சுயமரியாதை திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு , பகுத்தறிவாளர்களுக்கு தேன் போன்ற செய்தியாகும். மண்டைச்சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும் அவர்தான் பெரியார் என்றார் தொலை நோக்காளர் பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர்.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் ஒவ்வொன்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை, அய்யா பெரியார் அவர்களின் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மானிட சமுதாயம் நல்வழியில் செல்வதற்குத் தான், விஞ்ஞானம்,அறிவியல், சமுதாயம் ஆகியவற்றிற்கு ஏற்ற கருத்துகளாகும் என்பதில் அய்யமில்லை.
நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அனை வரின் சட்டைப் பையிலும் கம்பியில்லா இயந்திரம் இருக்கும் என்றார் தந்தை பெரியார். அந்த சொல் வெற்றியாக அனைவரின் சட்டைப்பையிலும் இன்று கைபேசி உள்ளது.
பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமல்ல என்று அன்றே குடும்ப கட்டுப்பாடு முறையை ஆணித் தரமாக எடுத்துரைத்தார். அதன் விளை வாக பெண்கள் விழிப்புணர்வு அடைந்தனர்.
பெண்கள் கையில் கரண்டியை பிடுங்கி புத்தகத்தை கொடுங்கள் என்றார், அதன் விளைவு பூமி முதல் நிலவு வரை இன்று பெண்கள் சாதித்து வருகிறார்கள்.
கோவில் கருவறைக்குள் அனைத்து ஜாதி யினரும் நுழைய வேண்டும்,சூத்திரரும் அர்ச்சகராக வர வேண்டும் என்றார் அதுவும் வென்றது.
அய்யா பெரியார் அவர்களின் கருத்துகள் எவர் மீதும் திணிக்கப்படாதவை, மாறாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடியவையாகும்.
அந்த வகையில் தான் தற்போது, சுயமரி யாதைத் திருமணங்களை வழக்குரைஞர்கள் நடத்தி வைக்க லாம், என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த் குமார் ஆகிய இருவரும் போற்றுதலுக் குரியவர்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் பெரியார் தொண் டர்கள் அவர்களை பாராட்டி மகிழ்கிறது.
கருத்துகளை சொல்வதற்கு எனக்கு உரிமை இருக் கிறது. அதை ஏற்றுக்கொள்ளுவது உங்கள் உரிமை என்று மானிட இனத்தைச் சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார்.
அவரின் கருத்துகள் தோல்வியை தழு வாதவை யாகும். எனது கருத்துகள் ஒவ்வொன் றும் தாமதமாக செயல்வடிவம் பெறும் என உறுதியோடு நம்பிக்கை யோடு விடையாகவும் பதில் தந்தவர் தான் அய்யா பெரியார்.
பெரியார் அவர்களின் கருத்துகள் பட்டை தீட்டிய வைரங்களாகும் அவரின் கருத்துகளுக்கு தோல்வியே கிடையாது. அதனால் தான் அவர் பெரியார்.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே என்ற வர்ணாசிரம கொள்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ஆச்சாரியாரை விரட்டி அடித்து, பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை கொண்டு நாடெங்கும் கல்விச் சாலைகள் திறக்க காரணமானவர் பெரியார்.
இப்படி வெற்றி ஒன்றே பெரியாருக்கும், அவரது கொள்கைகளுக்கும் நிரந்தரமானவை.
ஒன்றிய அரசை ஆளும் மதவெறி பாஜக,
உ. பி. மாநிலத்தில் சாமியாரின் ஆட்சி, மணிப்பூர் மாநிலத்தின் பெண்கள் அவலநிலை நிகழ்வு உருவாக, வடமாநிலங்களில் மக்களிடையே விழிப் புணர்வு போதிய அளவிற்கு இல்லாதது பெரியார் ஒருவர் போல் இல்லாததால் தான் இந்த அவலநிலை.
மூடநம்பிக்கை நமது நாட்டிற்கு மட்டும் சொந்தமில்லை அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்றார் பெரியார். அந்த வகையில் இன்று இந்தி யாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பெரியாரின் கைத்தடி தேவைப்படுகிறது. அவரின் கருத்துகள் தேவைப்படுகிறது.
பெரியாரின் கருத்துகள் என்றும் வெற்றியை தருபவை.
அதனால் பெரியார் அவர்களையும், அவரின் கருத்துகளையும் கண்டு ஆதிக்க வெறிக் கூட்டம் இன்றும் அச்சப்படுகிறது.
பெரியார் வாழ்கிறார்
பெரியார் ஆள்கிறார்
பெரியார் வெல்கிறார்.
யார் காரணம், பெரியார் காரணம் என உரக்கச் சொல்வோம்.அவர் தாம் பெரியார் என்று ஆசிரியர் அவர்களோடு கரம் கோர்த்து பெரியார் கொள் கைகளை சிகரத்தில் வைப்போம் எப்பொழுதும்.
– மு. சு. அன்புமணி
மதிச்சியம்