சென்னை, ஜூன் 3- தமிழர்களின் சுயமரியாதையை, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காத்து நிற்கும் பேராயுதமான “விடுதலை” நாளேடு தனது 90 ஆம் ஆண்டினை தொடங்குகிறது. நன்றியுள்ள மக்களின் பேராதரவுடன், விடுதலை தேனீக்களாக திராவிடர் கழக தோழர்கள் சேகரித்த விடுதலை சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக 1.6.2024 அன்று நடந்தது.
நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வரவேற்றார். இது ஓர் வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வு; அனைவரும் இணைந்து விடுதலையின் நூற்றாண்டையும் கொண்டாட வேண்டும் என்று மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, விடுதலை சந்தா சேகரிக்க சென்ற இடங்களில் நடைபெற்ற சுவையான சம்பவங்களை விவரித்தார். அதிக அளவில் புத்தகங்களை வெளியிடுவது நாம் தான். கருத்தியல் தாங்கிய நூல்கள் வெளிவர விடுதலை தான் காரணமாக இருக்கிறது என்றும், இயக்கத்தவர்கள் தங்கள் இல்லத்து பிள்ளைகளுக்கு சொத்து சுகம் இருப்பதைவிட விடுதலை வாசிக்கிறார்கள் என்பதுதான் பெருமையாக கருதுகிறார்கள் என்றார். இயக்கத்தை கடந்து ஆசிரியர் பெற்றிருக்கும் மதிப்பை உடுமலையில் மறைந்த பார்ப்பனர் சுப்பிரமணியம் அவர்களின் இல்லத்தில் நடந்த செய்திகளை விவரித்தார். இயக்கம், கட்சி, ஜாதி, மதம் ஆகிய அனைத்தையும் கடந்து ஆசிரியர் அனைவரின் பெரு மதிப்பையும் பெற்றிருக்கிறார். விடுதலை நூற்றாண்டை ஆசிரியர் நூற்றாண்டுடன் சேர்ந்து நடத்துவோம் என்றார்.
கழகத் துணைத் தலைவர், விடுதலை நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்.
விடுதலையை காத்து நின்ற ஆசிரியர்:
நிகழ்வில் துணைத் தலைவர், விடுதலை நிருவாக ஆசிரியர் கவிஞர் நோக்கவுரை ஆற்றினார். அவரது உரையில் : 90 ஆண்டு விடுதலையில் 62 ஆண்டுகள் ஆசிரியர் என்ற புதிய வரலாற்றை படைத்திருக்கும் நமது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறி தொடங்கினார் இந்த நாள் இயக்கத்திற்கு மட்டுமல்ல நம்முடைய இனத்திற்கு பொன்னாள் என்றார். ஒரு பகுத்தறிவு நாளேடு நாத்திக நாளேடு 90 ஆண்டுகள் பயணிப்பது என்பது விடுதலைக்கே உரிய சிறப்பு என்றும் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விடுதலைக்கு 1962 ஆம் ஆண்டு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. விடுதலைக்கு அடுத்து யார் ஆசிரியர் என்பதுதான் அந்த நெருக்கடி = அந்த நெருக்கடியான சூழலில் தனது 29 வயதில் விடுதலையின் ஆசிரியராக பெரியாரால் அடையாளம் காணப்பட்டவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்பதை எடுத்துரைத்து, அவர் பொறுப்பேற்றபோது விடுதலை வெளிவந்து
27 ஆண்டுகள் ஆகியிருந்தன; இன்று விடுதலை 90 ஆம் ஆண்டை கொண்டாட காரணமாக இருப்பவர் நமது ஆசிரியர் தான் என்றார். 1937 ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலையை பார்க்கும் போது அன்றைய காலத்தில் தமிழ் மொழி எப்படி இருந்தது என்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சொற்களில் கூட சமஸ்கிருத மயம் எவ்வளவு நிரம்பி இருந்தது என்பதையும் விளக்கி, 1938 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கி வைத்த ஹிந்தி எதிர்ப்புக்கு பிறகு இருந்த புது உணர்ச்சி, தமிழ் மானம் எப்படி இருந்தது என்பதை விடுதலையின் மூலம் புரிந்து கொள்ளலாம் என்றார்.
இலக்குகளை அடைந்த விடுதலை!
