நதிக்கரை நாகரிகம் தோன்றியதிலிருந்து கல்வியிலும், இலக்கியத்திலும், கலைகளிலும், நாகரிகத்திலும், செல்வத்திலும் செழித்தோங்கியிருந்த தென்னகத்தில் – பக்தி இலக்கியங்கள் தோன்றிய பிறகு அதாவது சைவ – வைணவ சமயங்களோடு வேதமரபும் தென்னகத்தில் ஊடுருவிய பிறகு தமிழில் கல்வியாளர்கள் தோன்றவில்லை.
கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்து 2ஆம் நூற்றாண்டு வரை 32 பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை தமிழில் பல்வேறு இலக்கியங்கள் எழுதப்பட்டன. அய்ம்பெருங்காப்பியங்களும், திருக்குறளும், பல கணித நூல்களும், வணிகம் மற்றும் கடற்தொழில், கப்பற்கட்டும் நுணுக்கம் தொடர்பான நூல்களும் அப்போது எழுதப்பட்டன. அதன் பிறகு என்ன ஆனது? 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 1800 வரை இந்தியா முழுவதும் கல்வி அறிவு வறண்டு போனது. காரணம் வேத மரபினர் தங்களின் சுக போக வாழ்விற்காக மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்காமல் செய்த சூழ்ச்சியே குலத்தொழில் என்ற நச்சு சிந்தனை ஆகும்.
தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்பதற்கு கீழடி முதல் ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் அனைத்து மண்பாண்டங்களிலுமே எழுத்துக்கள் உள்ளதே பெருமைக்குரிய கல்வி அறிவுள்ள ஒரு பண்பட்ட சமூகம் இங்கு வாழ்ந்தது என்பதாகும். அப்படி பண்பட்ட சமூகத்தை சீரழிக்கும் வகையில் ஊடுருவியதுதான் வேதமரபு. அதன் வர்ணாஸ்ரம மனுதர்ம ஆட்சிமுறை என்பதாகும்.
இங்கு “படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்” என்ற சொல் வழக்கு குலத்தொழிலை ஊக்குவிக்க பரப்பப்பட்டதே ஆகும்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
குலத்தொழில் என்று பேசுபவர்கள் வரலாறு கண்ட மனிதர்களை மீண்டும் இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு கொடூரமான சிந்தனை கொண்டவர்கள் ஆவர். அவர்களுக்கு சுய லாபமும், ஒரு சாரார் அடிமையாகவே இருக்கவேண்டும் என்ற அவாவுமே காரணமாகும்.
வரலாற்றை எடுத்துக்கொண்டால் இன்று உலகில் கிட்டத்தட்ட அனைவரும் செல்லத்துடிக்கும் கனவு நாடான அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் குறித்து படிக்கும் போது அவரது குடும்பம் கம்பளி வணிகத்தோடு தொடர்புடையது.
ஆனால், கொலம்பசும், அவரது சகோதர்களும் கடற்தொழில் பயில விருப்பப்பட்டு, கொலம்பஸ் தனது 12ஆவது வயதில் கப்பற் தொழில் கற்க எசுபெனோலா ஃபினான்சியர்சு என்பவரிடம் கப்பல் தொடர்பான கல்வியைக் கற்று தன்னுடைய 20 ஆவது வயதில் கியாஸ் கியோஜு என்ற தீவுக்கும் லிஸ்பனிற்கும் இடையே செல்லும் கப்பலில் தன்னுடைய பணியைத் துவக்கினார்.
கொலம்பஸ் உடன் பிறந்த சகோதரர்கள் கொலம்பசிற்கு கடற்பயணம் தொடர்பான வரைபடங்களை வரைந்துதர பேருதவியாக இருந்த காரணத்தால் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முடிந்தது..
கிழக்கு தேசத்தில் செப்டம்பர் 28 கி.மு.551ஆம் ஆண்டு பிறந்தவர் கன்பூசியஸ். அவரது தந்தை போர்வீரர். போர்க்கருவிகளைச் செய்யும் கொல்லரும் கூட. ஆனால் சிறுவயதிலேயே அவருக்குப் பிடித்தமான பணியை கற்றுக் கொள்ளவும், செய்யவும் அவரது தந்தை அனுமதித்தார். கன்பூசியசிற்கு பிடித்த பணி நூல்களைப் படிப்பதுதான்.
இதற்காகவே அவர் மேய்ச்சல் தொழிலை செய்வதாக தந்தையிடம் கூறிவிட்டுச்சென்றார். மேய்ச்சல் தொழிலின் போது கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை பல்வேறு நூல்களைப் படித்துக் கழித்தார். தன்னுடைய 17 வயதில் சிறந்த தத்துவங்களை ஒன்று சேர்த்து அதை எளிமையாக்கி மக்களுக்குச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொண்டர்.
கொலம்பஸ் காலத்திய இசுப்பானிய அரசனும், கன்பூசியஸ் காலத்திய சவுவமிச மன்னரும் அவரவர் குலத்தொழிலைப் பார்க்கவேண்டும் என்று கட்டளையிட்டாலோ அல்லது விசுவகர்மா போன்ற ஏதாவது பிற்போக்குத் திட்டம் கொண்டுவந்தாலோ இன்று உலகம் கொலம்பசையும் கண்டிருக்காது, பவுத்தம் போன்ற உன்னதமான தத்துவத்தைக் கொண்ட கன்பூசியசமும் கிடைத்திருக்காது.
“விஸ்வகர்மா”வும் – மோடியின் “கர்மயோகி”யும்
‘விஸ்வகர்மா’ திட்டத்தை போகிற போக்கில் வாக்கு வங்கிக்கான திட்டம் என்று கூறுவதை விட மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி அறிவு கிடைக்காமல் செய்யவேண்டும் என்ற நச்சு சிந்தனையில் கொண்டு வந்தது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.
“குஜராத் மாநில அமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி தாம் எழுதிய ‘கர்மயோகி’ என்னும் நூலில் குறிப்பிட்டு இருந்தது என்ன?
சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்கள் செய்யும் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம் என்று எழுதவில்லையா?
இதன் பொருள் என்ன? மலம் அள்ளுவது – மனித உரிமைக்கு எதிரானது; இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும் ஒரு கால கட்டத்தில், இப்படி ஒரு கருத்தினை ஒரு மாநில முதல் அமைச்சர் ஒரு நூல் மூலம் பதிவு செய்கிறார் என்றால் ஹிந்து மனப்பான்மை என்ற ஒன்று – பெரிய நிலையில் உள்ளவர்களின் குருதி ஓட்டத்தில்கூட அழுத்தமாகப் பிடிமானம் கொண்டு இருப்பதாலும், ஹிந்து மதத்தின் வருணதர்மத்தில் ஜாதிக் கண்ணோட்டத்தில் தீண்டாமை என்பது தவிர்க்கப்பட முடியாத அம்சமாக இருக்கிற காரணத்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டங்களைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் தன்மையராய் இருப்பதை அறிய முடிகிறது.”
‘விடுதலை’ – மின்சாரம் – 23.05.2011
(குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தான் எழுதிய “கர்மயோகி” என்ற நூலில் மலம் அள்ளுபவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை கடவுளுக்குச் செய்யும் கடமையாக நினைத்துச்செய்யவேண்டும் என்று எழுதியுள்ளது குறித்து விடுதலையில் வெளிவந்தது.)