கடந்த 27.05.2024 அன்று, தமிழ்நாட்டின் இன்றைய ஆளுநர் ரவி “அறிவார்ந்த” கருத்துக்கள் பலவற்றை உதிர்த்துள்ளார், அவற்றுள் ஒன்று, “பிரிட்டன் ஆட்சியால் போற்றப்பட்ட கல்விக் கொள்கை புதுமை மற்றும் ஆராய்ச்சி உணர்வினை அழித்து விட்டது’ என்பதாகும். தமிழ்நாட்டிலுள்ள முன்னணி இதழ்கள் எதுவும் இக்கருத்துக்கு முதன்மை வழங்காமல் நான்காம் பக்கத்தில் வெளி யிட்டுள்ளமையால் அக்கருத்தினைத் தமிழ்நாடு புறக்கணிக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
2020 ஆம் ஆண்டு கல்விக்கொள்கையினைத் தூக்கிப் பிடித்து, முந்தையக் கல்விக் கொள்கைகளை எல்லாம் அவர் குறைகூறியிருப்பது அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. முதற்கண், பிரிட்டன் ஆட்சிக் காலக் கல்விக் கொள்கையினை நோக்கலாம். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் தொடக்கக் கல்வியில் வட்டார மொழியே பயிற்று மொழியாகக் கொள்ளப்பட்டது. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.
ஆங்கில மொழியை இந்தியக் கல்விக் கூடங்களில் கற்பிக்கவேண்டும் என்று முதன்முதலில் கருத்துரைத்தவர் மெக்காலே. சமஸ்கிருத வெறியர்கள் சமஸ்கிருத இலக்கியங்கள் உயர்வுடையனவென்று உளறிய போது “சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியம் பஞ்சாங்கந்தான் (Almanac) என்றார். அவர்களிடம் காணப்படும் அறிவியல் தருப்பைப்புல் பற்றியதாக இருக்கும் என்றார். இன்றும் தருப்பை புல்லையும் பஞ்சாங்கத்தையும் வைத்துக்கொண்டு மக்கள் மதியை மழுங்கடிக்கும் கூட்டம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தக் கூட்டத்தின் மேலாண்மையினை நிலை நிறுத்த முயல்வதே 2020ஆம் ஆண்டு கல்விக் கொள்கை என்பதை அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்; எதிர்த்தும் வருகின்றனர். ஆளுநர் இருக்கையில் இருந்து இந்தக் கல்விக் கொள்கைதான் சிறந்தது என்று கூறுவதால் அதனைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்: ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரிட்டன் ஆட்சியில் பெற்ற ஆங்கிலக் கல்வியால்தான் இந்நாட்டு மக்கள் தங்களை யார் என உணரத் தலைப்பட்டனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சமுதாயத்தில் அழுத்தப்பட்டிருந்த நிலையை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் உணர்த்த மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். இந்த வரலாற்றினை அறியாத ஆளுநர் ரவி பிரிட்டன் ஆட்சிக் காலக் கல்வியையும் பின்னர் வகுக்கப்பட்ட கல்விக் கொள்கைகளையும் குறைகாண முற்பட்டுள்ளார்.
பி.இரத்தினசபாபதி
மேளாள் கல்வியியல் பேராசிரியர், சென்னை