முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!!
சென்னை, ஜூன் 3 ‘‘கலைஞர் தனி மனிதரல்ல! தந்தை பெரியார் தத்துவத்தின் மறுவடிவம்! அவர் விட்டுச் சென்ற பாடங்களைப் படிப்போம், அதன்படி நடப்போம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் – சிலைக்கு மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:
‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை வர்ணித்துக் கொள்வதில் உண்மையான மகிழ்ச்சியையும், பெரு மையையும் அடைந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு நல்வாய்ப்பாகும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களு டைய நூற்றாண்டில்தான், வைக்கம் நூற்றாண்டு நிறைவு பெறக்கூடிய அளவிற்கு, அந்தப் போராட்டம் வாழ்க்கை யாக அமைந்தது.
கலைஞருடைய வாழ்க்கையைப்பற்றி, அவரே சொன்னபடி, வாழ்க்கையே போராட்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல்காரராக இருந்தார். பதவியில் இருந்தபொழுதுகூட, அவர் எதிர்நீச்சல் அடித்தார். அதில் வென்று காட்டினார்.
அதுபோலவே, அவருடைய நூற்றாண்டு நிறைவடைகின்ற நேரத்தில், ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ என்பதில் அவர் பெருமையுற்றாரே, அந்த சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு தொடங்குகிறது.
திராவிடர், திராவிடத்தின் பெருமை என்பதை கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மறக்காதவர்!
திராவிடர், திராவிடத்தின் பெருமை என்பதை கலைஞர் அவர்கள் எப்பொழு தும் மறக்காமல், ஒவ்வொரு நாளும் ‘முரசொலி’யில் முழங்கிக் கொண்டிருந்தவர் ஆவார்.
காதலர்கள் பேசுகின்ற நேரத்திலே கூட, ‘‘காதலிலே, கடமையிலே களம்போகும் பேச்சு, கணவனுக்கும், மனைவிக்கும் திராவிடமே மூச்சு’’ என்பதையே முத்தாய்ப்பாக தன்னுடைய ‘முரசொலி’ யிலே முகப்பிலே போட்டிருந்தவர்.
அப்படிப்பட்ட கலைஞர் அவர்களு டைய நூற்றாண்டு நிறைவு – தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சிறப்பான சுயமரியாதை இயக்கம் எத்தனை எத்தனை நூற்றாண்டு நாயகர்களைத் தந்திருக்கிறது; எத்தனை சிறப்பான ஒரு சுயமரியாதை கூடமாக, ஒரு பாசறையாக ஆகியிருக்கிறது என்பதற்குக் கலைஞரின் சகாப்தமும், சரித்திர சாதனைகளும் மிகத் தெளிவாக விளக்கக்கூடியதாகும்.
கலைஞர், தந்தை பெரியாரின் தத்துவத்தின் மறுவடிவம் – செயலாக்கம்!
எனவே, கலைஞர் என்பவர் தனி மனிதரல்ல; அவர், தந்தை பெரியாரின் தத்துவத்தின் மறுவடிவம் – செயலாக்கம்!
எனவே, கலைஞர் வாழ்கிறார், மறைய வில்லை; நிறைந்திருக்கிறார், உலகம் முழுவதும் கலைஞருடைய பணியினாலே – உலகத் தமிழர்கள் பயன்பட்டிருக்கிறார்கள்.
எல்லா நாட்டிலும் இருக்கக்கூடிய தத்துவங்கள், சுயமரியாதைச் சுடரொளியாக இங்கு சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டி ருக்கின்றது.
இதுதான் இன்றைய செய்தி!
கலைஞரின் பாடத்தைப் படிப்போம், பயன்பெறுவோம்!
எவ்வளவு சவால்கள் வந்தாலும், எதிர்நீச்சல்கள் வந்தாலும், எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஏற்று, வெற்றிகரமாக வெளியே வருவோம் என்பதற்குக் கலைஞர் நல்ல பாடம்!அந்தப் பாடத்தைப் படிப்போம், பயன்பெறுவோம்! வாழ்க கலைஞர்!
மக்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு, நாளை தெரியும்!
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வரவிருக்கிறதே, முடிவுகள் யாருக்குச் சாதகமாக இருக்கும்?
தமிழர் தலைவர் பதில்: மக்களுடைய எண்ணம், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த காரணத்தினால்தான், பா.ஜ.க. வினர், கடைசி நேரம்வரையில் இழுத்துப் பார்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்.
கருத்துத் திணிப்புகளைத் திட்டமிட்டே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எந்தக் கருத்துத் திணிப்புகளாக இருந்தாலும், அது ஏடுகளிலே வருமே தவிர, மக்கள் உள்ளங்களிலே பிரதிபலிக்காது. மக்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு, நாளை (4.6.2024) இந்த நேரத்திலிருந்து தொடங்கி, நாட்டிற்குச் சிறப்பாக இருக்கும்.
இந்தியா முழுவதும் கிடைக்கும்!
எனவே, இருள் நீங்கும்! உதயசூரியன் இங்கு மட்டுமல்ல, அது ஒளிவீசும் சூரியனாக வரக்கூடிய வாய்ப்பு இந்தியா முழுவதும் கிடைக்கும். கிடைக்கும் என்று நம்புவோம்!
வெற்றி நமதே!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.