அறிஞர் அண்ணா
தன்னலங்கருதாது உழைக்கும் தொண்டினை, மேற்கொண்ட தோழர்கள் சுயமரியாதைக்காரர்களே ஆவர். “அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை வந்தெய்தும் பராபரமே” என்று கூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தன்னலக் கருத்துடன், ஒரு குறிப்பிட்ட சமய மக்களுக்கென்றே உழைக்கத் தொடங்கிய காலத்து, மக்கள் இனத்திற்கே உழைக்க முன் வந்து, மக்கள் இனம் உயர்வு தாழ்வு இன்றிச் சமத்துவமாக, பகுத்தறிவு பெற்று, மூட நம்பிக்கை களும் பழக்க வழக்கங்களும் அற்று, உன்னத வாழ்வு வாழ வேண்டுமென்னும் கருத்துக் கொண்டு அல்லும் பகலாக அயர்வுறாமல் உழைத்தவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆவர்.
1925 ஆம் ஆண்டு முதற்கொண்டே, மக்களின் துரதிருஷ்ட நிலை கண்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், மக்களனைவரையும் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கி, அறிவுச் சுடர்களாக விளங்க வைக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டார்கள். பெரியார் அவாக் கொள்வதென்றால் அது பேச்சளவில் நிற்காது; உடனே உருக் கொள்ளத் தொடங்கிச் செயலளவில் தோன்றிவிடும் என்பதை எவரும் அறிவார்கள்.
மக்கள் பகுத்தறிவு பெற்று விளங்கவேண்டுமென்று பெரியாரவர்கள் எண்ணினார்கள்; எண்ணத்தை கொணர்ந்து பண்படுத்தினார்கள். நாடெங்கும் சுயமரியாதைச் சங்கங்கள் தோன்றின; பகுத்தறிவு மன்றங்கள் பெருகின; அறிவு வளர்ச்சிக் கழகங்கள் அரும்பின; உண்மை விளக்க அவைகள் உண்டாயின; எங்கு நோக்கினும் அறிவுத் தாகம் பெருகி, மக்கள் பகுத்தறிந்து, உண்மையை உணர்ந்து கொள்ளப் பேரவாக் கொள்பவர்களாய்ப் பெருகினர். நாட்டில் ஆரியத்தாலும் பிறவற்றாலும் புகுத்தப்பட்டிருந்த மூடநம்பிக்கைகளும், ஆபாசச் சடங்குகளும், அறிவீனப் பழக்க வழக்கங்களும் ஆட்டங் கொடுத்துப் போயின. இளைஞர்கள் இவ்வாபாசங்களைக் களைந்தெறிய வீறுகொண்டெழுந்தனர்; வீராவேசங் கொண்டனர், அறுத்தெறிந்தனர் சடங்குகள் என்னும் அடிமைத் தளையினை.
நாடெங்கும் பகுத்தறிவு பரவிற்று
பழைய சடங்குகள் பதுங்கின; புரோகிதமற்ற திருமணங்கள் நடைபெற்றன. மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்றனர்; எங்கும் அறிவு ஒளி வீசத் தொடங்கியது.
ஆனால் இடைக் காலத்தே சிறிது ஓய்வு ஏற்பட்டது. தலைவர் பெரியார் அவர்கள் உடல் நலமின்மையாலும், தமிழ் மொழிக்கே ஆபத்து உண்டாக்க சிலர் முயன்று அதை எதிர்த்துப் பெரும்போர் புரிந்து வெற்றி காணும் திருப்பணியில் பெரியாரவர்கள் இறங்கியிருந்தமையாலும், ரயில்வே போன்ற பொது ஸ்தாபனங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் பார்ப்பனர்களுக்கு வேறு, பார்ப்பனரல்லாதவர்களுக்கு வேறு என்ற வகுப்புவாத வெறி தலை தூக்கிக் கிடந்த காலை, அதனையழித்து, அவை மக்கள் அனைவருக்கும் பொதுவில் பயன்பட வேண்டியவைகளெனப் போர் நடத்தி வெற்றி காணும், நற்றொண்டில் ஈடுபட்டிருந்தமையாலும் இடையில் சிறிது ஓய்வு காணப்பட்டது.
ஆனால் நம் இயக்கம் பகுத்தறிவு ஊட்டும் பேரியக்கமாக வளரத் தொடங்கிய போது பழைய புராணங்கள் போருக்கெழுந்தன; தர்ப்பைக் கட்டுகள், தெகிடுதத்தங்களில் இறங்கின. பண்டிதர்கள் பொறுமையிழந்து பொருமத் தொடங்கினர். ஒரே சமயத்தில் நானா மூலைகளிலிருந்தும் எதிர்ப்பும், கூச்சலும், ஆர்ப்பாட்டங்களும் கிளம்பின; அளவு கடந்த ஆரவாரங்கள் செய்யப்பட்டன. ஆனால். சுயமரியாதைக் கட்சி ஆண் சிங்கமெனத் தலை நிமிர்ந்து முன்னே சென்று கொண்டிருக்கையில் குள்ள நரிக் கூட்டங்களின் ஆர்ப்பரிப்பும். கொக்கரிப்பும் அதனை என்ன செய்ய முடியும்? இவற்றினை அது சட்டைதான் செய்யுமா? இந்த வகையில் 1925ஆவது ஆண்டில் பெரியார் இட்ட பகுத்தறிவு வித்து பரவி விழுந்து பயிராகிப் பூத்துக் காய்த்துப் பழுத்துப் பலனளிக்கத் தொடங்கி விட்டது. அதன் பயனைத் திராவிடநாடு நன்கு அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. தமிழர், தமிழர் வாழ்வு, தமிழ் மொழி, திராவிட நாடு என்ற உணர்ச்சி பெரியாரவர்களின் உழைப்பின் பயனாகவே இந்நாட்டில் பெருகத் தொடங்கிவிட்டது.
