நம்மில் மிகப் பெரும்பாலோர் அன்றாட வாழ்வில் நிம்மதி இல்லாமல், மனக்குறையுடன் தான் நாம் நமது வாழ்க்கையில் நாளும் உழன்று கொண்டுள்ளோம். அதன் முக்கிய அடிப்படைக் காரணத்தை நாமே நமக்குள் ஆராய்ந்து தீர்வு காணவும் – பகுத்தறிவு என்ற மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஓர் அரிய வாய்ப்பு மனிதர்களாகிய நமக்கு இருப்பதையும், அதனை உய்த்து, பகுத்தறிந்து செலவு ஏதுமின்றி வெகு எளிய முறையில் தீர்வு காணவும் நாம் முன் வருவதில்லை!
வாழ்வில் மற்றவர்களைப் பார்த்தும் அல்லது நமது பேராசைக் கற்பனைகளையே ஏதோ வாழ்வின் இலக்குகளாக செயற்கையாக அமைத்துக் கொண்டும், அல்லற்பட்டு ஆற்றாது அலைந்த வண்ணம் உள்ளோம்!
நமது அன்றாட வாழ்வு; தேவைகள் பூர்த்தியானால் அதுவே நிம்மதி, வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழுகின்ற நம் நாட்டு கோடானு கோடி உழைப்பவர்கள் அப்படி ஒரு வேதனையை துன்பத்தை அனுபவித்தால் – அது களையப்பட்டு “அனைவர்க்கும் அனைத்தும்” கிடைக்கும் ஒரு சுயமரியாதைச் சமூகம் வந்தால், சமத்துவம் தானே மலர்ந்து அவர் மனங்களை குளிர வைக்கும்.
ஆனால் ஓரளவு வருமானம் ஈட்டி நம் தேவைக்கு பிறரை எதிர்பார்க்காது வாழும் நிலையில் உள்ளோரும்கூட, வறியவர்களைவிட மிகத் துன்பவாதிகளாக மாறி – மன இறுக்கத்திலோ, சங்கடமான சலிப்பிலோ தங்களை மூழ்கடித்துக் கொள்ளுவதிலிருந்து ஏனோ மீள முடிவதில்லை!
தங்களது தேவைக்கு ஓர் எல்லைக் கோடு கட்டிக் கொள்ளாதவர்களது வாழ்க்கையென்பது எப்போதும் – அவர்களுக்கு எவ்வளவு பொருளும், புகழும், பதவிப் பெருமைகளும் வந்தாலும் எல்லையின்றி தொல்லையில் சிக்கியே வருவது தவிர்க்க முடியாது!
ஈட்டுவது வேறு
குவிப்பது வேறு
பல கோடி ஈசுவரர்களுக்கு (கடவுளுக்குப் பக்கத்திலேயே ‘சீட்’ ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விட்டால் நம் நாட்டில் உறுதி!) அதனால் கோடீஸ்வரர்கள் எளிதில் உற்பத்தி – குறுக்கு வழியில் சறுக்கிய வாழ்வு நெறியிலும் அடைந்து விட்டும், அமைதியின்றி அச்சத்தோடு வாழ்கின்ற அவலம் தொடர் கதையாகிறது!
ஈவதின் (ஈவது என்பது நல்ல பணிக்கு நன்கொடை தருவது) நற்பணி – தொண்டறத்திற்கு பெருமையைவிட உண்மையாக அடையும் மகிழ்ச்சிதான் நிரந்தர மகிழ்ச்சியாகும்!
சிங்கப்பூரில், சில வாரங்களில் புதிய புதிய புத்தகங்களை வாங்கிப் படித்து, பயன் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதில் ஒன்று
ALL
YOU
NEED
IS LESS
என்ற அருமையான தலைப்பில் Vicki Vrint எழுதிய புத்தகம்
உங்களது தேவை என்ன தெரியுமா?
குறைந்த மன அழுத்தம்,
குறைந்த நேரம் திரைக்காட்சிகளில் செலவு
குறைந்த அளவே குப்பைகள்
குறைந்த அளவே பொருள்களை வாங்குதல்
இப்படி அன்றாட வாழ்வின் தேவைகளை மிகவும் குறைத்து கணக்கு வைத்துக் கொண்டவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியோ ஏராளம் – ஏராளம்?
குப்பைகளை சேர விடக் கூடாது என்பதால் வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடங்கள், பூங்காக்களிலும் தூய்மையை வற்புறுத்தி நாளும் அதனைக் கடைப்பிடித்து மகிழ்ச்சி அடைகிறோம். நகரங்களிலும் குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டு மகிழ்ச்சிதான்!
ஆனால் நம் மூளையில் சேரும் தொடர் குப்பைகளை அகற்றிட நம்மில் எந்த அளவு முயற்சித்துள்ளோம் என்ற கேள்விக்கு என்ன பதில்?
(தொடரும்)