வீட்டில், வீதியில் ஏதேனும் வாய்த் தகராறில், ஓர் ஆணை அவமானப்படுத்த நினைப்பவர்கள், ‘போய்ப் புடவை கட்டிக்கோ’ என்று சீண்டுவதைப் பார்க்கிறோம். ஆணைக் கேவலப்படுத்த நினைத்தால், கோழையாகச் சித்தரிக்க நினைத்தால், உடனே பெண்ணுக்கான அடையாளங்களைச் சேர்க்கிறார்கள். ஆக, `பெண்கள் கீழானவர்கள், அடங்கிக் கிடக்க வேண்டியவர்கள்’ என்கிற இவர்களின் எண்ணம் எத்தகைய கொடூர மானது? இதையே நம் பிரதமரும் மேடை போட்டு முழங்கிச் சொல்லும்போது, கோபம் அதிகமாகிறது.
நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், `இந்தியாவின் வளர்ச்சியால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், தாங்களாகவே இந்தியாவுடன் தங்களை இணைக்கக் கோருவார்கள்’ என்று தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். உடனே, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ‘பாகிஸ்தான் வளையல் அணிந்திருக்கவில்லை. அவர்கள் கையில் அணுகுண்டுகள் உள்ளன’ என்றார். அதாவது, பாகிஸ்தான் `கோழைப் பெண்’ இல்லையாம், பராக்கிரம ஆணாம்.
இதற்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு பிரதமர் மோடி ஆற்றியிருக்கும் ஆவேச சொற் பொழிவானது ஆணாதிக்கத்தின், பெண் அடக்கு முறையின் அப்பட்டமான வெளிப்பாடே. `பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்றால், நாங்கள் அணிய வைப்போம்’ என்று கொக்கரித்திருக்கிறார் மோடி. இவருடைய வார்த்தைகளின் அருவருக்கத்தக்க உட்பொருள் `ஏ.. பாகிஸ்தானே, அடங்கிப்போகும் பெண்ணைப் போல வளையல் மாட்டிக்கொள். இல்லையென்றால், வீர ஆணான நாங்கள், உன்னை அடக்கி வளையல் மாட்டிவிடுவோம்.’
நம் பிரதமர் ஒரு பக்கம், பெண்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கிறார், பெண்களைப் புகழ் கிறார், போற்றுகிறார். இன்னொரு பக்கம், `பெண்கள் கீழானவர்கள்தான்’ என்று உலகறியப் பேசி, தானும் ஓர் ஆணாதிக்கவாதியே என்று வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
இது, பிரதமரின் தனிப்பட்ட எண்ணம் மட்டுமல்ல பாரம்பரிய இந்தியச் சிந்தனையின் அப்பட்டமான பிரதிபலிப்பே. பிரதமர் என்கிற மிகப்பெரும் பொறுப் பில் இருப்பவர், இத்தகைய சிந்தனைகளிலிருந்து மீட்டு, நாட்டை முன்நகர்த்திச் செல்ல வேண்டுமே ஒழிய, ‘பெண்ணடிமைத்தனம்’ நோக்கி திரும்பி நடைபோடக் கூடாது.
அய்க்கிய நாடுகள் அமைப்பானது, ‘உலகில், ஆண் களுக்குச் சமமாக பெண்கள் நடைபோடும் பாலின சமத்துவ நிலையை எட்ட, இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்’ என்று தெரிவித்திருந்தது. ஆனால், ‘ஒரு நாட்டின் பிரதமரே இப்படியெல்லாம் பேசிக்கொண் டிருந்தால், இன்னும் 3000 ஆண்டுகளானாலும் மாறாதோ’ என்று கவலை சூழவே செய்கிறது.
ஆனால், தோழிகளே நாம் ஒருபோதும் சோர்ந்து விடக்கூடாது, எதிர்வினையாற்றத் தவறி விடக்கூடாது. வீடு தொடங்கி நாடு வரை ஆண்களை இழிவுப் படுத்துவதாக எண்ணி ‘பொம்பள மாதிரி’ என்ற வார்த்தைகளைப் பேசுபவர்களிடம் எல்லாம், சளைக் காமல் எதிர்வினையாற்றிக் கொண்டே இருப்போம். ஆண்களை, ஆண் பிள்ளைகளைத் திருத்துவோம் – நாட்டின் பிரதமராகவே இருந்தாலும்!
நன்றி: ‘அவள் விகடன்’ தலையங்கம் (4.6.2024)