* ஈரோடு தமிழன்பன்
தந்தை பெரியாரின்
இரு குழந்தைகள்
தோளில்
சந்தனம் தடவி
அகவை
தொண்ணூறு தொடரும்
ஆண்டு இது.
எழுத்துக் குழந்தை விடுதலையும்
இதயக்குழந்தை
கி.வீரமணியும் இப்போது அகவை
தொண்ணூறு கடக்கின்றனர்
பிள்ளைகள் பெறாத
பெரியாரின்
கருத்தை ஒட்டியும்
களமாடும் திறத்தை ஒட்டியும் பிறந்த
இரட்டைக் குழந்தைகள்
இவரும் இதுவும்.
விடுதலை உதடுகளும்
வீரமணி உதடுகளும் திறக்கும்போது
பிறப்பன யாவும்
பிரிக்கமுடியாத பகுத்தறிவு
முழக்க மே!
சனாதன எதிர்ப்புச் சங்கின் முழக்கமே!
தந்தைபெரியாரின்
ஓயா உழைப்பு உற்பத்தி ஆலையில்
தயாரிக்கப்பட்ட
தளவாடங்களே விடுதலையும்
ஆசிரியர் வீரமணியும்!
வெகுசனக் கதைகள் இல்லை
வெற்றளப்புக் கவிதைகள் இல்லை
பொழுதுபோக்குக்
குறுக்கெழுத்துப் போட்டிகள் இல்லை.
வாரப்பலன் நேரப்பலன்
ஆரூடத் தோரணங்கள் இல்லவே
இல்லை!
விடுதலை
செங்குட்டுவன்கை குருதி மணக்கும்
உறைவாள்
அதற்கேது விளையாட நேரம்!
பூங்கா விளையாட அழைத்தால்
புயல் காற்று
பந்துகொண்டு ஓடுமா என்ன?
மாற்றத்தை விரும்பாத
புலவர் கூட்டம்
தமிழ் எழுத்துகளைக்
கூட்டிக்
கொண்டுபோய்க்காட்டப்
பவணந்தி முனிவர்
கல்லறையைத்
தேடிக்கொண்டிருந்தனர்.
இலக்கணச் சுற்றுலாவாம்!
பள்ளிப்படிப்புக்கு
நான்காவது வகுப்போடு முற்றுப்
புள்ளிவைத்த பெரியார்தான்
தமிழன் நம்பிக்கொண்டிருந்த
தலையெழுத்தையும் மாற்றினார்
தமிழ் எழுத்தையும் திருத்தினார்.
தமிழக அரசும்
தந்தை பெரியார் தந்த
தமிழ் எழுத்துச்சீர்திருத்தங்களுக்கு
வாக்களித்து நிறைவேற்றியது.
வைதீகம் மறுத்த
வாழ்க்கை ஒப்பந்தம் நாட்டில்
செல்லுபடியாகுமெனச் சட்டம்
வந்தது.
விடுதலை மூச்சு
தமிழுக்கும் கிடைத்தது.
தமிழ்மக்களுக்கும் கிடைத்தது.
உலகின்மூத்த ஏடுகளின்
முகவரியாக இருந்துவந்த
ரீடர்ஸ் டைஜஸ்ட் 86 ஆண்டுகளுக்குப்பின் இவ்வாண்டு
ஏப்ரல்திங்களோடு நின்றுபோனது.
ஆனால்
தந்தை பெரியாரின் விடுதலை
90 ஆண்டுகள் கடந்து நடைபோடுகிறது
அதன் ஆசிரியராய், தமிழர்தலைவர்
அய்யா கி.வீரமணியும்
62 ஆண்டுகள் கடந்து
அரிமாப்பிடரி சிலிர்க்க நடைபோடுகிறார்.
வயதான வல்லூறு
விடுதலை
எந்த எதிர்ப்புக்கும் சிறகுமடக்கிக்
கூடு திரும்பாது
சிறகுகள்
சிறைபல கண்டவை! வென்றவை!
இரும்பில் வடித்த அலகுகள்
எதிரிகள் மார்பு
அகலம் துளைத்தவை! சாய்த்தவை!
கண்கள்
குருதியில் சிவந்தவை!குறிதப்பாதவை!
தமிழினப் பகைவர்
நடமாட்டத்தை வேவு பார்க்கும்
வேலை செய்பவை!
வாருங்கள்
விடுதலைக்குப் பத்துச் சந்தாக்கொடுபோம்
கூடவே
வாழ்த்துச்சொல்லி
ஒரு முத்தம்கொடுப்போம்.