கோயிலில் பணியாற்றும் காவலாளி இருக்கையில் அமராமல் தரையில் அமரும் கொடுமை! அதிகாரி களின் அதிகாரப் போக்கு! அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு!
கடந்த வாரம் எங்களது உறவினர் மணவிழா வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. மணவிழா நடப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னதாக சென்றதால் அங்கே கோயில் பணியில் ஈடுபட்டிருக்கும் அர்ச்சகர் பார்ப்பனர்களின் நடவடிக் கைகளை கவனித்தேன்.
அதைப் பார்த்தால் அற நிலையத்துறைக்கு சொந்தமான கோயில் போல் இல்லாமல் பார்ப்பனர் தன் குடும்ப சொத்தை அனுபவிப்பது போல அனுபவித்து வருகிறார்கள். பக்தி வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது. வெளியே வரும் வழியில் கோயில் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காவலர் (செக்யூரிட்டி) சீருடை அணிந்த நிலையில் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். தரையில் அமர்ந்திருந்த காவலாளியிடம் “ஏன் தரையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்? இருக்கையில் அமர்வது தானே?” என்று கேட்டதற்கு நிழற் படத்திற்கு முகம் காட்டவும், பெயர் சொல்லவும் மறுத்த காவலாளி “அய்யா கோவில் காவலாளிகள் இருக்கை போட்டு உட்காரக் கூடாது என்று கோயில் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதற்கு காரணம் இங்கு இருக்கும் அதிகாரம் மிக்க அர்ச்சகர் பார்ப்பனர்கள். காவலாளிகள் இருக்கை போட்டு எங்கள் முன் உட்காரக் கூடாது என கோயில் அதிகாரியிடம் சொல்லுவதால் என்னை மட்டுமல்லாமல் இங்கு வேலை பார்க்கும் அனைவரையும் கீழே தான் அமர வைப்பார்கள்.
அமர வைத்துள்ளார்கள். 10, 12 மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளா, இரண்டு நாளா, தினம் தினம் இப்படிதான் நடத்துகிறார்கள். ஆண்டான் அடிமை போல நடத்துகிறார்கள்” என தன் மன வேதனையை வெளிப்படுத்தினார்.
கோயிலில் பல வசதி வாய்ப்புகளை ஆண்டு அனுபவித்து வரும் பார்ப்பனர்கள், பணம் பார்க்க ஆகம விதி என்று சொல்லிக்கொண்டு அதை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆகம விதி, ஆகம விதி என்று கூப்பாடு போடும் இவர்கள்தான் ஆகம விதிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் வசதிக்காக ஆகம விதியை மீறி பல அறிவியல் சாதனங்களை கோயில் கருவறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
குறைந்த ஊதியம் பெற்று நாள் முழுக்க கால் கடுக்க காவல் காக்கும் காவலாளி இருக்கை போட்டு அமரக்கூடாது என்பது என்ன விதிமுறை? என்ன சட்டம்? என்ன எதேச்சதிகாரப் போக்கு?
ஏதோ இது ஒரு கோயிலில் நடக்கும் செய்தியாகக் கருதாமல் அனைத்து கோயில்களிலும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தங்குவதற்கு இடம் அளிப்பதும், அமர்வதற்கு இருக்கை கொடுப்பதும் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
– அ.தமிழ்ச்செல்வன், தர்மபுரி.