சிதம்பரத்தில் 22.5.1954ஆம் தேதி நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட கழக நான்காவது மாநாட்டில், திராவிட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய பேருரை வருமாறு:
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த சிதம்பரத்தில் நடைபெறும் தென்னார்க்காடு ஜில்லா மாநாட்டில் தலைமை வகிக்கும்படியான வாய்ப்பு அளித்தமைக்கு இந்த மாநாட்டு வரவேற்புக் குழுவினருக்கு நன்றி செலுத்திக் கொள்ளுகிறேன்.
இந்த மாநாடு நல்ல குறிப்பிடத்தகுந்த நேரத்தில், மக்கள் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும்போது நடை பெறுகிறது. முதலாவது இந்த மாநாடு அய்ந்து வருடத்திற்கு அசைக்க முடியாதபடி இருந்த ஆச்சாரியாரின் ஆட்சி ஒழிந்த சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒரு தமிழரது மந்திரிசபை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது.
பார்ப்பனரே இல்லாத மந்திரிசபை
கடந்த 34 வருடத்தில் இல்லாதமாதிரி இப்போதுதான் மந்திரிசபை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முந்தி இருந்த மந்திரி களெல்லாம் பார்ப்பனர்களாக, ஆந்திரக்காரர்களாகாகத்தான் இருந்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு பச்சைத் தமிழனுடைய மந்திரிசபை ஏற்பட்டிருப்பது நமக்கு ஒரு பெருமை! என்னைக்கூட கேட்டார்கள், நீ ஒரு கன்னடியன், எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம் என்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்; தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன். இதற்கு காரணம் ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான். இன்னொரு அதிசயம் இது பார்ப்பானே இல்லாத மந்திரிசபை. 1937-இல் ஆச்சாரியாருடைய மந்திரிசபையில் பாதிப் பேர் பார்ப்பனர் களாகவே இருந்தார்கள். அதற்குப்பிறகு ஏற்பட்ட மந்திரி சபைகளிலேயும் 2, 3 பார்ப்பனர்கள் இருந்தார்கள். இப்பொழுது தான் முதல்முதலாக பார்ப்பனர்களே இல்லாத மந்திரி சபை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு அதிசயம், எந்த ஆச்சாரியாருக்கு தாங்கள் நல்ல அடிமைகள் என்பதாகக் காட்டிக் கொண்டிருந்தார் களோ? அதே ஆட்களை காமராஜர் தன்னுடைய அடிமையாக ஆக்கிக்கொண்டார். ஆச்சாரியாருடைய ஆட்களைக் கொண்டே அவரது கண்ணைக் குத்த ஏற்பாடு செய்துவிட்டார். இந்தக் கல்வித் திட்டத்தை யார் கொண்டு வந்தார்களோ அவரது வாயாலேயே சொல்லி எடுக்க வைத்தார்.
மாபெரும் வெற்றி நமக்கு
இது நமக்குப் பெரிய வெற்றி; இந்த மகிழ்ச்சியினால் நாம் இந்த மந்திரிசபையை காப்பாற்றுவோம் என்று கருதுகின்றேன். இதைப் பார்த்து சிலர் எனக்கு கொள்கையே இல்லை என்று சொல்லுகிறார்கள். இதைப் பத்திரிகைகளிலும் மொச்சைக் கொட்டை எழுத்தில் போடுகிறார்கள்! இப்போது ஒரு பத்திரிகை நம்மை அடிக்கடி கேலி செய்து மக்களை வேறு கருத்தில் திருப்புவதில் ஈடுபட்டுள்ளது. எந்த செய்தியிலேயும் நமக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது ஆளையும் இழுத்துப்போட்டு வேண்டுமென்றே தப்புப் பிரசாரம் செய்கிறது.
