– பேராசிரியர் எம்.ஆர்.மனோகர்
அரசமைப்புச் சட்டம் முதல்முதலாக அச்சிடப்பட்டா வெளிவந்தது? இல்லவே இல்லை. பசந்த்ராவ் வைத்யா என்ற ஓவியர் கையால் எழுதினார். நந்தலால் போஸ் என்ற ஓவியர் பக்கங்களை அழகுப்படுத்தினார். இது ஹிந்தியில் எழுதப்பட்ட மூலப் பிரதி.
ஆங்கிலத்தில் கையால் எழுதிய கலைஞர் பிரேம் பிஹாரி நாராயண் ரய்ஸாதா. அம்மாடி! எவ்வளவு நீளமானப் பெயர்! இதன் பக்கங் களையும் அலங்கரித்தவர் ஓவியர் நந்தலால் போஸ்தான். இரண்டையும் எழுதி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. 1949 நவம்பர் 26ஆம் நாளன்று அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் பெற்றது தெரிந்த விஷயம். மற்றவை தெரியாத விவரங்கள்தானே?
ஆங்கிலப் பிரதியின் எடை 13 கிலோ. பக்கங்கள் 221. ஹிந்தியில் எழுதப்பட்ட கைப்பிரதியின் எடை 14 கிலோ. பக்கங்கள் 252. கைவினைக் கலைஞர்கள் கைகளால் தயாரித்த காகிதம் பயன்படுத்தப்பட்டதாம். மொராக்கோ தோலால் பைண்ட் செய்யப்பட்டு அட்டைகளில் தங்க முலாம் பூசப்பட்டுள்ள தாம். இவை எப்படிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதைப் பார்ப்போமா?
ரசாயனக் கலவையுள்ள கண்ணாடிப் பேழைகளில் தனித்தனியாக இரண்டு பிரதிகளும் தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டு முதல் அவை அங்கே உள்ளனவாம். எந்த விதத்திலும் சேதமடையாத வகையில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதற்காக நம் நாட்டு விஞ்ஞானிகளும் அமெரிக்க அறிவிய லாளர்களும் அடங்கிய சிறப்புக் குழு கடுமை யாக உழைத்துள்ளது. டில்லியில் உள்ள National Physical Laboratory (NPL). CSIR. GCI . போன்ற அறிவியல் அமைப்புகள் அவ்வப் போது இந்தப் பிரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டுச் செல்கின்றனவாம்.
அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகி றோம். நாங்கள் இப்படிப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள் இவர்கள். பல அறிவியல் அற்புதங்களில் இதுவும் ஒன்று.