மேலும் விடுதலையின் பெட்டிச் செய்தி கூட அது அடைய வேண்டிய இலக்கை எப்படி அடைந்திருக்கிறது என்பதை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைத்தார். குறிப்பாக விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் பெயரை சூட்ட இருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து இது உண்மையா? என்று ஆசிரியர் விடுதலையில் வெளியிட்ட பெட்டிச் செய்தியால் அந்த மாவட்டம் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி என்று பெயர் பெற்ற வரலாறு, அண்ணாவின் அமைச்சரவையில் மபொசி இடம்பெற இருக்கிறார் என்ற செய்தி அறிந்து எதிரிகளின் ஒற்றனை கூடாரத்திற்குள் விடுவதா? என்ற தந்தை பெரியாரின் விடுதலையில் வெளிவந்த கேள்வியால், எதை வேண்டுமானாலும் மீறுவேன் ஆனால் அய்யாவின் வார்த்தைகளை என்னால் மீற முடியாது; வேண்டுமென்றால் அய்யாவை போய் கேளுங்கள் என்று அண்ணா மபொசியிடம் கூறிய வரலாறுகள் அனைத்தையும் எடுத்துரைத்தார். 1937 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த போது தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினார். கட்சி வெற்றியடையவில்லை என்று கவலைப்படாதீர்கள்; தோல்வியை நம்மால் மாற்ற முடியும் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம்: ஆளுக்கொரு விடுதலையை வாங்குங்கள்; ஒரு குடிஅரசை வாங்குங்கள் என்று தந்தை பெரியார் ஒரு பத்திரிகை எவ்வளவு பெரிய மாற்றத்தை செய்யும் என்பதை எடுத்துரைத்த விதத்தை விளக்கினார். மற்ற ஏடுகளைவிட விடுதலை எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு போய் நிச்சயம் சேரும் என்றும், ஆசிரியரின் நூற்றாண்டையும் விடுதலை நூற்றாண்டையும் ஆசிரியர் தலைமையில் நாம் கொண்டாடுவோம் என்றார். விடுதலை தேனீக்களாக பயணித்து, விடுதலை சந்தாக்களை சேகரித்து தந்த அனைத்து தோழர்களுக்கும் மனமகிழ்வுடன் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தார்.
விடுதலை களஞ்சியம் வெளியீடு:
விடுதலை களஞ்சியம் 1937 இரு தொகுதிகளை திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்கள் வெளியிட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் பெற்று கொண்டார்.
பத்திரிகை அல்ல; கொள்கை ஏடு:
விடுதலை களஞ்சியம் 1937 (இரு தொகுதிகள்) வெளியிட்டு திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில்: விடுதலை களஞ்சியத்தை வெளியிடும் மிகப்பெரிய வாய்ப்பினை தனக்கு வழங்கியதற்காக ஆசிரியர் அவர்களுக்கும், விடுதலை குழுமத்திற்கும் நன்றி கூறி தொடங்கினார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்; அதே வேளையில் குடிஅரசு வார ஏட்டின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். அந்த சூழலில் தான் விடுதலைக்கு 90 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படுகிறது. இவை அனைத்துமே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை எடுத்து சொல்லும் விதமாக தான் கொண்டாடபடுகிறது என்றார். மேலும் விடுதலையில் வந்த ஒரு செய்தியை வைத்து ஒரு நூல் எழுதும் அளவிற்கு எத்தனை செய்திகளை விடுதலை தாங்கி நின்றது என்பதை விளக்கினார். விடுதலை என்பது ஒரு பத்திரிகை அல்ல; இது ஒரு கொள்கை ஏடு என்றார். நம்முடைய இனத்தை, மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தை நிமிர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஏடு என்றார். ஏதோ ஒரு இதழை தொடங்கினோம் பிறகு அதை நிறுத்தி விட்டோம் என்ற அளவில் பெரியார் எந்த இதழையும் தொடங்கியது கிடையாது. ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்காக அவை தொடங்கப்பட்டன என்று கூறி, ‘பகுத்தறிவு’ நாளேடு எப்படி உருவானது என்ற வரலாற்றினை எடுத்துரைத்தார். ஒவ்வொரு இதழையும் தொடங்குவதற்கு மிகச் சரியான காரணங்கள் பெரியாரிடம் இருந்தன என்பதை சுட்டிக்காட்டினார்.