இந்த மந்திரிசபையைப் பற்றி பெரியகுளம் மாநாட்டில் அறிக்கை விட இருந்தேன். அன்று வந்த செய்தியில் பல மந்திரிகள் பழைய மந்திரிகளாகவும், ஆச்சாரியார் மந்திரிசபை யில் இருந்தவர்களே இருப்பதையும் கண்டு நிறுத்திக் கொண்டேன். ஏன் என்றால் இந்த காமராஜர் தான் வெளியில் சொன்னதையெல்லாம் செய்ய முடியுமோ என்று கருதியே யாகும்! அதனால்தான் இந்த மந்திரி சபையைப் பற்றி குறிப்பிடும் பொழுது இது “புதிய மொந்தையில் பழைய கள்” என்று சொன்னேன். ஆனால் காமராஜர் நல்லமுறையில் அவர்களை சமாளிப்பேன் என்கிற மாதிரி கல்வித்திட்டத்தை எடுத்துள்ளார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அவசியம் தேவை
எங்களுக்கு இரண்டொரு காரியம் செய்தாலே போதும்; அது என்ன என்றால் கல்வித்திட்டம் கேடு பயப்பது என்று பலரும் பல விதத்தில் ஒப்புக்கொண்ட காரியத்தை உடனே கவனிக்க வேண்டும் என்பது; இரண்டாவது காரியம் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்துவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை – சட்டப்படி இருந்ததை அல்லாடி கெடுத்துவிட்டார். அதைப்பற்றி நாங்கள் பெரிய கிளர்ச்சி செய்தோம். அதைக்கண்டு அப்போதிருந்த மந்திரிகள் நடுங்கி, அதற்காக அரசியல் சட்டத்தையே திருத்தும்படி ஆகிவிட்டது.
அதன்படி ஏதோ ஒரு அளவுக்கு நம்முடைய மக்களுக்கு விகிதாச் சாரம் கிடைக்கும் வசதி ஓரளவு இருந்தது. அதை மீண்டும் இராசகோ பாலாச்சாரியார் நன்கு கெடுத்துவிட்டார். அதை மீண்டும் மாற்றவேண்டுமென்று சொன்னேன். அதற்கு அவரிடமிருந்து வந்தவர் தனக்கும் அதில் அக்கறை இருப்பதாகவும் தனக்காகவே அதைக் கவனிப்பதாகவும் சொன்னார்கள். அதனால் இதை ஆதரிக்க வேண்டும்.
கொள்கையே பெரிது
இப்பொழுது இதை ஆதரிக்க இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. இது தமிழன் மந்திரிசபை; பார்ப்பானே இல்லாத மந்திரிசபை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அதை ஒரு கட்சி அல்ல என்று வெகுநாளாகவே சொல்லுகிறேன். அந்தக் கொள்கையை யார் ஆதரித்தாலும் அவர்களை நம்முடைய ஆட்களாகவே கருத வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன். காங்கிரசிலிருந்தபோதே நான் இதை ஜில்லா போர்டு, சட்டசபை முதலியவற்றுக்கு நிற்கக்கூடாது என்று சொன்னேன். ஆனால், சத்தியமூர்த்தி அய்யரும் சீனிவாச அய்யங்காரும் இது நல்ல சந்தர்ப்பம் என்று அதைப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் நிற்க ஆரம்பித் தார்கள். நான் அப்போது கோயம்புத்தூரில் பேசுகையில் காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதே என்று சொன்னேன். அதற்கு என் பேரில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மற்றபடி இன்றுகூட பலர் வ.வே.சு. அய்யரைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் பெரிய தேசபக்தர் என்பார்கள். ஆனால் அவரைப்போல பெரிய வகுப்புவெறி பிடித்தவன் எவனுமே இல்லை. காங் கிரசிலே இருந்துகொண்டே நான் அவரது வகுப்பு வெறியை எதிர்த்தேன். மற்றும் இந்தப் பாரதியைப் பற்றி அளப்பார். கள்; இந்த ஆளும் பெரிய வகுப்புவெறி பிடித்தவன். எதை எடுத்தாலும் ஆரியர் என்று பாடி இருக்கிறார்.
