தவத்திரு குன்றக்குடி அடிகளார்
31.10.1965 அன்று மாலை 8 மணி அளவில் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்ட ‘விடுதலை’ப் பணிமனையினைத் திறந்து வைத்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆற்றிய அரிய உரையின் சாரம்:-
பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தலைவர் பெரியார் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் ‘விடுதலை’ பத்திரிகையின் புதிய பணிமனையினைத் திறந்து வைக்கும் பணியினை விழாக்குழுவினர் எனக்கு அளித்துள்ளார்கள். அவர்களுக்கும் தலைவர் பெரியார் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
தலைவர் பெரியார் அவர்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கொள்கை இருந்தாலும் லடசியத்தில் நாங்கள் இருவரும் ஒன்றுபட்டவர்கள் என்று திரு.கி. வீரமணி அவர்கள் வரவேற்பு உரையில் கூறினார்.
அவர் கூறியதுபோல எங்களுக்குள் இருப்பது நடைமுறைக் கொள்கையில் மாறுபாடே ஒழிய முரண்பாடல்ல.
தமிழினத்தில் எந்தத் துறையில் யார் மேலோங்கி இருந்தாலும் அவர்கள் மாறுபட்ட கொள்கை உடையவர்களாக இருந்தாலும் பெரியார் அவர்கள், அவர்களிடம் காட்டும் பரிவும் அன்பும் ஏராளமாகும்.
அந்த முறையில்தான் இந்த ‘விடுதலை’ப் பணிமனையினைத் திறந்து வைக்க என்னைக் கூப்பிட்டு இருக்கின்றார்கள்.
காந்தி அடிகள் தமது காலத்திலேயே தமக்குப் பிறகு முற்போக்காளர் தலைமை நாட்டுக்கு வேண்டும் என்று கருதி நேருஜி அவர்களை தமது காலத்திலேயே காங்கிரசின் தலைவராக முக்கிய புருஷராக ஆக்கினார்.
அதுபோல் தலைவர் பெரியார் அவர்கள் சகல தகுதிகளும் ஒருங்கே அமைந்த தலைவராக இருப்பதால், இந்த நாட்டினை நல்வழியில் நடத்திச் செல்ல தலைவர் காமராசரின் தலைமைதான் தகுதியானது என்று கண்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னமேயே மக்களுக்கு அதை உணர்த்தினார்கள்.
‘விடுதலை’யுடன் தொடர்பு
நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ‘விடுதலை’ படித்து வருபவன் அதற்கு முன்பும் ‘விடுதலை’யில் வரக்கூடிய கருத்துகளுக்கு மறுப்புகள் எழுதியும் வந்து இருக்கின்றேன்.
தலைவர் பெரியார் அவர்கள் சமயத் துறையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி கண்டித்து வருகின்றார்கள். அப்படி அவர்கள் கண்டிப்பது கண்டு, கடுமையாகத் தாக்குவது கண்டு சமயத்துறையில் உள்ளவர்கள் சிலருக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணுகின்றது.
சமயத் துறையில் களையெடுப்பு
எப்படிப் பயிர்கள் செழித்து வளர பயிருடன் சேர்ந்து முளைத்து இருக்கும் களைகளை எடுக்க வேண்டியது அவசியமோ, அதுபோல சமயத்துறையிலும் செழிப்பு ஏற்பட வேண்டுமானால் அத்துறையிலும் உள்ள களைகளை எடுக்கவேண்டும். பெரியார் அவர்கள் அத்தகைய பணிகளைத்தான் செய்கின்றார்கள். சமயத்துறையில் உள்ளவர்கள். தாங்கள் அக்களைகளை வளர்த்த பாசத்தின் காரணமாக பெரியார்அவர்கள் களைவது பயிரா, களையா என்று உணராமல் வருத்தப்படுகின்றார்கள். பெரியார் அவர்கள் 87ஆம் ஆண்டு பிறந்த தினமலரிலும் இதே கருத்தைத்தான் நான் எழுதி இருக்கின்றேன்.
மனிதனுக்குத் தேவையான கருத்துகளைத் தோற்றுவிப்பதில், தோற்றுவிப்பவன் நண்பனாக இருந்தால் நல்ல கருத்துகளைத் தோற்றுவிப்பான், பகைவனாக இருந்தால் கேடான கருத்துகளைத்தான் தோற்றுவிப்பான். பன்னெடு நாட்களாக நமது சமுதாயத்துக்குக் கேடான கருத்துகளே தோற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.