விடுதலை களஞ்சியம் – நமது வாழ்வின் களஞ்சியம்!
குறிப்பாக, விடுதலை தன்னுடைய சந்தேகங்களுக்கு எல்லாம் எப்படி விடையாக அமைந்திருக்கிறது என்பதை வரலாற்று குறிப்புகளுடன் விளக்கினார். அலமேலு மங்கை தாயாரம்மாள் பற்றிய பல்வேறு குறிப்புகள் விடுதலையில் இடம் பெற்று இருப்பதையும் அந்த செய்திகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு 1937 ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலை இதழ்கள் விளக்கம் அளிப்பதாகவும் கூறினார். நடேசனார் பற்றி அறிய வேண்டிய அரிய செய்திகள் எப்படி விடுதலையால் நமக்கு கிடக்கிறது என்பதை விளக்கினார். மேலும் தாழ்த்தப்பட்ட தலைவர்களை மேலே ஏற்றி விடுவதற்காக விடுதலை செய்த அரும்பணிகளை விளக்கினார். விடுதலை தந்தை பெரியாருடைய கைகளுக்கு வந்த நேரம் என்பது சரியாக தேர்தல் நடப்பதற்கு அய்ந்து நாட்களுக்கு முன்னால் தான்; அப்படி ஒரு சூழலில் பெரியார் எந்த வகைகளில் எல்லாம் விடுதலையை திறம்பட நடத்தினார் என்பதை எடுத்துரைத்தார். விடுதலையில் நிறைய செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. அது வரலாற்றுக்கு பெரிய லாபம் என்றார். அதிலும், பார்ப்பனர்கள் குடுமி வைத்திருக்கும் செய்தி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த குடுமிக்கு பின்னால் இருக்கக்கூடிய வேதங்களை அவர்கள் சொல்லும் கதைகளை விடுதலையின் மூலம், தான் அறிந்து கொண்ட விதத்தை விளக்கினார். 1937 ஆம் ஆண்டுகள் வெளிவந்த விடுதலையில் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இந்த குடுமியை பற்றி இருக்கும் செய்தியை விவரித்து அந்த செய்தி 18.9.2022 அன்று வெளியான ஹிந்து ஆங்கில நாளிதழின் கட்டுரையில் வெளிவந்திருப்பதை ஒப்பிட்டு காட்டினார். விடுதலை களஞ்சியம் என்பது நமது வாழ்வின் களஞ்சியம்; நமது மீட்புக்கான அடையாளச் சின்னம். நாம் அனைவரும் விடுதலையை வளர்த்தெடுப்போம் என்று நிறைவு செய்தார்
வரலாற்றில் நிலைத்து நிற்கும் விடுதலை!
விடுதலை களஞ்சியம் 1937 (இரு தொகுதிகள்) பெற்றுக்கொண்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில்: விடுதலை 90 ஆம் ஆண்டு சிறப்பிதழில் கரிகாலன் என்பவருடைய கவிதையை எடுத்துரைத்து விடுதலை 90 ஆண்டுகள் நடந்து வருகிறது என்பதைவிட சிறப்பு விடுதலை சாதித்திருக்கிறது என்பதுதான் என்றார். நாம் பத்திரிகை நடத்தவில்லை யுத்தம் நடத்துகிறோம் என்று கூறி, ஒரு இதழுக்கு 62 ஆண்டுகள் ஒருவர் ஆசிரியராக இருப்பது என்பது தனக்குத் தெரிந்து இவர் மட்டும் தான் என்றார். தன்னுடைய வாழ்விணையர் ஏன் அவரை ஆசிரியர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலை பார்க்கும் எங்களை போன்ற ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் ஆசிரியர் தான் என்ற போதிலும், 62 ஆண்டுகள் ஒரு இதழின் ஆசிரியராக இருக்கிறார். அந்த பெருமை அவரை மட்டும் தான் சாரும் என்று தான் அளித்த விளக்கத்தை எடுத்துரைத்தார். 29 வயதில் ஆசிரியராக பொறுப்பேற்ற அவர், 92 வயதிலும் ஆசிரியராக இருந்து விடுதலையை நடத்தி வருகிறார் என்றார். விடுதலை களஞ்சியத்தை பெறும் வாய்ப்பை கொடுத்து, இந்த மேடையில் ஆசிரியரே வந்து பயனாடை அணிவித்தது மட்டற்ற மகிழ்ச்சி என்று தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தி, விடுதலை களஞ்சியம் தொகுதி-1 இல் 80 பக்கங்கள் ஆசிரியர் வழங்கியுள்ள அணிந்துரை சிறு நூலாக வெளிவர வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். தந்தை பெரியார் அவர்கள் பத்திரிகைகளை இரண்டு வகையாக பிரித்தார். ஒன்று வணிக நோக்கத்தோடு சுயநலத்தோடு வெளிவரக்கூடிய பத்திரிகைகள்; மற்றொன்று கொள்கையை எடுத்துரைக்கும் கொள்கை பத்திரிகைகள். இதில் முதல் வகையான பத்திரிகைகள் லட்சக்கணக்கில் மக்களை சென்றடையும் ; கொள்கை பத்திரிகைகள் ஆயிரக்கணக்கில் சென்றடைவதே கடினமான காரியம்தான்.