வகுப்புரிமைக்காகப் போர்
இவர்களை எல்லாம் காங்கிரசில் இருந்துகொண்டே எதிர்த்தேன். பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காகப் பாடுபட்டேன். அதில் ஓட்டு எடுத்திருந்தால் 100-க்கு 75 பேர் என் பக்கம் இருந்திருப் பார்கள். அதை திரு.வி.க.விடம் சொல்லி ஏமாற்றி விட்டார்கள். அந்த தீர்மானத்தை திரு. எஸ். இராமநாதன் தான் கொண்டுவந்தார். நான் அதை ஆதரித்தேன். அதை நிர்வாகக் கமிட்டியில் விடாவிட்டால் பொதுமக்கள் கூட்டத்திலாவது விடுங்கள் என்றேன். சரி என்றார்கள். அப்படி அனுமதிப்பதற்கு 30 பேரினுடைய கையெழுத்து தேவை என்றார்கள். உடனே இராமநாதன் 50 பேர்களுடைய கையெழுத்தை வாங்கி வந்து விட்டார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று விழித்தார்கள். திரு.வி.க.வுக்கு என் முன்னால் அந்தத் தீர்மானத்தை நிராகரிக்க முடியவில்லை; நான் தண்ணீர் குடிக்கப் போனபோது இந்த திரு.வி.க. அதை நிராகரிப்பதாகச் சொல்லிவிட்டார். நான் வந்ததும் மக்கள் சிரித்தார்கள். ஏன் என்று கேட்டேன். இப்படி நீ கொண்டு வந்த தீர்மானத்தை நீ இல்லாதபோது நிராகரித்து விட்டார்கள் என்று சொன்னார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். பிறகு அங்கிருந்து வெளியேறினேன். அதேமாதிரி காங்கிரசிலிருந்த போது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார்கள். யாரையும் கலந்து கொள்ளாமலும் கேட்காமலும் திடீரென்று இதை காங்கிரஸ் பார்ப்பனர்களான சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார் முதலியவர்கள் எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நான் பதறி இந்தப் பார்ப்பனர்களின் செயலை எதிர்க்கவேண்டுமென்று தீர்மானித்தேன். உடனே நானும் வரதராஜுலுவும், திரு.வி.க.வும், இராமனாதனும் சேர்ந்து யோசித்து ஓர் அறிக்கை எழுதினோம். அப்பொழுது இதை வெளியிட எங்களுக்கு சாதகமாக எந்தப் பத்திரிகையும் கிடையாது. ஆகவே அப்போது இருந்த “நவசக்தி” என்கிற பத்திரிகையில் மட்டும்தான் அதை வெளியிட்டோம். இதைக்கண்டதும் இராஜ கோபாலாச்சாரியார் ஓடிவந்து இந்த மாதிரி அறிக்கை விடுவது கூடாதென்றார். அதற்கு நான் சத்தியமூர்த்தியும் சீனிவாசய்யங்காரும் செய்தது சரியா? என்று கேட்டேன். பிறகு இருவருக்கும் அமைதி ஏற்படுகிற தன்மையில் அவர் சமாதானம் செய்து ஒரு அறிக்கை விட்டார். அதன் பிறகுதான் அந்தப் போராட்டம் நின்றது.
மற்றபடி சமீபத்தில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஓமந்தூரார் கொண்டு வந்தபோது அதை ஆதரித்தோம். காங்கிரஸ்காரர்கள் போட்ட கூட்டத்தில் நாங்கள் பேசினோம். எங்களுடைய கூட்டத்தில் அவர்கள் பேசினார்கள். உடனே அந்த இராமசாமி கருப்புச் சட்டை போடாத இராமசாமி என்று சொல்லி ஒழித்துக் கட்டினார்கள்.
அனுகூலமானவற்றை ஆதரிப்பதே நல்லது
இந்தியா மந்திரி பட்டேல் சென்னைக்கு வந்தார். அப்போது எல்லா இந்தியா மந்திரிகளுக்கும் கருப்புக்கொடி பிடித்துக் கொண்டிருந்த நேரம். நான் அப்போது பட்டேலுக்கு கருப்புக்கொடி பிடிக்காதே என்றேன். அப்போது சிலர்கூட நான் ஏதோ பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்வதாகச் சொன்னார்கள். நான் ஏன் இப்படிச் செய்தேன் என்றால், பட்டேல் தென்னாட்டில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் நியாயமானது என்கிற கருத்தை கொண்டிருப்பவர். இது அவர் ஓமந்தூராரிடம் சொன்ன செய்தியாகும். அதை ஓமந்தூரார் ஒரு ஆளிடம் சொல்ல அவர் என்னிடம் சொன்னார். இப்படி நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய சமுதாயத்திற்கு அனுகூலமானதை எல்லாம் ஆதரிப்பதில் என்ன தப்பு?
