ஓட்டேரியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஆசிரியர் எழுச்சியுரை!

viduthalai
5 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஜூன் 2 கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நவீன கண்காட்சியும், கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டும், உரையாற்றியும் சிறப்பித்தார்.
முத்தமிழர் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் “காலம் உள்ளவரை கலைஞர் – தமிழகத்தின் நவீன சிற்பிக்கு நவீன கண்காட்சியகம்” எனும் பெயரில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்காட்சியகம் 1.6.2024, அன்று காலையில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களால் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்த கண்காட்சியகத்தைப் பார்வையிட வருகை தந்தார். அவரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கே.சேகர்பாபு, வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், முனைவர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் சமஸ் ஆகியோர் மக்கள் புடைசூழ வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு திராவிடர் இயக்க பண்பாட்டின் படி, அமைச்சர் அவர்களால் ஆடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
இந்தக் கண்காட்சி 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் மற்றும் இறுதிப்பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மார்பளவு மெய்நிகர் உருவம் பேசுவது போல் அமைத்து, கண்காட்சிக்கு வருகின்றவர்களை கலைஞரே வரவேற்று வழியனுப்புவது போல் அமைத்துள்ளனர். படக்கண்காட்சியைத்தவிர, கலைஞர் பிறப்பது முதல் இறப்பது வரையிலான ஒளி. ஒலிக்காட்சி உணர்ச்சிபூர்வமாக திரையிடுகின்ற ஒரு சிறு திரையரங்கம் அமைப்பும், 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை மெட்டா நிறுவனம் வடிவமைத்துள்ள தலையில் பொருத்தும் நவீன கருவி மூலம் கலைஞரின் சாதனைகளை நாற்காலியில் சுழற்றிக் கொண்டே காணொலிக்காட்சியை கலைஞருடனேயே பயணம் செய்துகொண்டே பார்வையிடும் உணர்வைக் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த அரங்கக்காட்சியும் வியப்பைக் கொடுக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண்காட்சியை பார்வையிடும் போது, ஆசிரியர் – அமைச்சர், வி.அய்.டி வேந்தர், எழுத்தாளர் சமஸ், முனைவர் பர்வீன் சுல்தானா, அமைச்சர் ஆகியோருக்கு படங்கள் தனக்குள் கிளர்ந்தெழச் செய்த மறக்க முடியாத வரலாற்றுத் தரவுகளை பகிர்ந்து கொண்டே வந்தார். பார்வையாளர்கள் குறிப்புப் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்துவிட்டு ஓட்டேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் புறப்பட்டார். இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், க.கலைமணி மற்றும் உடுமலை வடிவேல், மகேஷ். அண்ணா மாதவன், சதீஷ், மாணவர் கழகத் தோழர் கவின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாலை 7 மணிக்கு, சென்னை ஓட்டேரி ஹேம்ராஜ் பவன் மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, “வற்றாத தமிழாறு! மகத்தான வரலாறு!” எனும் தலைப்பில் கருத்தரங்கம் அதே சென்னை கிழக்கு மாவட்டம் – திரு.வி.க. நகர் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பில், பகுதிச் செயலாளர் செ.தமிழ்வேந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெரு நகரமேயர் ஆர்.பிரியா, சட்ட மன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி மற்றும் அரங்கு நிறைந்திருந்த மக்கள் முன்னிலையில் ஆசிரியர், வி.அய்.டி.வேந்தர், முனைவர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் சமஸ் ஆகியோர் கலைஞருக்குப் புகழாரம் சூட்டினர்.
வி.அய்.டி. வேந்தர் கல்வியில், முனைவர் பர்வீன் சுல்தானா பெண் விடுதலை, எழுத்தாளர் சமஸ் பத்திரிகையாளர் என்ற பார்வைகளில் கலைஞருக்கு புகழாரம் சூட்டினர். ஆசிரியர், சுயமரியாதைக்காரர் கலைஞர் என்ற பொருளில் மக்களை எழுச்சி கொள்ளத்தக்க வகையில் உரையாற்றி சிறப்பித்தார். அவர் தனது உரையில், கலைஞர், கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்பதை, “தமிழில் அர்ச்சனை” செய்யப்படும் என்று மாற்றியும், தமிழுக்கு செம்மொழி தகுதி வாங்கி கொடுத்தும் மொழி மானம் காத்தது எப்படி? மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டி அவர்களின் சுயமரியாதையை காத்தது எப்படி? தன்னையே ”மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று சொல்லி, அதற்கு மாண்புமிகு வரும், போகும். ஆனால் மானமிகு வந்தால் போகாது என்று கூறியது ஏன்? தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான, ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற கருத்துக்கு கலைஞர் சட்டமியற்றிதற்குக் காரணம் என்ன? இன்று சமூகநீதியின் சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை சாத்தியமாக்கியது எப்படி? ”குற்றப்பரம்பரை” என்ற வார்த்தைக்குப் பதிலாக ”சீர்மரபினர்” என்று மாற்றி கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையை கலைஞர் காத்தாரே! ஏன்? ”சுயமரியாதை” தானே? அதே சுயமரியாதை தானே, ஆட்சியையே இரண்டு முறை இழக்கவும் வைத்தது! என்று கலைஞர் சுயமரியாதை உணர்வு காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, ஏற்றங்களை அரங்கில் கூடியிருந்த மக்கள் எழுச்சி கொள்ளும் வண்ணம் அடுக்கினார். இறுதியில், நமது முதலமைச்சரைக் கண்டு, வடக்கில் உள்ள சிலர் அஞ்சி நடுங்குகின்றனர். இப்போதும் உதயசூரியன் தகித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த வெப்பம் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின் தான் தணியும். சிலர் அந்த வெப்பம் தாங்காமல் தியானம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று அரசியல் பஞ்ச் வைத்து மக்களின் கரவொலி கலந்த வெடிச்சிரிப்பினூடே தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் சி. பாசுகர், செம்பியம் கழக தலைவர் பா. கோபாலகிருட்டிணன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், க. கலைமணி, மகேஷ், கவின், அண்ணாமாதவன், சதீஷ், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மா. ருத்ரமூர்த்தி, பரிமளா சுரேஷ்பாபு நன்றி கூறினர்

.

‘கலைஞர் கண்காட்சியகம்’ ஆசிரியர் பதிவு
சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா ‘அண்ணாமலை முத்தமிழ் மன்றத்தில்’ சென்னை கிழக்கு மாவட்டம் தி.மு.க. சார்பில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாடு செய்து 1.6.2024, அன்று திறந்து வைக்கப்பட்ட, “காலம் உள்ளவரை கலைஞர் – தமிழகத்தின் நவீன சிற்பிக்கு நவீன கண்காட்சியகம்” சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், பார்வையாளர்கள் குறிப்புப் புத்தகத்தில், “இந்தக் கண்காட்சி கலைஞருக்குச் சேர்க்கும் வெறும் புகழ் மாலை மட்டுமல்ல, அனைவரும் பல மணி நேரம் படித்துப் பெறவேண்டிய அரிய செய்திகளைப் படங்களாக்கி, பாடங்கள் சொல்லித்தரும் வகுப்பு! மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை செயல்பாபு என்று ஏன் முதலமைச்சர் அழைத்தார் என்பது புரிகிறது இப்போது! தொடரட்டும் இப்பணி! பரவட்டும் திக்கெட்டும் திராவிடத்தின் பெருமை!” என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *