாண்டமான உலகத் தரத்தில் அண்ணா நூலகத்தை சென்னையில் ஏற்படுத்தியவர் கலைஞர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் சார்பில் ஊராட்சி தோறும் கிராம அளவில் படிப்பின் அவசியத்தை உணர்த்த நூலகங்கள் ஏற்படுத்தினார் காப்பாளர் நியமனத்துடன்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், கட்டணத்தை முறைப்படுத்தவும் தமிழ்நாடு பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2009 உருவாக்கினார். ஒரு நபர் நீதிபதி தலைமையில் குழுவினை அமைத்து மிகத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தினார். அதுபோலவே பல எதிர்ப்புக்கும் மத்தியில் ஒன்றிய அரசின் திட்டமான தனியார் பள்ளிகளில் 25% இடங்களுக்கு ஏழை மாணவர்கட்கு இடஒதுக்கீடு என்பதை உறுதிப்படுத்தினார் கலைஞர்.இவையெல்லாம் அத்துணை சுலபமாக நிறைவேற்றப்படவில்லை.
ஜாதி வெறியர்கள், மத வெறியர்கள், தனியார் பள்ளி நடத்திவரும் லாப வேட்டைக்காரர்கள் அரியணை வெறியர்கள் அதிகார வர்க்கத்தினர் என அத்தனை பேரின் எதிர்ப்புகளையும் மீறித்தான் செயல்படுத்திட முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டைடல் பார்க் தந்து பல லட்சம் பேருக்கு…
நவீன தமிழ்நாடு பெரிதும் நம்பி இருப்பது தகவல் தொழில் நுட்பத் துறைதான். இந்த துறைக்கு முதன்முதலில் விதையைப் போட்டவர் கலைஞர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கை என்ற ஒன்று இல்லாத காலகட்டத்தில் “தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பக் கொள்கையை (IT Regulations Act) வடிவமைத்தவர் கலைஞர் ஆவார். பின்னர்தான் இந்த கொள்கையைப் பின்பற்றி நடுவண் அரசு தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வடிவமைத்தது.
அதன் தொடர்ச்சியாக முதல் இணைய தள மாநாட்டை நடத்தினார் கலைஞர். வருங்காலம் சேவைத் துறையில்தான் உள்ளது என்பதை உணர்ந்த கலைஞர் போட்ட விதைதான் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவான டைடல் பார்க். அவர் அன்று போட்ட விதைதான் இன்று சென்னை ராஜீவ் காந்தி சாலை முழுவதும் பரவியுள்ளது. 1996-2001இல் கலைஞர் முதலமைச்சராக இருந்த அவரின் பொற்கால ஆட்சி தந்த சாதனையே இவையெல்லாம்.
IT துறையின் வளர்ச்சிதான் பல லட்சம் இளைஞர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெற்று உள்ள வளர்ச்சிக்கு அடிப்படை ST, SC, MBC, BC என நமது சமுதாய இளைஞர்களை மென்பொருள் பொறியாளர்களாக ஆக்கி அழகுபார்த்த அருந்தலைவர் தலைவர் கலைஞரே. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் தமிழில் பேசிக் கொண்டு நிற்கிறார்கள் என்றால் காரணம் திருக்குறளை தந்த கலைஞரே.
கலைஞரின் ஜாதி ஒழிப்பு
ஜாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க செய்ய கடுமையாகப் போராடினார். ஆட்சி அதிகாரம் கிடைத்தபோது செயல்வடிவம் கொடுத்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்று எண்ணி கலைஞர் பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து நடைமுறைப்படுத்தினார். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரும் ஆகமங்களில் பயிற்றி பெற, வாய்ப்பளித்து அதற்கான ஆகம பயிற்சிக் கூடங்களை ஏற்படுத்தினார். பார்ப்பனீயத்தின் உயர்ந்த இடம் ஆட்டம் கண்டது.
ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தங்கப் பதக்கம், சான்றிதழ் என அரசின் சார்பில் ஆணை பிறப்பித்தார். கோவில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் பட்டியலினத்தவர்களுக்கு கட்டாயம் இடமளிக்க ஆவன செய்தார். அனைத்து ஜாதியினரும் சேர்ந்து வாழ சமத்துவபுரங்களைப் பெரியார் பெயரால் ஏற்படுத்தினார்.