காமராஜரை என்ன கடைசிவரைக்குமா ஆதரிக்கப் போகிறேன்? அது என்னவாக முடியும்? ஆச்சாரியாரை ஆதரித்த நானே ஆச்சாரியார் ஒழியவேண்டும் என்பதோடு ஆச்சாரியார் ஜாதியே ஒழிய வேண்டும் என்றல்லவா சொல்லிவிட்டேன்.
நம்மைப் பொறுத்தவரையில் லட்சியம்தான் முக்கியம். யாருடைய போக்கும் எங்களுக்கு நன்கு தெரியும். எந்த எந்தக் காரியத்தில் காமராஜருக்கு உற்சாகம் கொடுக்க வேண்டுமோ அதிலெல்லாம் அவருக்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்கிறேன்.
பரீட்சைகளின் யோக்கியதை
இந்த நாட்டில் லி.கி.ஷி. பரீட்சை நடக்கிறது. அதில் ஒரு மாணவனை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டனராம். இந்த மாணவன் தனக்கு தெரியாது என்றானாம். உடனே நீ ஃபெயில் என்று சொன் னார்களாம். அப்படி இருக்கிறது இங்கே மி.கி.ஷி. பரீட்சையின் யோக்கியதை. அப்படிப்பட்ட கல்வி காரியத்தில் இனியாவது நியாயம் வழங்கவேண்டும். இந்த மந்திரிசபை அப்படி ஒன்றும் சுதந்திரமான மந்திரிசபை இல்லை. இருந்தாலும் இவரை வைத்துக்கொண்டு நன்மை செய்யும்வரையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பார்ப்பனரின் இனப்பற்று
பார்ப்பனர்களுக்குள் கொள்கையே கிடையாது! அவர் களுக்கு ஏதாவது இருக்கிறதென்றால் தங்களுக்கு என்ன செய்தால் நல்லது என்பதில்தானே கவலை. அதில்தானே அவனுக்கு அக்கறை சர். சி.பி. இராமசாமி அய்யர், ஆச்சாரி யாரைப் பற்றி அவர் ஒரு திருடர் என்று சொல்பவர். இரண்டு பேருக்கும் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு நன்கு தெரியும். இருவருமே ஒருவர் யோக்கியதையை மற்றொருவர் வெளியில் சொல்வது என்று வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் இரண்டு பேருக்குமே பொதுவாழ்வில் இடமிருக்காது. ஆனால் பொதுமேடையில் பாருங்கள்! இவர் படத்தை அவர் திறக்கிறார். அவர் படத்தை இவர் திறக்கிறார். உலகத்திலேயே இவரைவிட பெரியவர் யாருமில்லை என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்கிறார்கள். இந்தத் தன்மை நமக்கிருந்தால் என்ன கெடுதல்? நம்முடைய நிலைமையைப் பாதுகாத்துக் கொள்வ தற்குத் திட்டம் வகுத்துக்கொள்கின்றோம். எந்த கட்சிக்காரனும் எதைச் சொன்னாலும் அவர்களிடத்தில் நாங்கள் கட்சியில்லையப்பா, “தேர்தலில் நிற்பவர்களல்ல நாங்கள், என்று சொல்லிவிடுங்கள்! பார்ப்பன துவேஷி நீங்கள் என்று சொன் னால், அதற்கு ஆமாம் நாங்கள் இரட்டிப்பு பார்ப்பன துவே ஷிகள் என்று சொல்லவேண்டும்! நம்முடைய மக்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவனுக்குப் புத்திவரச் செய்யவேண்டும் என்று பாடுபடும்போது, பார்ப்பானுக்கு விரோத மானதையெல்லாம் செய்துவிட்டு நான் பார்ப்பன விரோதியல்ல என்றால் என்ன பித்தலாட்டம்? என்று கேட்கிறேன். நாங்கள் அப்படிப்பட்ட பார்ப்பனத் துவேஷியல்ல. பார்ப்பனீயத்தைத்தான் வெறுக் கிறோம் என்றால், அவன் நன்றாய் முளையடித்துக் கொண்டி ருக்கிறான். நாம் சும்மாவா சொல்கிறோம்? அல்லது குறும்புத் தனமாக சொல்கிறோமா? 1000, 2000 வருடமாகப் பார்த்துவிட்டு அவன் கல்லைக் கும்பிடு என்றால் கும்பிட்டு, அவனைச் சாமி என்று கூப்பிட்டு பார்த்துவிட்டுத்தானே சொல்கிறோம். எனக்கு எந்த பார்ப்பானாவது விரோதி என்று சொல்லமுடியுமா?
