சென்னை சட்டப் பேரவையில் உயர்ந்தபட்சம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து சில நிலச்சுவான்தார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இதுகுறித்து தந்தை பெரியார் விடுதலையில் சுப்ரீம்கோர்ட் நீதிப் போக்கு கண்டன நாள் 29.3.1964 என்று தலைப்பிட்டு விடுதலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (14.3.1964)
அவ்வறிக்கையில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
முக்கியமான மூன்று கடமைகள்:
(1) பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தாக வேண்டும்.
(2) பத்திரிகைகளின் செல்வாக்கை அழிக்க வேண்டும்.
(3) நீதித்துறையில் நீதித் தீர்ப்புகளுக்கு உள்ள மரியாதையைக் கெடுத்தாக வேண்டும்.
இந்த மூன்று காரியங்களும் எந்த அளவுக்குச் செய்வதானாலும் அது நம்மால்தான் முடியக் கூடும்.
29.3.1964 ஞாயிற்றுக்கிழமை சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் என்று பெயரிட்டு விளம்பரம் செய்து அன்று நாடெங்கும் பொதுக் கூட்டங்கள் கூட்டி இந்த விஷயங்களைக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி
(1) பிரதம நீதிபதி, சுப்ரீம் கோர்ட், புதுடில்லி.
(2) இந்தியக் குடியரசுத் தலைவர், புதுடில்லி
(3) இந்தியப் பிரதமர், புதுடில்லி
(4) விடுதலை காரியாலயம், சென்னை-2
ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
– ஈ.வெ. ராமசாமி
குறிப்பு: 29.3.1964 தேதிக்குப் பதிலாக 19.4.1964 ஞாயிற்றுக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் கண்ட நாள் பொதுக் கூட்டம் மாற்றியமைப்பதாக தந்தை பெரியார் அறிவித்தார். (விடுதலை 27.3.1964)
குறிப்பு: பிற்காலத்தில் சட்டம் திருத்தப்பட்டது.