சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதியும் 10ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது. மேலும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால், ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய நாளே 2024-2025ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
ஆனால், தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது. முன்னதாக ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறையொட்டி, கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.