“பார்ப்பானே வெளியேறு” என்பதே குறிக்கோள்
நாம் எதற்காக இப்படிச் சொல்லுகிறோம். நம்முடைய இலட்சியத்திற்காக சொல்கிறோம். நாம் புத்தகத்திலும் எழுதும்போது “சிவமயம்” என்று எழுதுவதற்குப்பதில் “பார்ப்பானே வெளியேறு” என்று எழுதவேண்டும். இந்த மாதிரி காரியங்களை ஒரு வருடத்திற்கு முன்பே செய்திருந்திருக்க வேண்டும். இந்த கல்வித்திட்டம் வந்து இதை தள்ளிப்போட்டு விட்டது என்றாலும், இதனால் அந்த உணர்ச்சி நன்கு வளர்ந்து விட்டது. ரோஷம் வரையில்தான் அகிம்சை பிரதானம் என்பது; ரோஷம், மானம் வந்துவிட்டால் அன்பு இல்லை, சமாதானம் இல்லை என்று சொல்லுகிற நிலைவரும். அப்போது அவன் உயிர், நம் உயிர் அவ்வளவுதான். இனி எதைக் கொண்டு காரியம் நடக்குமோ அதுதான். அவன் வீட்டுக்கு நெருப்பு வைக்கவேண்டும் என்று சொன்னேனே! சட்டம் இடம் கொடுக்கிறதா என்று பார்த்தா சொன்னேன். இனி காரியம் “பார்ப்பானே வெளியேறு” என்பதுதான். இப்படி “பார்ப்பானே வெளியேறு” என்று ஒவ்வொரு சுவற்றிலும் ஒவ்வொருவர் வீட்டுக் கதவிலும் எழுதித்தள்ள வேண்டும்.
எங்கள் சத்திரத்தை எல்லாம் வந்து பார்த்தால் தெரியும். எங்கள் வீட்டில் கல்யாணம் நடக்கும்போது 2, 3 பார்ப்பனருக்கு தர்மக் கல்யாணம் செய்தோம். ஏன் என்றால் தர்மம் என்பதே சாஸ்திரப்படி அவனுக்குத்தானே சொந்தம்! என்ன செய்தும் பரிகாரம் இல்லாமல் அவன் நம்மைக் கீழாக்கிக்கொண்டே போகிறான்.
பிற்பட்ட வகுப்பினர் நிலை
சாதாரணமாக ஒரு வேளாளன் மந்திரியாக வரமுடியுமா? அவன் பிறவியில் உழுபவன். அப்படிப்பட்டவர்கள் இன்றைய கல்வி மந்திரி. ஒரு படையாச்சி ரெவின்யூ மந்திரி. நான் கேட்கிறேன்,
எங்கேயாவது காங்கிரசில் தீர்மானம் போட்டிருக்கிறார்களா, பறையன் மந்திரியாக வேண்டுமென்று? அதையெல்லாம் தீர்மானம் போட்டது நாம்தான். இந்தத் தீர்மானங்கள் காரணமாக மந்திரியாக வந்தவர்களுக்கு மான உணர்ச்சியில்லை. இன உணர்ச்சியில்லை. நன்றி துளிகூட இல்லை. அவர்கள் பார்ப்பனர்களுக்கு கூலியாகப் போகிறார்கள். ஒரு கவுண்டர் சுப்ரமணியம் மந்திரியாக இருக்கிறார் என்றால் என்ன அதிசயம்? ஒரு ஆதித்திராவிடர் மந்திரியாக இருக்கிறார் என்றால் என்ன அதிசயம் ? அவர்களுக்கு இன உணர்ச்சி இல்லை என்றால் நமக்குக் கவலையில்லை.