திராவிட மக்களின் அடிமை வாழ்வு, அறிவீனச் செயல்கள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்குக் காரணம் ஆரிய ஆதிக்கமும், ஆரியச் செல்வாக்கும் திராவிட நாட்டில் பரவியிருப்பதே என்னும் உண்மை பெரியாரவர்களின் உழைப்பின் பயனாகவே வெளியாயிற்று எனவே திராவிடர்கள் எந்த விதமான மூட, குருட்டுப் பழக்க வழக்கங்களும் இல்லாமல், உயர்வு தாழ்வில்லாமல், உன்னதமான வாழ்வு நடத்த வேண்டும் என்னும் அவாக் கொள்ளத் தொடங்கி விட்டனர். அதற்கும் பெரியாரவர்கள் சலிக்கவில்லை. திராவிட நாட்டுப் பிரிவினை கோரிப் பெருங்கிளர்ச்சி தோற்றுவித்தார்கள். இன்றும் திராவிடர்களின் அரசியல் பிரச்சினை திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் என்று பெரியாரவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
எனவே, இப்போது திராவிடர்கள் நல்வாழ்வு பெறவேண்டுமாயின், திராவிட நாட்டைத் தங்கள் சொந்த நாடாகப் பிரித்துக் கொண்டு தங்கள் சொந்த அரசியல் நடத்தி, தங்கள் மொழி. நாகரிகம், கலை, செல்வம் ஆகியவற்றில் அன்னியர் தலையிட்டுப் பாழ் படுத்தி விடாமல் காத்துக் கொள்ள வேண்டுமாயின். நம் தனிப் பெரும் தலைவர் பெரியார் ஈவெரா அவர்கள் காட்டும் வழியே நின்று முன்போல் தன்னலமற்ற தொண்டாற்றத் துணிதல் வேண்டும்
திராவிட இளைஞர்களே! 64 ஆண்டுகள் நிரம்பி.. 65ஆவது ஆண்டை நாளை 17ஆம் தேதி அடையவிருக்கும் நம் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் அடிக்கடி பிணிவாய்ப்பட்டும், உரோமம் நரைத்தும், தோல் திரைந்தும், உடல் உலுத்தும் சற்றேனும் உள்ளம் உலுக்காமல் மன உரம் குன்றாமல், 25 வயது இளைஞனை விடப் பெரும் வீரம் உடைய வராய் மீண்டும் போர்க்களத்தில் குதித்துவிட்டார்கள். இதோ திராவிட இளம் வீரர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உள்ளார்கள். திராவிடத்தைத் தனிப்பெரும் நாடாக, அறிவுச் சுடர் ஒளி வீசும் உன்னத நாடாக, உயர்வு தாழ்வு கருதாக பகுத்தறிவு மணம் வீசும் மக்களைக் கொண்ட நாடாக ஆக்கி வைக்க வேண்டி, திராவிட இளம் வீரர்களைத் திருச்சிக்கு அழைத்துள்ளார் நம் தலைவர் பெரியார் அவர்கள்.
இடையிலே ஓய்வுற்றிருந்த சமயத்திலே, மீண்டும் கலைகளின் பெயராலும், கவிதைகளின் பெயராலும் இன்னும் என்னென்னவோ பெயர்களாலும் பழைய மூடப் பழக்க வழக்கங்கள் தலை தூக்க ஆரம்பித்து விட்டனவென்பதையும், ஆரியர்கள் பலவிதச் சூழ்ச்சிகளைக் கையாண்டு திராவிடர்களை அடிமைத் தளத்தில் ஆழ்த்தி வைக்கப் பெரும் முயற்சி எடுத்து, திராவிடர்களுட் சிலரைத் தங்கள் கையாட்களாக அமர்த்திக் கொண்டு வேலை செய்து வருகின்றனர் என்பதையும் நம் தலைவர் அறிந்தே, தக்க சமயத்தில் அச்சதிச் செயல்களை அகற்றி அடியோடு களைந் தெறிய எண்ணியே போர் துவக்க, திருச்சியில் கொடியேற்றம் நடைபெறப்போகிறது. தோழர்களே! தயாராகுங்கள் இப்போருக்கு: மக்களை மக்களாக வாழச் செய்யும் திருப்பணிக்கு, திராவிடரை அடிமைத் தனத்திலிருந்து மீட்கும் தொண்டுக்குத் தயாராகுங்கள்! திரண்டு வாருங்கள் திருச்சிக்கு. ஒன்றுபடுவோம். மீட்போம் திராவிடத்தை முட்டாள் பழக்க வழக்கங்களிலிருந்து ஆரிிய அடிமைத் தனத்திலிருந்து!
– “விடுதலை” 10-9-1943