தலைவர்களின் பிறந்த நாள் நினைவாக
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று தமது வாழ் நாளெல்லாம் தொண்டாற்றி தன்மானம், மனமானம் செழிக்கவும், அறிவு வளர்ச்சி பெறவும் பகுத்தறிவுத் தூண்டலை – சிந்திக்கும் ஆற்றலை மனித மூளையில் தூண்டியவர், ஜாதி ஒழிப்பின் மூலம் மனித சமத்துவத்தை நிலைநாட்டியவர், இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ததன் மூலம் சமூக நீதியை நிலைப்படுத்தியவர், அடிமைத் தனத்தில் சிக்கிச் சீரழிந்த மகளிர் குலத்தை மாண்புக்குரியவர்களாக ஆக்கிட பெண் விடுதலை பேணியவர், அனைத்து வித ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுவித்து சமத்துவ பாதையில் மக்களை வழிநடத்திய வித்தகர், சுயமரியாதை சூடேற்றி அடிமையாகாமல் வாழ வழி வகை செய்த மானுட நல விரும்பி, சுரண்டலற்ற சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தி உழைத்த உத்தமர், அடிமைத் தனத்தை பாதுகாக்கும் ஜாதி – மத ஒழிப்பே சமூக விடுதலை என போரிட்ட ஆண்டகை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளினை சமூக நீதி நாள் என்றும்,
அறிவுலகத் திருத்தூதுவன், அரசியல் சட்ட சிற்பி, ஒடுக்கப்பட்டோர் விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்ட அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளினை சமத்துவ நாள் என்றும்,
குலக்கல்வித் திட்டம் ஒழித்து மூடப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையை பல மடங்காய் திறந்து கல்வியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதர்க்கும் கிடைக்கச் செய்ய கல்வி வெள்ளத்தை கரைபுரண்டு ஓடச் செய்த கர்மவீரர் பச்சைத் தமிழர் காமராசரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகவும், ஜாதியிலும் மதங்களிலும் மயங்கி நின்ற மக்களை சமயங்கள், ஆசிரமங்கள், கலை உரைத்த கற்பனைகள் போன்றவற்றை கைவிடக் கோரியவர், பழைமையிலே நிலைகொள்ளாமல் நலிதரும் சிறிய தெய்வங்களை கைவிட்டு அறிவார்ந்த சன்மார்க்க ஞானநெறியில் வாழ வழிநடத்திய வடலூர் வள்ளலாரின் பிறந்த நாளை தனிப்பெருங் கருணை நாளாகவும் அறிவித்து, அவர்களின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி அரசின் சார்பிலான அங்கீகாரத்தை வழங்கி சான்றோர்களை கவுரவித்த ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. தலைவர் கலைஞர் தொடங்கிய பணியை தொடர்ந்தும் ஆற்றி வருபவர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
வரலாற்றின் கொடூரமான விதிகளுக்கு எதிராக அவனே தங்கள் கடைசித் துருப்புச் சீட்டு என்று கருதி இருந்த… கலைஞரே தங்கள் கட்சி மீட்பர் என்று எண்ணி இருந்த மக்களுக்கு… இல்லை இல்லை இதோ எனக்குப் பின்னாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறான்… அவனைப் பற்றிக் கொள்ளுங்கள் பாதுகாப்பான் என்றல்லவா விட்டுச் சென்றுள்ளார். தொண்டு தொடர்கிறது… நாடு பாதுகாப்பாய் நரபலிக்காரர்களிடம் இருந்து காப்பாற்றப்படுகிறது திராவிட மாடல் ஆட்சியால்!
பொற்கால ஆட்சி தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் நவீன பொற்கால ஆட்சி செலுத்தி இந்திய துணைக் கண்டம் வியக்கும் வண்ணம் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு எழுச்சி பெற ஓயாது உழைக்கிறார் தளபதி – தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
திராவிட மாடல் ஆட்சியை பாதுகாத்திடும் கடமையும் பொறுப்பும் தாய்க்கழகத்துக்கே உரியது என தகைசால் தமிழர் விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகிறார். தக்க மதி உரைஞராக பெரும்பணி ஆற்றி வருகிறார். இந்திய துணைக் கண்டமே எதிர்பார்க்கும் தலைவராய் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். தம்மின் தம் மக்கள் அறிவுடைமையன்றோ!