நல்ல கருத்துகளைத் தோற்றுவிப்பவர் பெரியார்
தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க இந்தப் பத்திரிகையைத் தொடங்கினார்கள்.
‘விடுதலை’யின் புரட்சிக் கருத்துகளை புதுமைக் கருத்துகளை வரவேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால் அவர்கள் அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள்.
மேல்மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால் இப்போதுதான் அவர்கள் கைக்குப்போய் சேர்ந்து கொண்டு இருக்கின்றது.
‘விடுதலை’ படிப்பது தமிழரின் கடமை!
தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய ‘விடுதலை’யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும்.
‘விடுதலை’ வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் ‘விடுதலை’ தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டும்.”
வள்ளுவர் கூறிய தன்மான வழி!
திருவள்ளுவர் மனிதனுக்கு மானம் பெரிது என்று சொன்னார்; எதிரிகளிடம் இருந்து நமது மானத்துக்குப் பங்கம் ஏற்படாமல் வாழவேண்டும் என்பதுதான் பொருள்.
ஆனால், உன் இனத்துக்குத் தொண்டு செய்ய முற்படும்போது உன் இனத்தில் உள்ளவர்களாலேயே உனக்கு ஏற்படும். மான, அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாதே; காரியம் ஆற்று; கவலைப்பட்டால் உனது பொதுத்தொண்டின் பலன் பயன் அற்றதாகிவிடும் என்றார்.
பெரியார் அவர்கள்பணியும் அத்தகையதுதான் ஆகும்.
நீங்கள் கட்டுப்பாடு உடைய மக்களாக, பண்பு உள்ள மக்களாக மாற வேண்டுமானால் அவசியம் ‘விடுதலை’ போன்ற முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டும்.
‘விடுதலை’ படிக்காதவர் தமிழராகார்
‘விடுதலை’ வாங்கிப் படிக்காதவர்கள், பெரியார் கூட்டத்துக்குச் சென்று அவர்தம் அறிவுரையைக் கேட்காதவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அறிவிப்புச் செய்துகொள்ளாதவர்கள் என்பதுதான் பொருள் ஆகும்.
தலைவர் பெரியார் அவர்கள் தமிழர்கள் நலங்கருதி நடத்தக்கூடிய இந்த ‘விடுதலை’ பத்திரிகைக்கு மாதம் ரூ.3000க்கு மேல் நஷ்டம் ஏற்படுகின்றது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்.
மாதம் ஒன்றுக்கு ரூ.3000 நட்டம் என்றால் வருஷம் 26000 ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.
சந்தாவைப் பெருக்கி நஷ்டஈடு செய்க!
எனவே தமிழ்மக்களாகிய நாம் ‘விடுதலை’ப் பத்திரிகைக்கு அதிகப்படியாக சந்தாதாரர்களாகச் சேர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாகவே நட்டத்தை ஈடுசெய்து பெரியார் அவர்களை உற்சாகப்படுத்திவிட வேண்டும். தமிழர்களின் திருநாளான தைப் பொங்கலுக்குள் இந்தப் பணியினை மக்கள் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
பெரியாரின் நூல்களைப் படியுங்கள்!
தலைவர் பெரியார் அவர்களின் பத்திரிகையின் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களினை தமிழர்கள் ஒவ்வொரு தினம் ஒரு மணி; அரைமணி குறைந்தது கால் மணியாவது ஒதுக்கிப் படித்து தங்களைத் திருத்தப்பாடு உடையவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்;
நான் முன்பு குறிப்பிட்டதுபோல தமிழர் திருநாளாகிய பொங்கலுக்குள்ளாக அதிகப்படியாக தமிழர்கள் ஒவ்வொருவரும் ‘விடுதலை’ சந்தாதாரர்களாகச் சேரவேண்டும்.
தோழர்களே! விடுதலை வளர்ச்சி பெற்றால் ஆக்கம் பெற்றால் தமிழர்கள் வளர்ச்சி பெறுகின்றார்கள்; ஆக்கம் பெருகுகின்றார்கள் என்பதாகும்.
தமிழர் நலங்காக்க
ஆங்கில ‘விடுதலை’ தேவை!
‘விடுதலை’யினை ஆக்கமும் வளர்ச்சியும் உடையதாக நாம் செய்து காட்டிவிட்டால் தமிழில் ‘விடுதலை’ நடப்பது போல ஆங்கிலத்திலும் ஒரு தினசரி துவங்கி நடத்தும்படி நாம் கேட்டுக்கொள்ளலாம். தமிழனுக்கு என்று ஆங்கிலத்தில் ஒரு ஏடுகூட இல்லையே!