* தந்தை பெரியார்
இன்றுமுதல் (01-07-1937) “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிகை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன்.
இதை அறிந்தோ, அறியாமலோ தமிழ்மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகை யில்லாக் குறையை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும், ஊக்கப்படுத்தியும், பலத் தீர்மானங்களும், வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்துவந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதனாலும், தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத்தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாகக் காணப்பட்டதாலும், அதற்குப் பெருங்காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிகை இல்லாதது என்று உணர்ந்ததாலும், அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்றத்தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும் நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ்டமும், தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றைச் சமாளிக்கத் தமிழ்மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையின் மீது துணிந்து ஒரு தினசரி தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டு விட்டேன்.
இதற்கு ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும், அனுதாபிகளும் ஆதரவளிப்பதாக வாக்களித்ததால் எனது துணிவு சீக்கிரத்தில் என்னைக் காரியத்தில் இறக்கி அனுபவத்தில் கொண்டுவர அனுகூலமாக்கி விட்டது.
ஆகவே, விடுதலை தினசரி பத்திரிகையானது ஈரோட்டில் இருந்து வந்தாலும், எனது மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகிறது என்றாலும், அதன் கொள்கையானது ஆதரவாளிகளின் விருப்பத்திற்கு இணங்க அதாவது, விடுதலை சென்னையில் நடந்த பொழுது எந்தக் கொள்கை, என்ன நோக்கம் கொண்டு நடந்து வந்ததோ, அது போலவே நடத்தப்படும்.
என்னால் நடத்தப்படும் மற்றப் பத்திரிகைகளாகிய குடிஅரசு, பகுத்தறிவு ஆகிய இரண்டு பத்திரிகைகளும் முன் போலவே அவற்றின் கொள்கைகளை முன்னிலும் அதிகமாகக் கொண்டு வலியுறுத்தும் முறையில் நடைபெறும். ‘விடுதலை’யானது கொள்கை விஷயத்தில் அது இதுவரை கொண்டு வந்த தனது கருத்தை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ளாது என்பதோடு, மற்ற விஷயங்களில் பெரிதும் பொதுவர்த்தமானப் பத்திரிகை போலவே நடைபெறும்.
தமிழ் நாட்டில் வருணாசிரம தர்மத்துக்கும், முதலாளிகள் ஆட்சிக்கும் எதிராக பத்திரிகைகள் நடத்துவது என்பது மிகவும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையுமான காரியம் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே நான் இது வரை பத்திரிகை உலகிலும் பொதுவாழ்விலும் அநேக கஷ்ட நஷ்டங்களுடன் பல தொல்லைகளும் அனுபவித்து வந்திருக்கிறேன். எனது மற்றப் பத்திரிகைகள் எப்படி அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடைபெற்று வருகிறதோ, அதுபோலவேதான் “விடுதலை”யும் அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.நான் அரசாங்கத்துக்கு வேண்டியவன் என்றும், மந்திரிகளுக்கு வேண்டியவன் என்றும், எதிரிகள் விஷமப் பிரசாரம் செய்து வந்ததைப் பொதுஜனங்களில் சிலரும் நம்பி சர்க்காரின் சில குற்றமான காரியங்களுக்கும் மந்திரிகளின் சில கவலையீனமான, சுயநலமான காரியங்களுக்கும் நான் ஆதரவளித்து வருவதாகக் கருதி வருவதும் எனக்குத் தெரியும்.
ஆனால், நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும், ஜாமீன் கேட்டல், பறிமுதல் செய்தல், ராஜத்துரோகக் குற்றம் சாட்டித் தண்டித்தல் முதலிய சம்பவங்களைக் கூர்மையாய் கவனிப்பவர்களுக்கும் நான் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறவனா அல்லது அவர்கள் அதிருப்திக்கு ஆளாகி தொல்லைப்படுத்தப்படுகிறவனா? என்பது விளங்கும். மற்றொரு உதாரணமும் எடுத்துக்காட்டுகிறேன். அதாவது இந்த “விடுதலை”க்கே 1,000 ரூ. ஜாமீன் கேட்ட தானது ஸ்தல அதிகாரியிடமிருந்து ஏற்பட்ட எண்ணம் அல்லவென்றும், மந்திரிகள் ஆதிக்கத்திலிருந்து பிறந்தது என்றும் சொல்லத்தக்க ஆதாரம் பல இருக்கின்றன.
ஆனால், தமிழ்மக்களின் மனிதத்தன்மைக்கும், விடுதலைக்கும், சுதந்திர பிரதி நிதித்துவத்திற்கும் அனுகூலமான காரியங்கள் சர்க்காரும் மந்திரிகளும் செய்ததற்கு ஆகவோ, செய்து வருவதற்கு ஆகவோ, செய்வதாகக் கருதி இருப்பதற்கு ஆகவோ தமிழ் மக்களின் எதிரிகளாலும், எதிர் ஸ்தாபனங்களாலும், எதிரிகளின் ஆதரவில் வாழ்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களாலும் குறை கூறப்படும் காலங்களிலும், தடை செய்யப்படும் காலங்களிலும், விஷமப் பிரசாரம் செய்யப்படும் காலங்களிலும், அவற்றைப் பொறுத்தவரையில் மந்திரிகளையும், சர்க்காரையும் பிடிவாதமாய் கண் மூடித்தனமாய் ஆதரித்து வந்திருக்கிறேன், ஆதரித்தும் வருவேன் என்பதை எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஏனெனில், அதற்காகவே நான் வாழ்கிறேன். அதற்காகவே சுவாசிக்கிறேன், அதற்காகவே என்னுடைய சகலத்தையும் ஆள்படுத்தி இருக்கிறேன்.