ஆனால் முதல் வகை பத்திரிகைகள் வணிக நோக்கோடு நடைபெறக்கூடிய பத்திரிகைகள் மக்கள் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்தும் என்றார். மேலும் கொள்கை ஏடுகளுக்கு எதிர்ப்புகள் அதிகம் பார்ப்பனர்கள், அரசியல்வாதிகள், பதவியில் இருப்பவர்கள், பணக்காரர்கள் என்று அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி கொள்கை ஏடுகள் வெளிவரும். கடவுளை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து ஒரு ஏடு 90 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்திருக்கிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை என்றார். வணிக ஏடுகள் படிக்கப்படும் பின்னர் குப்பைக்கு போகும். ஆனால் கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்றார். 1937 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தந்தை பெரியாரால் வெளியிடப்பட்ட கட்டுரையில் நீதிக்கட்சி பொறுப்பாளர்களை பார்த்து நம்மால் ஒரு பத்திரிக்கையை நடத்த முடியவில்லை என்றால் ஒரு நாட்டை , ஒரு கட்சியை எப்படி நடத்துவோம் ? என்று கேட்ட கேள்வியை கூறி, எத்தனையோ பத்திரிகைகள் பார்ப்பனர் அல்லாதவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒரு நாளில் பல காரணங்களால் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. எல்லா தடைகளையும் தாண்டி விடுதலை இன்று வரை வெளிவருகிறது என்று சொன்னால் பெரியாரோடு இந்த ஏடு நிறுத்தப்பட்டு இருந்தால் இவ்வளவு பெருமையை அது பெற்றிருக்காது. அதற்குப் பிறகும் 62 ஆண்டுகள் ஆசிரியர் அதனை நடத்தி வருகிறார் என்பதுதான் பெருமை என்றார். தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வைகளை விடுதலையின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக உலகப்போர் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இத்தாலியின் பாசிச ஆட்சி உலக நாடுகளை ஆக்கிரமிக்க இருக்கிறது என்ற பெரியாரின் செய்தியும், குடும்பக்கட்டுப்பாட்டை பற்றி அரசு பேசுவதற்கு முன்பே லண்டனில் இருக்கக்கூடியவரை மேற்கோள் காட்டி பெரியார் விடுதலையில் பதிவிட்ட செய்திகள் தொலைத்தொடர்பு இல்லாத காலகட்டத்திலேயே அவரின் அறிவை நமக்கு தெரியப்படுத்துகிறது என்றார். தனக்காக உழைத்த மனிதர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன்னை மறந்து உழைத்தவர் தந்தை பெரியார் என்றார். தமிழ்நாட்டுக்கு வந்து தியானம் செய்கிறார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு தியானம் செய்ய அவர்களுக்கு ஏராளமான நேரம் இருக்கும். அவர்கள் தொடர்ந்து தியானம் செய்யட்டும்; நாம் உழைப்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
வருகை தந்த அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பிலும் விடுதலை குழுமத்தின் சார்பிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நன்றி கூறினார். வரலாற்று குறிப்புகளுடன் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.