இங்கே “பார்ப்பானே வெளியேறு” என்று சொன்னதற்காக 10 ரூபாய் அபராதம் போட்டார்களாம். உடனே என்ன செய்து இருக்க வேண்டும். பலர் சேர்ந்துகொண்டு எல்லா வீடு, கதவு, சுவர் முதலிய வற்றில் எழுதித்தள்ள வேண்டும். அப்படி மீறிப்பிடித்தால் இன்னும் நிறையப்பேர் எழுதித்தள்ள வேண்டும். அப்போது இப்படி யெல்லாம் நிகழாது. நாம் என்ன திருடுகிறோமா? நாம் துணிந்து விட்டால் போதும். உடனே ஓடிவந்து நானும் நீயும் ஒன்று என்பானே! அவன் அவ்வளவு புத்திசாலியாயிற்றே! இல்லாவிடில் நாட்டைவிட்டு ஓடி விடுவானோ! நேரு நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறாராம். அவர் வேறு எதையும் சொல்லமுடியாத நிலையில்தான் இதைச் சொன்னார். அவரிடம் எல்லோரும் போய் சொன்னதற்குத்தான் அவர் பதில் சொன்னார். என்ன பண்ணுவது? அவரைப்பிடித்தால், வெட்டிவிட்டால் என்ன பண்ணுவது என்கிற நிலையில்தான் அவர் இதைச் சொன்னார்.
“நீங்கள் உங்களைப் பிடிக்கும்வரைக்கும், உங்கள் கட்சியை அதிகாரப்பூர்வமாக தடுக்கிறவரைக்கும், நீங்களெல்லாம் சிறையில் தள்ளப்படுகிறவரைக்கும் நீங்கள் “பார்ப்பானே வெளியேறு” என்பதை விடக்கூடாது.
மத எதிர்ப்பு
நம்மை மத எதிர்ப்புக்காரர்கள் என்கிறார்கள். இந்தக் குலக் கல்வித்திட்ட எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்த மாதம் 17-ம்தேதி இன்னொரு சாமியைப் போட்டு உடைத்திருப்போம். மனித சமுதாயத்தில் அன்பை, ஒழுக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமானால் கடவுளை ஒழித்தாகவேண்டும். நம் நாட்டி லிருக்கும் ஆயிரக்கணக்கான கடவுள்களில் எந்த கடவுளிடத்தில் அன்பு இருக்கிறது? அறம் இருக்கிறது ? புத்தி இருக்கிறது? இப்படிப்பட்ட தன்மையில் மனிதனை மனிதன் ஏமாற்றும் நிலை இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? இராசகோபாலாச்சாரி யாருக்கும். கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை. இவ்வளவு பெரியவர் கடவுளுக்கே ஆபத்து என்று சொன்னால் என்ன அர்த்தம்? எப்படி ஒருவனால் முடியும் கடவுள் இல்லை என்று சொல்லுவதற்கு? அப்படி கடவுள் இருந்தால் அது வந்து, என்னடா முட்டாளே! நான் இருக்கும்போது நீ இல்லையென்று சொல்கிறாயே என்று கேட்டிருக்குமே? நம்மேல் ஒருவனை ஏவிவிட வேண்டும் என்றால், அவன் நம்மை மிகப் பெரிய அயோக்கியன் என்று சொல்லுகிறான். எண்டா என்றால் அவன் சாமியில்லை என்பவன் என்கிறான். இந்த சாமிக்கு இருக்கிற உருவம் இருக்கின்றதே, இந்த உருவத்தை, சாமி தன்னுடையது என்கின்றது. அது கல்யாணம் செய்துகொள்கிறதை நீ நிறுத்து, உடனே இந்த நாட்டில் பார்ப்பான் இருக்கிறானா என்று பாரேன். எத்தனையோ காரியத்தின் பேரால் பார்ப்பானுக்கு “கடவுள்” கொடுக்கிறார். இராசகோபாலாச் சாரியாரைக் கேளேன், அவன் பாட்டன் யார் என்று ? அவர் ஒரு புரோகிதர்தானே! நேருவின் பாட்டன் யார்? அவரும் ஒரு புரோகிதன்தானே! ஹைகோர்ட் ஜட்ஜ் முத்துசாமி அய்யர் பாட்டனும் ஒரு புரோகிதன்தானே! 1954-இல் எதற்காக நாம் இந்த மிருகநிலையில் இருக்க வேண்டும்? நம்முடைய மக்களுக்கு சிந்தனை இல்லை; யோசிக்க தன்மையில்லை; பரிகாரம் காண்கிற எண்ணம் இல்லை. சாதியைப் பற்றி என்ன பேசினாலும் அவனை உடனே “பார்ப்பன துவேஷி” என்று சொல்லிவிடுகிறார்கள். கடவுளைப் பற்றிப் பேசினால் அவனை “நாத்திகன்” என்று சொல்லி விடுகிறார்கள்.