தமிழ்மக்களின் மனிதத் தன்மையும், விடுதலையும், சுதந்திர பிரதிநிதித்துவமும் தான் தேசம்; அவைதான் பூரண சுதந்திரம்; அவைதான் உயிர்நாடி. இதற்கு மாறான எதுவும் துச்சமேயாகும் என்பது எனது கருத்து.
இதைத் தமிழ்மக்கள் உணர்வதில்லை என்பதும், உணர்ந்தாலும் அவர்களது வாழ்க்கை அமைப்பு இடம் தருவதில்லை என்பதும், இடம் தந்தாலும் அவர்களது சுயநலமும், அடிமைப் புத்தியும் காரியத்தில் நடந்து கொள்ள விடுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் முடிந்தவரை முடியட்டும் என்று கருதியே தமிழ் மக்கள் ஆதரவை எதிர்பார்த்து ‘விடுதலை’ ஊழியத்தில் இறங்கி இருக்கிறேன்.
உண்மையைச் சொல்லுகிறேன்
நான் இதுவரை ஒரு டொனேஷன் லிஸ்டையோ, உதவித்தொகை வசூல் பட்டியையோ கையில் தூக்கிக் கொண்டு எந்தக் காரியத்துக்கு ஆகவும் பொதுஜனங்களைத் தேடிப் புறப்பட்டது கிடையாது. என்னால் கூடிய அளவு இந்த 40, 50 வருஷகாலமாகவே சந்தா பட்டியல் கையொப்பமிட்டு என் சக்தி இஷ்ட அனுசாரம் கொடுத்து வந்ததையே-வருவதையே பழக்கமாகக் கொண்டவன். “விடுதலை”யின் காரணமாகவும், பல தோழர்களின் ஆலோசனை – வேண்டுகோள் காரணமாகவும் பல அபிமானிகள் முன் வசூல் புத்தகத்துடன் போகவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன். பலர் மகிழ்ச்சியை முகத்திலும், கையாலும் காட்டி வரவேற்றார்கள், பலர் அதுவல்லாததையும் செய்தார்கள். பலர் முன்னால் மகிழ்ச்சி காட்டி, கையையும் தாராளமாய் காட்டிப் பல தடவை ஞாபகப்படுத்தியும் கவலையில்லாமலும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஞாபகப்படுத்து வதினாலும் மற்றும் பலரிடம் சென்று பட்டியை நீட்டுவ தினாலும் உண்மையிலேயே நான் இதுவரை அடைந்திராத வெட்கக்கேட்டை அடைகிறேன் என்பதை உணருகிறேன். ஆனால் இது, இந்த சொந்த வெட்கக்கேடு தமிழ்நாட்டில் அதுவும் பெரும்செல்வம் படைத்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்கள், பண்டார சன்னதிகள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் ஏராளமாக உள்ள தமிழ் மக்களைக் கொண்ட தமிழ்நாட்டில் – தமிழ்மக்கள் தன்மானத்துக்கும், தமிழ் மக்கள் விடுதலைக்கும் மாறாக தமிழ் மக்களின் பிறவி எதிரிகளால் நடத்தப்படும் தொல்லை களையும், தடைமுறைகளையும் சமாளிக்கவோ, எடுத்துக் காட்டவோ, பாமர மக்கள் ஏமாந்து போகாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளவோ ஒரு தமிழ் தினசரி பத்திரிகை இல்லை என்னும் குறை தமிழ் நாட்டில் உள்ள எல்லாத் தமிழ் மக்களையும் சேரத்தக்க ஒரு பெரிய வெட்கக்கேடாயிருப்பதால், என் சொந்த வெட்கக்கேட்டைக் கவனியாமல் இப்பெரிய வெட்கக்கேட்டை நிவர்த்திக்க ஆதரவு தேட ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டத் துணிந்து விட்டேன்.
ஆதலால், வேறுவித அபிப்பிராய பேதம் எப்படி இருந்தாலும் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று கருதும் ஒவ்வொருவரும் என்னை உண்மை உழைப்பாளி என்று கருதினால் ஒவ்வொருவரும் தங்களாலான உதவியைச் செய்து விடுதலைக்கு ஆதரவும், உதவியும் அளிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். பணம் உள்ளவர்கள் பணம் கொடுக்கலாம்; விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்க வசதியுள்ளவர்கள் விளம்பரம் கொடுக்கலாம். சந்தாதாரரைச் சேர்த்து பணம் வசூலித்து அனுப்பக்கூடியவர்கள் சந்தா சேர்த்தனுப்பலாம். வாக்குச் சகாயம், எழுத்துச் சகாயம் செய்து பத்திரிகையின் தொண்டை பரவச்செய்ய வசதி உள்ளவர்கள் அத்தொண்டைப் பரப்பலாம்.
இவைகளிலும், இவைபோன்ற பிறவற்றிலும் ஒன்றும் செய்ய முடியாத உண்மைத் தமிழ் மக்கள் மனமொழி மெய்களால் இடையூறு செய்யாமல் இருக்கலாம். இதுவே “விடுதலை” மூலம் விடுதலைத் தொண்டு நடை பெறுவதற்கு அடியேனது விண்ணப்ப மாகும்.
குடிஅரசு – வேண்டுகோள் – 04.07.1937