கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அடுத்து, ஆதித்யநாத்தா என்ற குழப்பம், பா.ஜ.க.வில் நெடுநாட்களாக நீடித்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் சாமியார் ஆதித்யநாத், ஒன்றியத்தில் பிரதமராக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மோடியுடன் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருவது வழக்கம்.
காரணம், வளர்ச்சி, சம உரிமை, சமத்துவம், சமூக நீதி என நாட்டின் ஆக்கப்பூர்வ செயல்கள் எவை பற்றியும் கவலைகொள்ளாமல், ஹிந்துத்துவ கொள்கைகளை முன்னிறுத்தி, இஸ்லாமிய எதிர்ப்பை விதைப்பதே மோடி மற்றும் ஆதித்யநாத்தின் தாரக மந்திரமாக அமைந்துள்ளது.
மோடியும் சரி, சாமியார் ஆதித்யநாத்தும் சரி, ஆர்.எஸ்.எஸ்-இல் தங்களது இளமைக் காலங்களை கழித்தவர்கள். ஆனால், மோடி காவி போடாத ஹிந்துத்துவவாதி.
சொல்லப்போனால், மோடியை விட பல விதத்தில், ஆதித்யநாத் ஆபத்தானவர். அதற்கு, உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கொடூரங்களே உதாரணமாகவும் இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாமியாராக இருக்கும் ஆதித்யாநாத், எவ்வாறு நடுநிலைத்தன்மையுடன் இருக்க இயலும்? அனைத்து மத முறைகளையும் எவ்வாறு சமரசமாக கையாள முடியும் என்ற கேள்விகள் எழாதா?
அதற்கான சரியான விடையை சில நாட்களுக்கு முன்பு அவரே தனது பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி யுள்ளார்.
“பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டது போல, மோடி ஆட்சி மீண்டும் வந்தால், மதுரா மசூதி இடிக்கப்பட்டு கிருஷ்ணர் கோவில் கட்டி எழுப்பப்படும்” என அவரே சர்வாதிகார, அதிகாரத்துவ கருத்தை வெளிப்படையாகவே பேசினார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்கிற நிலை யிலும், ஒரு குறிப்பிட்ட மத ஆலயத்தை இடித்துத் தான், மற்றொரு மத ஆலயத்தை நிறுவ வேண்டும் என்கிற எண்ணம், அச்சமூட்டும் அபாயகரமான அறிவிப்பு இல்லையா?
இது போன்ற ஆட்சியைக் கண்டு தான், தற்போது உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, “ஆதித்யநாத்தைப் பார்த்து, மற்ற முதலமைச்சர்கள் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற சர்ச்சைக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது போன்ற ஆட்சி தான் நிறுவப்பட வேண்டும் என்றால், மோடி கூறியது போல, பொது வாழ்வில் இருக்கவே இவர்கள் (மோடி, ஆதித்யநாத்) தகுதி உடையவர்கள் தானா?
கோயில்களை இடிப்பதும் கட்டுவதும்தான் ஓர் அரசின் வேலையா?
இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின்மையை வலியுறுத்துகிறது. அதன்மீது உறுதி சொல்லிதான் குடியரசு தலைவர், பிரதமர், ஒன்றிய மாநில அமைச்சர்கள், முதல் உறுப்பினர்கள் வரை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
மதச் சார்பின்மை என்பதன் பொருள்- அரசுக்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை என்பதுதான் இந்த அடிப்படையைக்கூட அறிவியாதவர்களா இவர்கள்? தெரிந்தே தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், மக்கள்தான் வாக்குச் சீட்டு மூலம் இவர்களைத் தண்டிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் இது நடக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.