பார்ப்பானுக்கு இங்கென்ன வேலை?
நம்முடைய நாடு பரந்த நாடு; எல்லா வசதியும் இருக்கிற நாடு; இந்த நாட்டு மக்கள் ஏன் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக இருக்க வேண்டும் ? சர்வ வல்லமையுள்ள சக்கரவர்த்தியே ஓடிவிட்டான். 650 மகாராஜாக்கள் துரத்தப்பட்டார்கள். ஏராள மான ஜமீன்தார்கள் ஒழிக்கப்பட்டார்கள். இந்த அன்னக்காவடிப் பார்ப்பானுக்கு மட்டும் ஏனய்யா மரியாதை? இது என்ன நியாயம்?
வெள்ளைக்காரன் இருந்தபொழுது நாம் எப்படி இருந்தோம்? அவனால் நாம் நல்ல பயனடைந்திருக்கிறோம். அப்படிப்பட்டவனையே நாம் போ வெளியே என்றோம். அவனும் போய் விட்டான். இந்த நாட்டில் சிரைக்கிற வேலை செய்கிறவன், சட்டி பானை செய்பவன், இப்படியாக உள்ள வர்கள் ஏதாவது ஒன்றை நினைத்தால் அவன் இன்ன தொழில் ஆற்ற இருக்கிறான் என்பதாகத் தெரியும். இந்தப் பார்ப்பான் எதற்காக இருக்கிறான் ? இவன் இந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்திருக்கிறான்? ஆனதனால்தான் நாம் உருப்படியாக வேண்டும் என்றால், “இந்த சூத்திரன், பஞ்சமன் ஒழிய வேண்டு மென்றால், இந்தப் பார்ப்பனப் பூண்டே ஒழியவேண்டும்.
பார்ப்பனர் தந்திரம் இனி பலிக்காது
மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் எங்கேயும் பார்ப்பான் கிடையாது. அவன் ஒழிந்தால்தான் நம்முடைய சமுதாயம் உருப் படும். இது திடீரென்று நான் சொல்லவில்லை. 40 வருடமாக சமுதா யத்துக்கு உழைத்துப் பார்த்துவிட்டுத்தான் இந்த “பார்ப்பானே வெளியேறு” என்கிற செய்திதான் “சர்வரோக நிவாரணி” என்று கண்டுபிடிக்கப்பட்டதாகும். பட்டினி என்றால் அது பார்ப்பானுக்குக் கிடையாது. எந்த தெருவில் பார்ப்பான் அழுகின பிணமாய் கிடந்தான்? ஒவ்வொரு துறையிலும் பார்ப்பனின் தந்திரம் வந்து புகுந்து நம்மை ஒன்றும் முன்னேற ஒட்டாமல் செய்துவிட்டது. இரண்டு வருட ஆட்சியில் ஆச்சாரியார் என்ன செய்தார்?
நம்முடைய 25 வருட உழைப்பையே ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். இதற்குப் பரிகாரம் காண உயிரைத் திரணமாக வைத்துப் பாடுபடவேண்டும்.
நமது வெற்றியின் அளவு
எந்த அளவுக்கு நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், ஒரு மந்திரிகூட பார்ப்பான் இல்லாமல் செய்து விட்டோம். நாளைக்கு என்னாகுதோ அதுபற்றி நமக்கு கவலையில்லை. இந்த நாட்டில் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இதிலெல்லாம் பார்ப்பனர்கள் தலைவர்களாக வரமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்போது பார்ப்பனர்கள் மத்திய சர்க்காரிடம் சொல்லித்தான் தங்களுடைய காரியங்களைச் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. சட்டசபையில் இப் போதுள்ள இரண்டொரு பார்ப்பனர்கள்கூட இனி வரமுடியாது என்று கூறி தனது தலைமை உரையை முடித்தார்கள்.
‘விடுதலை’ 01.06.1954