ஓர் இயக்கத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தைத் தொய்வின்றித் தொண்ணூறு ஆண்டு காலமாகச் செய்து வருகிறது விடுதலை இதழ். கடவுள், மத எதிர்ப்பு, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு எனப் பல்வேறு தளங்களில் அதன் பணி அளப்பரியது. குறிப்பாக, மக்களிடையே பல்கிப் பெருகியிருந்த மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வந்தது விடுதலை.
தந்தை பெரியார் இதுகுறித்துக் கூறும்போது “எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியிலேயே செலவிட்டிருக்கிறேன். இன்னும் இந்தத் துறையிலேயே எனது எஞ்சிய வாழ்நாளையும் செலவழிக்க வேண்டும் என்றே முடிவு செய்து கொண்டிருக்கிறேன்” என்கிறார் (விடுதலை, 05.12.1949).
மேலும் மூடநம்பிக்கைக்கான காரணத்தைப் பற்றிப் பேசும்போது, “மதமே பெரும்பாலும் மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் காரணமாய் இருந்து வருகிறது.
எனவேதான் உலகில் இருந்து வரும் ஒவ்வொரு மதத்திலும் ஏதாவதொரு மூடநம்பிக்கைக் கருத்தும் இருந்து வருகிறது” என்றார் பெரியார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பேசுவது நடைமுறையில் கடினமான செயல். ஆனால் விடுதலை இதழ் அப்பணியில் நீண்ட காலமாகத் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் ஜோதி தெரிவதாக நம்புவது ஒரு மூடநம்பிக்கை. மனிதர்களின் செயலால் அது நடைபெறுகிறது. அதை எள்ளல் செய்து, ’எண்ணெய்யும் திரியும் இன்றேல் அண்ணாமலை ஜோதி அரோகரா’ என்றொரு அடிக்குறிப்பு விடுதலையில் (04.12.1949) வெளியிடப்பட்டுள்ளது.
இரஷ்யாவிற்குத் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் ஈ.வி.கே. சம்பத் மற்றும் இராமசாமி இருவரும் சென்றபோது நடைபெற்ற நிகழ்வு சுவையானது. அங்கிருந்த ஒரு குழந்தை ’பசு மாட்டை இந்தியர்கள் கும்பிடுவது குறித்துக் கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு அமைச்சர் இராமசாமி மாடு பால் தருவதாகவும், அதனால் கும்பிடுவதாகவும் பதில் அளித்தபோது, “எருமை மாடு அதைவிட பால் அதிகமாகத் தருகிறதே? அதை ஏன் கும்பிடுவதில்லை” என்று கேட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிட்டுப் பேசும் ஆசிரியர் ”மதம், மூடநம்பிக்கைகள், ஜாதி ஆகியவை ஒழிந்தால்தான் நாடு பொருளாதாரத்தில் முன்னேறும்…….மூடநம்பிக்கையின் முடைநாற்றமல்லவா இந்நாட்டில் வீசிக் கொண்டிருக்கிறது” என்று பேசியுள்ள செய்தியை விடுதலை வெளியிட்டுள்ளது (விடுதலை, 20.03.1983).
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு குளக்கரை அரசமரத்தில் நாகம்மாள் என்ற கடவுள் குடி கொண்டிருப்பதாகக் கதை கட்டி வழிபாடு ஆரம்பித்த செய்தியுடன், இதுபோல பல்வேறு ஊர்களில் நடக்கும் புரட்டுகளை அம்பலப்படுத்தி, கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது விடுதலை இதழ் (பட்ட மரங்கள் கடவுள்களா? – ம.மு. கண்ணன், 02.07.2010). இதுபோல மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தில் விடுதலையின் பணி ஏராளம், ஏராளம்.
”மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே” என்று பெண் குழந்தைக்கு எழுதிய தாலாட்டுப் பாடலில் பாடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அந்தக் கற்பூரப் பெட்டகமாய் விளங்கும் விடுதலை 90-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வீடுதோறும் விடுதலை சென்று சேர வேண்டும்! வீணான நம்பிக்கைகள் விரட்டப்பட வேண்டும்!